கடந்த மாதம் ஆகஸ்ட் 5ம் தேதி குமாரி மானஸியின் அரங்கேற்றம் Thousand Oaks Civic Art Plaza ல் விமரிசையாக நடைபெற்றது.
இந்த அரங்கேற்றத்தில் காவடிசிந்து ஒன்றைத் தவிர மற்ற யாவும் அனேகமாக மானஸியின் தாய்மொழியான மராட்டியில் இருந்தது மிகச் சிறப்பு அம்சம்.
அதிலும் அபூர்வமான அந்த ஆனந்தபைரவி வர்ணம் ஸ்ரீதியாகராஜர் காலத்தில் ஆண்ட சரபோஜி மகாராஜாவால் இயற்றப்பட்டது. அர்த்தபூஷ்டியுடனும், ஜதிகளுக்கு ஏற்ப ஸ்வர கோர்வைகளும் மெருகு ஏற்றப்பட்டு, மானஸி அந்த வர்ணத்துக்கு தளராமல் ஆடியது நினைவில் நின்றது. 'காவடிசிந்து' பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லித் தான் ஆக வேண்டும். முருக பக்தர்கள் பக்தியுடன் மெய்மறந்து ஆடுவது போல் ரொம்ப அழகாக குரு பத்மினி வாசனின் 'கோரியா கிராபி' இருந்தது. அவரது திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
பதினைந்து வருடங்களாக அஷ்டபதியை பாட வேண்டும் என்கிற ஆசையை பரமேஸ்வரன் பிசிறில்லாமல், வினோத்தின் வயலின், கிருஷ்ணகுமாரின் மிருதங்கத்துடன் பாடியது சிறப்பு. சிந்துபைரவியில் ஆஷபோன்ஸ்லே பாடியுள்ள மராட்டி பாட்டும், பிருந்தாவனியில் தில்லானாவும் அழகுக்கு அழகுகூட்டின.
புதுமையான இனிய அனுபவத்துடன் மானஸியின் அரங்கேற்ற நிகழ்ச்சி அமைந்தது. |