செப்டம்பர் 2009: வாசகர் கடிதம்
தென்றல் ஆகஸ்ட் இதழில் முடிவு பெற்ற வற்றாயிருப்பு சுந்தர் அவர்களின் 'மூன்றாண்டுகளுக்குப் பிறகு' தொடர் மிக நன்றாக இருந்தது. பொதுவாக இந்தியா சென்று வருபவர்கள் அங்கு நுனிப்புல் மேய்வது போலப் பார்த்துவிட்டு வந்து இந்தியா ஒளிர்கிறது, மிளிர்கிறது என்றெல்லாம் சொல்வது, எழுதுவது வழக்கம். ஆனால் சுந்தர் எல்லாவற்றையும் ஆழமாய்ப் பார்த்து உணர்ந்திருக்கிறார். ஆகையால் அங்கேயிருக்கும் அவலநிலைகளை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டார். அவர் எழுதியிருப்பது அத்தனையும் சுத்தமான உண்மை. அடுத்து வரும் ஆண்டுகளில் மக்களும் அரசும் விழித்துக் கொண்டு அதிரடியாக ஏதாவது செய்தாலன்றி சில பல ஆண்டுகளில் இந்தியா ஒரு குப்பை நாடாக மாறுவதைத் தடுக்க முடியாது. வற்றாயிருப்பு சுந்தரின் எழுத்தில் நகைச்சுவை ஒளிர்கிறபடியால், அவர் தொடர்ந்து தென்றலில் எழுதினால் நான் மகிழ்வேன்.

எஸ்.மோகன்ராஜ், நியூயார்க்

*****


அமெரிக்கா வந்த இடத்தில் இப்படி ஒரு சிறந்த தமிழ்ப் பத்திரிகையைப் படிக்க முடியும் என்று கனவிலும் எண்ணவில்லை. எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். இப்படித் தரமுள்ள ஒரு பத்திரிகை அயல்நாட்டில் நடத்த முடிவதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இதில் வெளிவரும் ஒவ்வொரு சிறுகதையும் முத்திரைக் கதையே. சமீபத்தில் வெளியான 'என் காது செவிடான காரணம்' பிரபல எழுத்தாளர் ஓ ஹென்றி முத்திரையுடன் அமைந்திருந்தது. ஒவ்வொரு பகுதியும் மனதைக் கவரும் விதத்திலும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அமைந்துள்ளது. வற்றாயிருப்பு சுந்தர் கட்டுரைகள் யதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்டின. தாய்நாட்டில் மறைந்து விட்ட தமிழ்ப் பத்திரிகைத் தரத்தை அயல்நாட்டில் கண்ட மகிழ்ச்சி, 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்ற எண்ணத்தை உடைத்தெறிகிறது.

நிர்மலா ராமச்சந்திரன், சான்டா க்ளாரா

*****


ஆகஸ்ட் தென்றல் இதழில் பல சுவையான அம்சங்கள் நிறைந்திருந்தன. அமெரிக்கா முழுவதிலும் பரவியிருக்கும் தமிழர்கள் குறித்த செய்திகளையும் கருத்துக்களையும் தரும் ஒரே இதழ் தென்றல்தான். அதில் வரும் விளம்பரங்கள்கூட மிகவும் பயனுள்ளவை. வற்றாயிருப்பு சுந்தர் எழுதி வந்த 'மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு' தொடரின் இறுதிப் பகுதி மனதைத் தொடுவதாக இருந்தது.

நெல்லை திருமலைராஜன், பிளசண்டன், கலி.

*****


ஜெயமோகன் நேர்காணலில் அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் நடிகைகளை, திரைப் பிரபலங்களைக் கூப்பிட்டு விழா நடத்தியதைப் பற்றிச் சொல்லியிருந்தது சரியானதே. அந்த அளவு தமிழர்கள் நட்சத்திரங்களை தேவதைகள் போலவும், யாருமே அணுக முடியாதவர்கள் போலவும் ஒரு போதையை உண்டாக்கி உள்ளனர். அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தாம் என்பதை உணராமல் அவர்களைக் கடை திறக்க அழைப்பதும், திருமணங்களில் அவர்கள் கையால் தாலி எடுத்துக் கட்டிக் கொள்வதும் - கடவுளுக்குக்கூட இவர்கள் சாமி கும்பிட வந்தால் அடுத்த மரியாதைதான்.

