ஜூலை 18, 2009 அன்று கண்ணொளி வழங்கும் அமைப்பான விஷன் எய்டுக்கு நிதி திரட்டும் பொருட்டு போஸ்டன் மாநகரின சொரேன்சென் கலையரங்கில் 'கிருஷ்ணா' நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது. 'நாட்ய கலாதர' மதுரை முரளீதரனின் கைவண்ணத்தில் உருவான இந்த நிகழ்ச்சியில் ஹேமா ஐயங்கார், ஜெயந்தி கட்ராஜூ, ரஞ்சனி சைகல், பூர்ணிமா ரிஷ்புத், மங்கை கோபாலன், அமுதா பழனிசாமி, கிருதி ராவாலியா, வைஜயந்தி பிரசாத், சாச்சி ரிஷ்புத், அனன்யா மகாலிங்கம் திங்க்ரா, அபிராமி மணியன், அனிருத் நகேஷா, ஷரயு மஹாலே, இரா பத்யே, பல்லவி நகேஷா, சுஜாதா மெய்யப்பன், சங்கீதா ரகுநாதன், பூர்ணிமா சூர்யா, இந்திரா ராஜசேகர், ஹரிணி ராஜசேகர், ரங்கப்ரியா ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களில் பலர் நடன ஆசிரியைகள்; சிலர் அரங்கேறியவர்கள்; இன்னும் சிலர் அரங்கேறும் நிலையில் உள்ளவர்கள். இப்படியொரு மாறுபட்ட திறமையுடையவர்களை ஒன்றுபடுத்தி அவர்களின் நடனத் தேர்ச்சியைப் பரிமளிக்கச் செய்து ஒரு காவியம் படைத்துவிட்டார் முரளீதரன். எண்ணம், எழுத்து, நடன அமைப்பு, காட்சி அமைப்பு, இயக்கம் எனப் பல பொறுப்புக்களையும் ஏற்று, காணக் கிடைக்காத அற்புதத்தை அவர் நிகழ்த்திவிட்டார். நடன ஆசிரியையும் பங்கேற்ற நடனமணியும் ஆன ஜெயந்தி கட்ராஜூவின் தலைமையில் குழுவினர் அவருக்கு முழு ஒத்துழைப்பை நல்கினர்.
துவக்கக் காட்சியே பிரம்மாண்டம். பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் சயனக் கோலம். பின்னணியில் அரங்கனது அவதார நோக்க பிரவசனம். அடுத்து வந்த காட்சிகள் எல்லாமே பரவசந்தான். அதுவும் கம்சன் மணமக்களைத் தேரில் அழைத்துச் செல்லும். காட்சியில் மேடையில் ரதம் ஓடியதை ரசிகர்கள் உணர்ந்தார்கள். அந்த அளவுக்குப் பாத்திரங்கள் நடிப்பு, ஒலி-ஒளி சேர்க்கை தத்ரூபம். தொடர்ந்து வந்த காட்சிகள் தொய்வின்றிச் சென்றன. கம்சன் பெண்சிசுவை கொல்ல வெளிப்படுத்திய கொடூரம், அவன் கையிலிருந்து தப்பிய சிசு காளியாக மாறி அவனை எச்சரிக்க ஆடும் ஆவேசத் தாண்டவம், பொங்கிவரும் யமுனை நதி வசுதேவருக்கு வழிவிடும் காட்சி, மண்ணைத் தின்ற மாயன் தன் வாயில் ஈரேழு லோகங்களையும் காட்டியபோது யசோதா முகத்தில் பளிச்சிட்ட பரவசம் என எண்ணற்ற காட்சிகளின் நேர்த்தியைப் பாராட்டிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். நிகழ்ச்சியின் சிறப்புக்குத் தேர்ந்த பின்னணி இசையும் ஒரு காரணம்.
இதன் சூத்திரதாரி முரளீதரன் பாஸ்டன் ரசிகர்களைத் தனது படைப்பால் கட்டிப் போட்டார் என்றால் மிகையல்ல.
சங்கரையா ராமமூர்த்தி, வெஸ்ட்ஃபோர்ட், மாசசூஸட்ஸ். |