* புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையன்று நவராத்திரி துவங்குவதால் அன்று நல்ல நேரம் பார்த்து கொலுப்படி அமைத்து பொம்மைகளை வைக்க வேண்டும். கொலுப்படி கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.
* கொலுப்படிகள் 5, 7, 9 என ஒற்றைப்படையாக இருக்க வேண்டும்.
* கொலுப்படியின் கீழே மாக்கோலம் அல்லது அரிசிமாவில் கோலம் போட்டு காவி இட்டு நடுவில் விளக்கேற்ற வேண்டும். விருப்பப்பட்டால் கோலத்தின் பக்கவாட்டில் ரங்கோலி போட்டுக் கொள்ளலாம்.
* மேலிருந்து முதல்படியில் தேவர்கள், அடுத்தபடியில் கடவுள்கள், அதற்கு அடுத்தபடியில் துறவறம் பூண்டவர்கள், பின் மஹாத்மாக்கள் என வரிசைக் கிரமமாக வைக்க வேண்டும். மேற்கூறிய படிகளின் இரண்டு பக்க ஓரங்களில் ஐந்தறிவு கொண்ட மிருகங்களையோ, பறவைகளையோ வைக்கக் கூடாது.
* முதல்நாளே திட்டமிட்டபடி குறிப்பறிந்து பொம்மைகளை வைக்க வேண்டும். நினைத்தபடி நாள்தோறும் பொம்மைகளை இடமாற்றம் செய்யக் கூடாது.
* கொலுப்படியின் கீழே உள்ள முதல் இரண்டு படிகளில் நிலத்தில் வாழ்பவை, நீரில் வாழ்பவை என பொம்மைகளை வைக்க வேண்டும்.
##Caption## * தசாவதாரம், அஷ்டலக்ஷ்மி, அறுபடை முருகன் ஆகிய பொம்மைகளை வரிசைக் கிரமமாக வைக்க வேண்டும். ராமர் பட்டாபிஷேக பொம்மை வைக்கும் போது ஆஞ்சநேயர் சீதாப்பிராட்டியை நோக்கி வணங்குவது போல் வைக்க வேண்டும்.
* கொலுப்படியின் பக்கவாட்டில் பார்க், பீச், கிரிக்கேட் மைதானம், ஏர்போர்ட் போன்றவற்றை அமைக்கலாம். அல்லது ஏதாவதொரு கருத்தைத் தெரிவிக்கும் வண்ணம் பொம்மைகளை வைக்கலாம். உதாரணமாக சித்திரை முதல் பங்குனி வரை ஒவ்வொரு பண்டிகைகளையும் கொண்டாடும் விதம், கிராமத்துச்சூழல், அந்தக்கால நகர்ப்புற முறையிலிருந்து இந்தக்காலம் முன்னேறி வந்த போக்குவரத்து முறை, 6 முதல் 60 வயது வரை ஒரு பெண்ணின் படிப்படியான இயல்பு வாழ்க்கை, வள்ளி திருமணம், இராமாயண, மகாபாரத இதிகாசங்களைக் கூறும் பகுதி, விளையாட்டுத் துறைகள், சமுத்திரத் திட்டங்கள், கம்ப்யூட்டர் உலகின் வளர்ச்சிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பொம்மைகளை வைக்கலாம்.
* நவராத்திரியில் செவ்வாய், வெள்ளி நாட்களில் அம்மனுக்கு இனிப்புச் சுண்டல் அல்லது வேறு இனிப்பு வகை செய்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.
* நாள்தோறும் ஸ்நானம் செய்துவிட்டு அன்றைய வேலைகளைத் துவங்க வேண்டும்.
* கைவினைப் பொருட்கள் செய்பவர் தங்கள் கற்பனைக்கேற்றபடி பொம்மைகளைத் தயாரித்தும், கொலுவை அலங்கரித்தும் நவராத்திரிப் பண்டிகையை மெருகூட்டலாம்.
* மரப்பாச்சி பொம்மை வைப்பது சிறப்பு அம்சம். அவற்றிற்கு ஒவ்வொரு வருடமும் விதவிதமான அலங்காரம் செய்து அசத்தலாம்.
* நவராத்திரி தினத்தில் அம்மனுக்குரிய பக்திப்பாடல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும். பாடத் தெரிந்தவர்களை பாடச் சொல்லலாம்.
* பொதுவான நல்ல கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். அநாவசியமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
* நாள்தோறும் இரவில் கொலுவுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.
* ஒன்பதாம் நாள் ஒவ்வொரு படியிலிருந்தும் ஒரு பொம்மையைப் படுக்கவைக்க வேண்டும்.
* சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு சரஸ்வதிக்கு வஸ்திரம் போட்டு ஸ்லோகம் சொல்லி நைவேத்யம் செய்ய வேண்டும்.
* விஜயதசமியன்று கல்வி பயிலும் குழந்தைகளை புத்தகம் படிக்கச் செய்ய வேண்டும். கல்வி பயில இருக்கும் குழ்ந்தைகளுக்கு ஒரு தாம்பாளத்தில் நெல்லை பரத்தி அதில் ஓரிரு எழுத்துக்களை எழுதப் பழக்கி கல்வியை துவக்க வேண்டும்.
* நவராத்திரி முடிந்தவுடன் செவ்வாய், வெள்ளி நீங்கலாக மற்ற நாளில் நல்ல நேரம் பார்த்து பொம்மைகளை எடுத்து விடலாம்.
* பொம்மைகளை செய்தித் தாளில் பொதிந்து பாலிதீன் கவரில் போட்டுக் கட்டி வைத்தால் ஒன்றுடன் ஒன்று உராயாமல் இருக்கும்.
ராதா மோஹன், டெக்ஸாஸ் |