'சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது'
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Madhurabharati
பரமு கம்ப்யூட்டரை மூடி, வீட்டுக்குப் புறப்படத் தயாரான போது, சட்டைப்பைக்குள் இருந்த செல்பேசி பயர் எஞ்சின் சத்தத்தில் அலறியது. பரமுவின் மனைவி அலமுவிடமிருந்துதான் அழைப்பு. அலமுவுக்கு இந்தச் சத்தத்தையும், தன் பெண் மீராக்குட்டிக்கு பூனை சத்தத்தையும் தன் கைபேசியில் அமைத்திருந்தான் பரமு.
தோடுடைய செவியன் மாதிரி காதோடு ஒட்டியிருந்த நீலப்பல்லைத் தட்ட, "பரம், வரும்போது இந்தியன் ஸ்டோர்ல ஃப்ரோசன் தேங்காயும், ஒரு பாக்கெட் அச்சு வெல்லமும் வாங்கிண்டு வா. அச்சுவெல்லம் நல்ல வெளிர் தேன் கலர்ல இருக்கணும். அப்டியே, மீராக்குட்டிக்கு டார்கெட்லேந்து ஸ்னாக் பேக் வாங்கிடு. சீக்கிரம் வீட்டுக்கு வா" என்று அலமு காதில் அலறினாள்.
"என்ன விசேஷம் அலமு, தேங்காய், வெல்லம்லாம் கேக்கற? போளி பண்ணப் போறியா. இல்ல புதுமாதிரி ஏதாவது ஊறுகாயா?" என்றான்.
"ம்க்கும். நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. வீட்டுக்கு வா க்விக்கா. ஒரு சர்ப்ரைஸ்" என்று கூறி போனைத் துண்டித்தாள்.
டார்கெட்டில் ஸ்னாக் பேக் தேடியபோது, நீலப்பல் பூனைச் சத்தமிட்டது.
"எஸ் மீராக்குட்டி, சொல்லும்மா" என்றான்
"டாட், டோண்ட் பை த யூசுவல் ஸ்னாக். கெட் மீ ஸ்ட்ராபெரிஸ் இன்ஸ்டெட்" என்றாள் மீரா. அடுத்த வருடம் உயர்நிலைப்பள்ளி செல்கிறாள். ஓரளவு தமிழ் பேசக்கூடியவள் தான். இங்கிருக்கும் எல்லா இந்தியக் குழந்தைகளைப் போல வார இறுதி நாட்களில் பரத நாட்டியம், வெஸ்டர்ன் வயலின், கராத்தே கிளாஸ் என்று போகிறாள்.
##Caption## கேட்ட பொருட்களுடன் வீட்டில் நுழைந்த பரமுவுக்கு அலமு "பரம், நான் அடுத்த வாரம் எங்க லேடீஸ் கிளப் விழால வீணை வாசிக்கப் போறேன்" என்றாள்.
"என்னது? வீணையா? எப்படி இருக்கும்னு தெரியுமா?" என்றான் பதிலுக்கு.
‘ஹஹ்' என்று வாய்பொத்திச் சிரித்த மீராக்குட்டி "அப்பா, நெஜமாத்தான்பா. அம்மாவை துளசி ஆன்ட்டிதான் வீணை வாசிக்கச் சொன்னாங்க" என்றாள்.
"சும்மாருடி முந்திரிக் கொட்டை. பரமு, நீ போய் குளிச்சுட்டு டின்னருக்கு வா. சாப்பிடும்போது சொல்றேன். குளிக்கறதுக்கு முன்னாடி ஞாபகமா ப்ளூடூத்தை காதிலேந்து கழட்டி வைச்சுட்டுக் குளி. இத்தோட மூணு ப்ளூடூத் வாங்கியாச்சு" என்றாள்.
அலமு வீணை வாசிப்பாள் என்று எனக்குத் தெரியாதே. அவளைப் பெண் பார்க்கும் சமயத்தில் கூட யாரும் அவளுக்கு இப்படி ஒரு தனித்திறமை இருப்பதாகக் கூறவில்லையே. ஒருவேளை மீராக்குட்டியின் வயலினை வீணை என்று நினைத்து விட்டாளோ. ஆனால் துளசி ஆன்ட்டி அலமுவை வீணை வாசிக்கச் சொன்னதாகத் தானே மீராக்குட்டி சொன்னது. இப்படிப் பலவாறாகத் தன்னுள் குழம்பிப் போன பரமு, வீணைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க அவசரக் குளியலைப் போட்டுவிட்டு, கிச்சனுக்குள் நுழைந்தான்.
