இலக்கியா, ஹம்சா பரதநாட்டிய அரங்கேற்றம்
ஜூலை 25, 2009 அன்று ஸாரடோகா மெக்கஃபி அரங்கில் ஸ்ரீக்ருபா டான்ஸ் அகாடமி மாணவிகள் இலக்கியா கந்தசாமி, ஹம்சா கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. சிரித்த முகத்துடனும் அபரிதமான தன்னம்பிக்கையுடனும் இருவரும் ஆடிய விதம் குரு விஷால் ரமணியின் திறமையான பயிற்சியை வெளிக்காட்டியது. வசந்தா ராக புஷ்பாஞ்சலி, ஸாரங்கா ராக கணேச வந்தனம், கீரவாணி ராக ஜதிஸ்வரம், அட தாள மதுரை முரளீதரனின் வர்ணம், அம்புஜம் கிருஷ்ணாவின் காபிராக ‘அரவிந்தப் பாதமலர்', ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் சிம்மேந்திர மத்யம ராக ‘அசைந்தாடும் மயிலொன்று', மகாகவி பாரதியாரின் ‘சிவசக்தி' பாலமுரளி கிருஷ்ணாவின் பிருந்தாவன ஸாரங்கா ராகத் தில்லானா என ஒவ்வொரு உருப்படியும் பலே, சபாஷ் என்ற பாராட்டுகளோடு, பலத்த கைதட்டல்களையும் பெற்றது.

'அரவிந்தப் பாதமலர்' பாடலுக்கு இலக்கியா காட்டிய பக்தி பாவம், தாள கச்சிதம் அற்புதம். ஹம்ஸாவின் ‘அசைந்தாடும் மயிலொன்று' பாடலில் அழகான, அளவான பாவ நேர்த்தியும், சுழன்றாடிய லாவகமும் மனதைக் கொள்ளை கொண்டன. 'சிவசக்தி' பதத்தை இருவரும் ஆடிய விதம் மனதில் நின்றது. வாசுதேவனின் நட்டுவாங்கம், முரளி பார்த்தசாரதியின் பாட்டு, தனஞ்செயனின் மிருதங்கம், வீரமணியின் வயலின் என்று பக்கவாத்தியங்கள் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன.

ஜெயஸ்ரீ ராஜா, கேம்பெல், கலி.

© TamilOnline.com