ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தின் நாட்டிய நாடகம்
ஆகஸ்ட் 8, 2009 அன்று, சான்டா க்ளாரா மிஷன் கலையரங்கில் ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தினர் 'Yagna & Yathra' என்ற நாட்டிய நாடகம் ஒன்றை நடத்தினர். குரு விஷால் ரமணியின் நேர்த்தியான ஆங்கில விளக்க உரையுடன் மாணவிகள் ரம்யா, அனு, அஞ்சலி ஆடியது, மூன்று மயில்கள் ஆடுவது போலத் தோன்றியது.

பாபநாசம் சிவன் அருளிய ‘இல்லை என்ற சொல் மட்டும்' பாடலை வெகு அருமையாகப் பாடிய முரளி சாரதியையும், அதற்கேற்ப நடனமாடிய நாட்டிய மணிகளையும் பாராட்டியே ஆக வேண்டும். அதேபோன்று தியாகராஜரின் ‘ஏதிஜன்ம மிது' பாடலுக்கு அவர்கள் ஆடிய நடனம் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது.

'ஆலிலை மேல் ஒரு அழகிய பாலகன்' என்ற கருத்து மிக்க பாடலை, நடனத்திற்கேற்றாற் போல் இயற்றிய அசோக் சுப்ரமணியம் பாராட்டிற்குரியவர். தசாவதாரம், பிரகலாதன் கதை, குசேலன் கதை என அனைத்துமே சிறப்பாக இருந்தன. அதற்கு நட்டுவாங்கமும், மிருதங்கமும், வயலினும் சிறப்பாக ஒத்துழைத்தன. அமிர்தவர்ஷினியில் அமைந்த ‘ஒரு பிடி அவல்' பாடலுக்குப் பல நுட்பங்களை வெளிப்படுத்திய விதம் அருமை. ‘தில்லானா' மிக விறுவிறுப்பு. புதுவிதமான மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

தேவி ஜகா, சான் ஹோஸே

© TamilOnline.com