கடந்த சில வருடங்களாக பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளில் மட்டும் இல்லாமல் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவற்றிலும் இவர்கள் ஆக்கிரமிப்பைச் சகிக்க முடியவில்லை. நடிக, நடிகையர்கள் தியாகச் செம்மல்களின் வழித் தோன்றல்களா என்ற சினம் தோன்றுகிறது. ஆனால் மாயச்சூழலில் அகப்பட்டு, அவர்கள் வரும் இடமெல்லாம் கூடி அவர்களையெல்லாம் கடவுளுக்குச் சமமாக நினைக்கும் ரசிகர்கள் மத்தியில் சாமான்யர்கள் என்ன செய்ய முடியும்? விளக்கை நோக்கிப் போகும் விட்டில் பூச்சிகள் போல அழியும் ரசிகப் பெருமக்களை யார் வந்து காப்பாற்ற முடியும்?

ஜயலக்ஷ்மி சேஷாத்ரி

*****


ஆகஸ்ட் தென்றல் இதழில் ஜெயமோகன் நேர்காணல் நன்றாக இருந்தது. அவர் உண்மைகளை வெளிப்படையாகச் சொல்கிறார். அது கொஞ்சம் கசக்கத்தானே செய்யும். தியாகராஜ உற்சவம் நடக்கும் போதுதான் சங்கீத வித்வான்கள் திருவையாறுக்கு தலையைக் காட்டுகிறார்கள். அதன்பின் அங்கு யாரும் எட்டிப் பார்ப்பதில்லை. தியாகையர் குடியிருந்த வீடு அப்படியே பழமையுடன் பாதுகாக்கப்படுவதற்கு பதிலாக அடுக்குமாடிக் கட்டிடம் போல் ஆகிவிட்டது.

'பாரிஸூக்குப் போனோம்' கட்டுரையில் திருமதி சி.கே.கரியாலி அவர்கள் 'ப்ரெஞ்சுக்காரப் பயணிகள் தங்களுடன் பிரெஞ்சு மொழியில் தான் பேச வேண்டுமென்று விரும்புகின்றனர். ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் பதில் சொல்வதில்லை’ என்று எழுதியிருந்தார். 1960ல் நான் பாரிஸூக்குச் சென்றபோதும் இதே சிரமம்தான். நாம் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். அவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க நான் ஒரு புது வழியைக் கண்டுபிடித்தேன். அவர்களிடம் நேராக தமிழில் பேசி விடுவேன். உடனே அவர்கள் இவனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை, இவன் ஆங்கிலம் படிக்கவில்லை என்று மகிழ்ச்சியடைந்து, நம் மீது இரக்கப்பட்டு ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார்கள்.

வற்றாயிருப்பு சுந்தரின் 'மூன்றாண்டுகளுக்குப் பிறகு' கட்டுரை யதார்த்தமாக இருந்தது.

இந்தியாவிலும் எவ்வளவோ செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அமெரிக்காவில் செய்வது போல் எதையும் உடனே செய்து விட முடியாது. அமெரிக்காவில் கூட தண்ணீர் பஞ்சமும் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதும் இருக்கத்தான் செய்கிறது.

லிபியா ராமானுஜம், மிக்சிகன்

*****


தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் அப்பால் வந்து ஒரு தமிழ்ப் பத்திரிகையை 9 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்துவதென்பது ஒரு பெரும் சாதனையே அன்றி வேறில்லை. பாராட்டுகள்.

எஸ். ஜயச்சந்திரன், டாலஸ், டெக்ஸாஸ்.

*****


ஜெயமோகன் நேர்காணலில் எந்த ஒரு பொருளை அல்லது நிகழ்வைப் பற்றியும் பின்னணியை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற விதமாகவே அவரது பதில்கள் இருந்தன. இதற்கு உதாரணமாகப் பலவற்றைக் கூறலாம்:

