யார் வயதில் 20 வருஷம்!
'இன்று ஒரு தகவல்' புகழ் தென்கச்சி சுவாமிநாதன் கூறிய கதை இது:

ஓர் ஊர்ல ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு நிறையச் சீடர்கள் இருந்தாங்க. அவங்க எல்லோரும் பெரியவர் மீது ரொம்ப அன்பா இருந்தாங்க. அவருக்காக எதையும் செய்யத் தயாரா இருந்தாங்க. பெரியவரோட உலக வாழ்க்கை நிறைவு பெறுகிற நாள் வந்திட்டுது. அவரைத் தேடிவந்த கடவுளின் தூதர், "ஐயா! உங்களை அழைச்சிட்டுப் போக வந்திருக்கிறேன்" அப்படின்னார். சீடர்கள்லாம் துடிச்சுப் போய்ட்டாங்க.

இன்னும் கொஞ்ச காலம் அவரை இந்த உலகத்திலே இருக்க விடுங்களேன்னு கடவுளோட தூதர்ட்ட மன்றாடினாங்க.

"இந்த உலகத்தில் அவர் வாழ வேண்டிய காலம் முடிஞ்சிட்டுதே" அப்படின்னார் தூதர்.

"வேற வழியே இல்லையா?" அப்படின்னு சோகத்தோட கேட்டாங்க சீடர்கள்.

"ஒரே ஒரு வழிதான் உள்ளது"ன்னார் தூதர்.

"என்ன வழி? தயவு செய்து சொல்லுங்களேன்"னு ஆர்வத்தோட கேட்டாங்க சீடர்கள்லாம்.

"அவருக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய நீங்க முன்வர வேண்டும்"னார் தூதர்.

"பெரியவருக்காக எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்" அப்படின்னாங்க எல்லாச் சீடர்களும் சேர்ந்து ஒரே குரல்ல.

இதைக் கேட்ட தூதர், "உயிர் வேண்டாம். உங்கள் வாழ்நாளில் ஆளுக்குக் கொஞ்சம் இவருக்குக் கொடுத்தால், அதை இவரது ஆயுள் கணக்கில் வரவு வைத்து விடலாம்" அப்படின்னார்.

சரின்னு முதல்ல ஒருத்தன் வந்தான். என் ஆயுசில இரண்டு வருஷத்தைத் தர்றேன்னான். இன்னொருத்தன், ஒரு வருஷம் தர்றேன்னான். மூணாவதா ஒருத்தன் வந்து, ஒரு மாசம் தர்றேன்னான். எதையுமே செலவு செய்து பழக்கமில்லாத ஒரு சீடன், எனது ஆயுள்ல ஒரு நிமிஷ நேரத்தை இவருக்காகத் தர்றேன் அப்படின்னான். கடைசியா ஒருத்தன் வந்தான். அவன் சொன்னான், "இருபது வருஷங்களை எடுத்துக்கங்க"ன்னு.

இதைக் கேட்டதும் கடவுளோட தூதருக்கு ரொம்ப ஆச்சர்யமாப் போயிட்டுது. 'ஏம்பா, இது ரொம்ப அதிகம் இல்லையா? அப்படின்னு கேட்டார்.

அதுக்கு அவன் சொன்னான், "அய்யா, நான் சொன்ன இருபது வருஷம் என் மனைவியின் வயசிலேர்ந்து"!

***


மரணத் தறுவாயில் இருந்த பணக்காரர் கொஞ்சமாவது பணத்தைச் சொர்க்கத்துக்கு எடுத்துக் கொண்டு போக விரும்பினார். அருகில் பாதிரியார், டாக்டர், வக்கீல் மூவரும் இருந்தார்கள்.

மூன்று பேரிடமும் தலா 30,000 டாலர் கொடுத்துவிட்டு, "என்னுடைய சவப்பெட்டி யில் இந்தப் பணத்தை மறக்காமல் போட்டுவிடுங்கள்" என்று சொன்னார்.

எல்லாம் முடிந்து மூவரும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கண்ணீர் விட்டபடி பாதிரியார் கூறினார், "நான் 10,000 டாலரை சர்ச் திருப்பணிக்காக வைத்துக் கொண்டது தவறு. முழுதையும் போட்டிருக்க வேண்டும்."

"ஓ, அதனாலென்ன. நான் கூடத்தான் ஒரு புதிய மருத்துவக் கருவி வாங்க 20,000 டாலரை எடுத்துக் கொண்டு விட்டேன். நல்ல காரியம்தானே. தப்பில்லை" என்றார் டாக்டர்.

"அடப் பாவிகளா! செத்தவனை இப்படியா ஏமாத்தறது? நான் முழுத்தொகைக்குமே ஒரு செக்கைப் போட்டுவிட்டேன்" என்றார் வக்கீல்.

© TamilOnline.com