ஜூலை 18, 2009 அன்று செல்வி விநித்ரா மணியின் பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை நாரத கான சபா நிகழ்த்தும் 'நாட்யாரங்கம்' வரிசையில் நடைபெற்றது. விநித்ரா, குரு திருமதி வித்யா சுப்ரமணியன் அவர்களின் பிரதம மாணவியருள் ஒருவர் என்பதோடு UCB-யில் இரண்டாம் ஆண்டு உயிரியல்-பொறியியல் (BioEngineering) மாணவியும் ஆவார். இவர் பல்கலைக்கழக இந்திய நவீன இசைக்குழுவிலும் பங்கேற்கிறார்.
பரத சம்பிரதாய நடையில் கம்பீர நாட்டையில் மல்லாரியுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதைத் தொடர்ந்து கஜமுகனையும் சதாசிவனையும் வேண்டும் இரட்டை இறை வணக்கமாக 'சதாசிவன் மைந்தனே' என்ற மகாராஜபுரம் சந்தானத்தின் ஹம்சத்வனி கீர்த்தனைக்கு விறுவிறுப்பாக ஆடினார். மதுரை முரளிதரனின் லதாங்கி ராகக் 'கொஞ்சும் சலங்கை’ என்ற அழகுமிகு வர்ணம் நிகழ்ச்சியின் பிரதான ஆடலாக அமைந்தது. விநித்ரா தனது நிருத்த, நிருத்யத் திறமைகளை இவ்வாடலில் செவ்வனே வெளிப்படுத்தினார். வர்ணத்தையடுத்து சாத்வீக நடையில் இரண்டு பதங்கள் தொடர்ந்தன: தஞ்சாவூர் சங்கர ஐயர் இயற்றிய 'ரஞ்சனிமாலா'விலும் (ராகமாலிகை/ஆதி); அதையடுத்து முத்துத்தாண்டவரின் (கமாஸ்/ரூபகம்) 'தெருவில் வாரானோ' பதத்திலும் விநித்ரா தனது பாவ அபிநய முத்திரைகளை நன்கு வெளிப்படுத்தினார். நிகழ்ச்சி டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் கதனகுதூகலத் தில்லானாவுடன் குதூகலமாக நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குரு திருமதி வித்யா சுப்ரமண்யம் (நட்டுவாங்கம்), திருவாளர்கள் ஹரிப்ரசாத் (வாய்ப்பாட்டு), சிகாமணி (வயலின்), கலைமாமணி நெல்லை.D கண்ணன் (மிருதங்கம்), சசிதர் (குழலிசை) ஆகியோர் நேர்த்தியான பின்னணி கொடுத்தனர். |