"தமிழ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு ஏதாவது முக்கியமாகச் செய்திருக்கிறார்களா என்றால், இல்லை” என்றும், "அமெரிக்காவில் செட்டில் ஆவதற்குத்தான் யோசிக்கிறார்கள்" என்று எந்தப் புள்ளி விபரத்தின் அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. இன்றைக்கு கணினியில், ஆங்கிலத்துக்கு அடுத்து, பயன்பாட்டில் உள்ள மொழி தமிழ். தமிழில் கணினியையும், கணினியைத் தமிழும் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சர்வதேச அளவில் பல மாநாடுகள், ஆராய்ச்சிகள் செய்து, அதில் வெற்றியும் கண்டு, இலவசமாக அந்தப் பயன்பாட்டை வழங்கியதில் அமெரிக்கா வாழ் தமிழர்களின் பங்கு அளவிட முடியாதது. தவிர, தனிப்பட்ட முறையிலும் அமைப்பு ரீதியாகவும் பல்வேறு திட்டங்களையும், தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற லாபநோக்கற்ற பல தமிழ் அமைப்புக்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அடுத்து, "அமெரிக்காவில் இருக்கும் ஒரு தமிழ்ச் சங்கம், வருடா வருடம் நடிகர், நடிகைகளை வரவழைத்துத் தமிழ் விழா நடத்துகிறார்கள் என்று கேள்விப்படும்போது கேவலமாக இருக்கிறது” என்று பொறுப்பின்றிக் கூறியிருக்கிறார். அமெரிக்கத் தமிழ்ப் பேரவையின் செயல்பாட்டை முழுமையாக அறிந்து கொள்ளாமல் கூறியுள்ள இந்தக் கருத்து கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டியதாகும். அமெரிக்காவில் உள்ள 50 மாநில தமிழ்ச் சங்கங்கள் ஒருங்கிணைந்து, கல்வி, இசை, அறிவியல், பட்டிமன்றம், கவிதை, நாடகம், நாட்டியம், ஆன்மீகம், திரைப்படம் என்று தமிழின் பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்ளை வரவழைத்துக் கெளரவிக்கிறது. அத்துடன், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தாலும், தமிழில் தேவாரம், திருவாசகம், திருக்குறள் உள்ளிட்ட பல நூல்களிலிருந்து, பாடல்களை நாடகமாக, நாட்டியமாக, இசைக் கச்சேரிகளாக வெளிப்படுத்தும் இளந் தமிழ்க் குழந்தைகளின் தமிழ்ப்பற்றை வளர்த்தும், ஆண்டு முழுவதும் பலரது கடும் உழைப்பு, நிதி அளிப்பு மற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளும், வருடம் ஒருமுறை மூன்று நாட்கள் நடைபெறும் அற்புதமான தமிழ்த் திருவிழாவை 'கேவலம்' என்று கூறும் ஜெயமோகன் சரியாக அறிந்துகொண்ட பின் பேசுவது நல்லது.

"தமது பண்பாட்டு அடையாளங்களை இன்றளவும் விடாமல் கடைப்பிடிப்பதால் தான் யூத சமுதாயம் உலகத்திலேயே மிக மகிழ்ச்சியாக வாழ்கிறது” என்ற தமது "ஆராய்ச்சி” முடிவை ஜெயமோகன் வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும்போது, இங்குள்ள இந்துக் கோவில்கள், தமிழர் விழாக்களுக்குச் சென்று பாருங்கள். தமிழும், தமிழ்ப் பண்பாடும், எவ்வளவு செழிப்பாக இருக்கிறது, தமிழர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது தெரியும்.

இவரது நேர்காணலைப் படித்த பின், ஒரு நூலுக்குத் திரு. சோலை எழுதிய அணிந்துரையில் குறிப்பிட்டுள்ள கீழ்க்காணும் கருத்துத்தான் நினைவுக்கு வருகிறது. "எழுத்து உலகுக்கு எண்ணற்றோர் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் சரக்கு வியாபாரிகள். வெகுவிரைவிலேயே சரக்குகளின் சாயம் வெளுத்து விடுகிறது. வியாபாரிகள் முச்சந்தியில் நிர்வாணமாக நிற்கிறார்கள்.”

சென்னிமலை பி. சண்முகம். நியூயார்க்

*****


வாஞ்சியின் குறுகெழுத்துப் புதிர் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதன் விடைகளுடன், விளக்கங்களும் அளித்தால் சில வாரங்களில் மேலும் பல வாசகர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். கலந்துகொள்ளாவிட்டாலும் சில விடைகளில் புதைந்திருக்கும், முறுவல் வரவழைக்கும், விஷயங்களைப் பலரும் பாராட்டி ரசிப்பார்கள். வாஞ்சி அவர்கள் அடுத்த புதிரில் கவனம் செலுத்தட்டும். புதிரை ரசிக்கும் நாம் விளக்கங்களை விமர்சனப் பிரிவில் எழுதலாம்.

ரவி சுந்தரம், பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா

© TamilOnline.com