BATM முத்தமிழ் விழா
ஜூலை 19, 2009 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முத்தமிழ் விழாவை சான் ரமோனில் உள்ள விண்ட்மியர் ரான்ச் நடுநிலைப்பள்ளி அரங்கில் கொண்டாடியது.

முதலில் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற தலைப்பிலான கவியரங்கம் திரு. 'சிலம்பொலி' செல்லப்பன் ஐயா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருமிகு சுப்ரமணியம், விஸ்வநாதன், பழனிசாமி, இளங்கோ, ஜெயக்குமார் ஆகியோர் அருமையான கவிதைகளை வாசித்தனர். அதிலும் இளங்கோ தெளிவான தமிழ் உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்களுடன் வேற்றுமை, ஒற்றுமை என்று அடுக்கிய விதம் அருமை. ஜெயக்குமாரின் கவிதையில் தேர்ந்த கவிஞரின் ஆளுமை தெரிந்தது.

'தாயகம் திரும்புவதில் முனைப்பாக இருப்பது ஆடவரா? பெண்டிரா?' என்ற தலைப்பில் திருமதி உமையாள் முத்து அவர்கள் தலைப்பில் ஒரு சிறப்பான பட்டிமன்றம் நடைபெற்றது. துவக்கப் பேச்சாளர் முஸ்தஃபா, ஆண்கள் படும் சிரமத்தை நகைச்சுவையாக விளக்கியது அருமை. கோவிந்த் கூறிய தன் செலவுகளுக்கு மேல் சம்பாதிக்கும் கணவனைத் தேர்ந்தெடுக்கும் பெண் புத்திசாலி போன்றவை சுவை கூட்டின.

பந்தா இல்லாமல் வந்து போனார் பாகீரதி சேஷப்பன்; தன் பேச்சில் துணைவரைத் துணைக்கு அழைத்து துவைத்துப் போட்டார் பாகீரதி. இயல்பாகப் பேச ஆரம்பித்து, உணர்ச்சிப் பிழம்பாகக் கருத்துக்களை எடுத்துரைத்தார். ராமன் செல்லும் இடத்திற்குத்தான் சீதை செல்வாள் போன்றவை அருமை.

உமா மகேஷ்வரி, சேஷப்பனை வம்புக்கு இழுத்து, மணிமணியாகப் பேசி மணியையே மறந்தார். தலைப்பிலேயே பெண் இருக்கிறாள் (தாயகம்), தாய்வீட்டுடன் தொடர்பில் அதிகம் இருப்பவர்கள் பெண்கள், பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர்கள் ஆண்கள் என்று அவர் நடுவருக்கு அளித்த பதில்கள் அருமை. ரவி, மிகவும் நக்கலாக ஓர் இறுதிப் பேச்சாளருக்குரிய இலக்கணத்தோடு பேசினார். தாயகம் திரும்ப ஆடவரே அதிகம் முனைப்பாக இருப்பதாகப் பேசினார். ராஜா, அவருடைய முத்தான வார்த்தைகளால் பார்வையாளர்களை மட்டும் அல்லாமல் நடுவரின் முடிவையும் தன் பக்கம் கொண்டு போய்விட்டார் என்றால் மிகையல்ல. தன்னுடைய சொல்லுக்கும், லொள்ளுக்கும் நடுவரையும் விட்டு வைக்கவில்லை இவர். தாயகம் திரும்புவதில் முனைப்பாக இருப்பது பெண்டிரே என்று நடுவர் திருமதி உமையாள் முத்து, ஆணித்தரமாக பட்டிமன்றத் தீர்ப்பை அளித்தார்.

பின்னர் வந்தது இலக்கிய விருந்து. 'சங்க இலக்கியத்தில் உள்ள எளிமை' என்ற தலைப்பில் பேசிய, மின்னணுத்துறை வல்லுநர், முன்னாள் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர். இளங்கோ அவர்களின் தமிழ் ஆர்வம், இலக்கிய சிந்தனை எல்லோரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

'தமிழ் இலக்கிய வளர்ச்சி - அன்றிலிருந்து இன்று வரை' என்ற தலைப்பில் பேசிய கலைமாமணி திரு. சிலம்பொலி செல்லப்பன் ஐயா, 82 வயதிலும் தனது பேச்சுத் திறத்தாலும், சொற்சுவையாலும், தமிழ்மொழி ஆளுமையாலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

நடுவர் திருமதி உமையாள் முத்து அவர்களின் பேச்சைத் திரு. அண்ணாமலை வீட்டில் கேட்டபோதுதான் 'அடடா, நாம் தமிழில் படிக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறதே' என்று எண்ணத் தோன்றியது. நாமென்னவோ பொன்னியின் செல்வன், அர்த்தமுள்ள இந்துமதம், சுஜாதா, பாலகுமாரன் நாவல்கள் படித்தால் போதுமென இருந்து விட்டோமே, இன்னும் புறநானூறு, அகநானூறு போன்ற எண்ணற்ற தமிழ் நூல்களை எல்லாம் நம் காலத்துக்குள் படிக்க இயலுமா என்று மலைத்துப்போகும் அளவுக்கு அருமையாக இருந்தது அவரது உரை.

அடுத்து மெல்லிசை வழங்க வந்தனர் ஸ்ரீதர் மைனர், ஸ்ருதி. காலத்தால் வண்ணம் மங்காத 'ரோஜா மலரே' பாடலை இருவரும் வெகு அழகாகப் பாடினர். தமிழ்மன்றத் தலைவர் திரு. லேனா கண்ணப்பனின் உடனடி அழைப்பை ஏற்று ஓர் அருமையான நாட்டுப்புறப் பாடலையும் பாடி மகிழ்வித்தார் ஸ்ரீதரன் மைனர். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் நாட்டுப்புறப் பாடலை ஸ்ரீதரின் கணீர் குரலில் எத்தனை முறை பாடினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

திரு. ஜோதி கண்ணன் நமது நாட்டுப்புற வீர விளையாட்டான சிலம்பாட்டம் பற்றி அரிய தகவல்களைக் கூறினார். எவ்வளவோ வேலைகள், வகுப்புகள் இருந்தாலும் அதை எல்லாம் சமாளித்து 3 நாட்கள் 6 பேர் அவரிடம் சிலம்பம் கற்றுக்கொண்டது மறக்க முடியாதது. அந்த 6 பேரையும் மேடையேற்றியது ஜோதி கண்ணன் அவர்களின் பெருந்தன்மையைக் காட்டியது.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜே.பி. ப்ரான்சிஸ் தொகுத்து வழங்கினார். விழாவின் வெற்றியில் முக்கியப் பணியாற்றிய தமிழ்மன்றத் தலைவர் லேனா கண்ணப்பன், உறுப்பினர்கள் சோலை, சரவணன், மெனா உடையப்பன், வேதா நாரயணன், லதா ஸ்ரீதரன் ஆகிய அனைவருக்கும் பெரும் பங்கு உண்டு.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பான 'பொன்னியின் செல்வன்' சரித்திர மேடை நாடகம் நவம்பர் மாதத்தில் அரங்கேற உள்ளது.

இணையதளம்: www.bayareatamilmanram.org

லேனா. கண்ணப்பன்

© TamilOnline.com