சிவாஜி எழுதிய பாட்டு!
வாரியார் சுவாமிகள் ஒருமுறை திருவிளையாடற் புராணம் சொற்பொழிவு செய்துகொண்டு இருந்தார். திடீரென்று முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனை எழுப்பி "தம்பி! தருமிக்கு பாட்டு எழுதிக் கொடுத்தது யாரு?" என்றார். பையன் சட்டென்று "சிவாஜி" என்றான். காரணம், அப்போதுதான் ‘திருவிளையாடல்' படம் வெளியாகிப் பிரபலமாக இருந்தது.

சிறுவன் கூறியதைக் கேட்டதும் பார்வையாளர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். வாரியார் அவர்களைப் பார்த்து, "ஏன் சிரிக்கிறீங்க? அந்தப் பையன் சரியாத்தான் சொல்லியிருக்கான்" என்று சொன்னதுடன் அதற்கு விளக்கமும் கூற ஆரம்பித்தார். "நீங்க நேருவை நேருஜி-ன்னு சொல்றீங்க, காந்தியை காந்திஜி-ன்னு சொல்றீங்க, அதைப் போல்தான் இந்தப் பையன் சிவாவை சிவாஜி-ன்னு சொல்லியிருக்கான். வடக்கே ஒருத்தரை உயர்வா மரியாதையாய் அழைக்க ‘ஜி' சேர்ப்பது வழக்கம், அந்த மாதிரி அர்த்தத்திலதான் சொல்லி இருக்கான்" என்றார் தனக்கேயுரிய பாணியில்.



© TamilOnline.com