வருணிகா ராஜாவின் 'Timeless Journey'
ஆகஸ்டு 16, 2009 அன்று வருணிகா ராஜாவின் 'Timeless Journey' நடன நிகழ்ச்சி ஹிஸ்டாரிக் ஹூவர் அரங்கில் குரு விஷால் ரமணியின் முன்னிலையில் நடந்தேறியது. கலையும் பக்தியும் காலத்தால் அழிக்க முடியாதவை என்பதைக் கருவாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் குரு விஷால் ரமணியின் கற்பனைச் சிறப்பையும் அழகான நடன அமைப்பையும் வருணிகாவின் நடனத்தில் காண முடிந்தது.

ஸரஸ்வதி ராக புஷ்பாஞ்சலி, ஆரபி ராக கணேச வந்தனத்துடன் ஆரம்பித்தது இந்த நிகழ்ச்சி. ‘சகியே இந்த ஜாலம் செய்யாமல்' (தோடி), அருணாசலக் கவிராயரின் ‘ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாபநாசம் சிவனின் ‘காண வேண்டாமோ' (ஸ்ரீரஞ்சனி), ஊத்துக்காடு வேங்கட ‘சுப்பையரின் காளிங்க நர்த்தனா' தில்லானா ஆகியவை சிறப்பாக அமைந்திருந்தன. நிகழ்ச்சியின் நிறைவான ஆண்டாள் திருப்பாவையான ‘வாரணம் ஆயிரத்தில்' பக்திரசம் சொட்டியது.

பிரமிக்கத்தக்க வேகமும், அபிநயமும் கொண்ட வருணிகாவை ஓர் தேர்ந்த கலைஞர் என்றால் மிகையாகாது. இந்நிகழ்ச்சி குரு விஷால் ரமணியின் பயிற்சிக்கு மற்றொரு முத்திரைக் கல்.

ஷோபனா சுஜித்குமார், சான் ஹோசே, கலி.

© TamilOnline.com