ஆகஸ்ட் 23, 2009 அன்று ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனியின் வருடந்திரக் கலைவிழா சரடோகா மகாஃபீ அரங்கில் நடைபெற்றது. திரு. அசோக் சுப்ரமணியத்தின் கர்நாடக இசையோடு நிகழ்ச்சி தொடங்கியது. சாவேரி ராகக் கீர்த்தனை, மைசூர் வாசுதேவாசாரின் ‘வந்தே நிஷமம்' (ஹம்சத்வனி), சுபபந்துவராளியில் ‘சத்யா நாராயண', மைசூர் மகாராஜாவின் ‘துர்கா தேவி' என எல்லாமே செவிக்கு அமுதம். பக்கவாத்தியம் வாசித்த வாசுதேவன் (மிருதங்கம்), வீரமணி (வயலின்) ஆகியோர் உறுதுணையாக அமைந்தனர்.
குரு விஷால் ரமணி அவர்கள் அவ்வையாரின் ‘பாலும் தெளிதேனும்' பக்திப் பனுவலோடு நடன நிகழ்ச்சியை ஆரம்பித்தார். அசோக் சுப்ரமணியத்தின் அம்ரிதவர்ஷினி ராகப் புஷ்பாஞ்சலி மற்றும் குரு கல்யாணசுந்தரம் பிள்ளையின் காம்போஜி வர்ணம், பூர்விகல்யாணியில் பாபநாசம் சிவனின் ‘க்ஷீரசாகர சாயீ' எல்லாவற்றிலும் ஸ்ரீக்ருபாவின் முத்திரை.
சங்ககாலக் கவிஞர் உலோச்சனார் பாடலுக்கு விஷால் ரமணியின் அபிநயம் கைதட்டலைப் பெற்றது. நடனநிகழ்ச்சிக்கு முரளி பார்த்தசாரதி பாட, வாசுதேவன் நட்டுவாங்கம் கூற, தனம்ஜயனின் மிருதங்கமும் வீரமணியின் வயலினும் களைகூட்டின.
இந்த வருடாந்திர நிதிதிரட்டும் விழாவுக்கு ஆதரவு நல்கியோருக்கும் பிறருக்கும் குரு விஷால் ரமணி நன்றி கூற நிகழ்ச்சி நிறைவெய்தியது.
ராஜா ரங்கநாதன், கூபர்டினோ, கலி. |