ஆகஸ்ட் 15, 2009 அன்று திருமதி ஹேமா ராஜகோபாலனின் மாணவி அம்பிகா முரளியின் அரங்கேற்றம் சிகாகோவிலுள்ள எல்ஜின் கம்யூனிடி கல்லூரியில் நடந்தேறியது.
ஜி. விஜயராகவன் இயற்றிய ஹம்ஸநாத ராகப் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பாபநாசம் சிவனின் ‘கருணை செய்வாய்' கீர்த்தனைக்கும், தண்டாயுதபாணிப் பிள்ளையின் ‘மோஹமாகினேன்' என்ற வர்ணத்துக்கும் அழகாக அபிநயம் பிடித்தார் அம்பிகா. வர்ணத்தில் பக்தியையும், தாபத்தையும் அம்பிகா சிறப்பாகச் சித்திரித்திருந்தார்.
அடுத்து வந்த ‘ஏன் பள்ளி கொண்டீரையா' நடனத்தில், ரங்கநாதர் என்ன காரணத்தினால் பள்ளி கொண்டிருக்கிறார் என்று அம்பிகா ஆராய்ந்தது பார்த்தது அழகாக இருந்தது. பாரதியாரின் ‘திக்குத் தெரியாத காட்டில்' நடனத்தில், வழி தெரியாமல் காட்டில் தவிக்கும் ஒரு சிறுமி போலக் கண்ணனைத் தேடி உருகியது மனதைத் தொட்டது. கனம் கிருஷ்ணய்யரின் ‘யாருக்காகிலும் பயமா', அருணகிரிநாதரின் ‘ஏட்டிலே வரை பாட்டிலே' ஆகியவைக்கான நடன்ங்கள் வெகு அழகு. குருவின் நடன வடிவமைப்பு சிறப்பாக இருந்தது. தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார் கிருத்திகா ராஜகோபாலன். திருமதி சுசீலா ராமசாமி (குரலிசை), டி.எஸ். சங்கரன் (புல்லாங்குழல்), ஜி.விஜயராகவன் (மிருதங்கம்), ஸ்ரீகாந்த் வெங்கட்ராமன் (வயலின்) மற்றும் ஹேமா ராஜகோபாலன் (நட்டுவாங்கம்) ஆகியோர் நிகழ்ச்சிக்கு சிறப்புச் சேர்த்தனர். நானூறுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
மேலும் விவரங்களுக்கு: www.natya.com
மீனாக்ஷி சுப்ரமணியம், சிகாகோ |