"அலமு, நீ எப்போ வீணை கத்துண்ட? எனக்குச் சொல்லவே இல்லையே!"
"ஆமாமா. நான் காலேஜ் ஹாஸ்டல்ல இருந்த போது கல்யாணி என் ரூம் மேட். இப்போ துபாய்ல இருக்கா. ரொம்ப நன்னா வீணை வாசிப்பாள். அவ குடும்பமே வீணை வாசிக்கும். கல்யாணிதான் எனக்கு வீணை டீச்சர். சாஸ்திரப்படியெல்லாம் கத்துக்கலை. எனக்கு ரெண்டு மூணு சினிமாப் பாட்டு வாசிக்கக் கத்துக் கொடுத்திருக்கா. ஹாஸ்டல் டே, காலேஜ் டே என்று நாங்கள் ரெண்டு பேரும் வாசிச்சிருக்கோம். அவள் கர்னாடிக். நான் சினிமாப் பாட்டு," என்றாள்.
"அது சரி, அது காலேஜ் டைம்ல. அதுக்கப்பறம் இத்தனை வருஷமா, நீ வீணையே வாசிக்கல. இப்போ எப்படி முடியும்?" என்றான் பரமு நிஜமான இரக்கத்துடன்.
"அது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. சித்திரமும் கைப் பழக்கம். வீணையும் விரல் பழக்கம்."
"சரி, நீ வீணை வாசிச்சது எனக்கே தெரியாத போது, துளசி ஆண்ட்டிக்கு எப்படித் தெரியும்?"
"அதுவா, துளசி ஆன்ட்டி துபாய் போயிருந்த போது, ஒரு விருந்தில் கல்யாணியைப் பாத்திருக்கா. அவளுடன் பேசினதிலேந்து என்னைப் பத்தித் தெரிய வந்திருக்கு. அதுக்கப்புறம் துளசி ஆன்ட்டி எங்கிட்ட பேசும்போது கல்யாணியைப் பத்திச் சொல்லவும், நான் எங்க காலேஜ் டேஸ் பத்தி சொன்னேன். அப்படித் தெரிய வந்தது. அதுக்கப்புறமா இப்போ ஆன்ட்டி, எங்க க்ளப்புக்கு ப்ரெசிடெண்ட் ஆகி, வரப்போற புத்தாண்டு நிகழ்ச்சிக்குத்தான் இத்தனை ஏற்பாடும்..."
"என்ன தைரியம் உனக்கு? சரி, வீணைக்கு எங்க போவ?"
"அங்கதான் நீ வர. உன் ப்ரேண்ட் ராம்ஜி அடுத்த வாரம் இண்டியாலேந்து இங்க வரார் இல்லையா? அவரை வீணைய எடுத்துண்டு வரச் சொல்லி இப்பவே ஒரு ஈமெயில் போடு. ராத்திரி அவருக்கு போன் பண்ணி சொல்லிடு." "ராம்ஜியா? அவன் பாஸ்போர்ட்டே ரொம்ப வெயிட்டா இருக்குனு அலுத்துக்கறவன். அவனாவது, அத்தனாம் பெரிய வீணையைத் தூக்கிண்டு வர்றதாவது. லக்கேஜ்ல போட முடியாது. வீணைக்குத் தனியா ஒரு சீட் போடணும்! ஆமா, வீணை ஏது?"
"இப்போல்லாம் எலக்ட்ரானிக் வீணை வயலின் சைசுக்கு வந்தாச்சு. மூணாப் பிரிச்சு, ஒரு சின்ன சூட்கேஸ்ல வைச்சு ஹாண்ட் லகேஜா கொண்டு வரலாம். ராம்ஜியால முடிலைனா, அவாளையே ஏர்ஷிப் பண்ண சொல்லிடறேன். பத்திரமா வந்து சேந்துடும்" என்றாள்.
"எவாளை? கொஞ்சம் கோர்வையா சொல்லேன். எனக்கு ஒண்ணும் புரியவே இல்லை" என்றான் பரமு.
அலமு கம்ப்யூட்டர் மூலம் சென்னையில் உள்ள ஒரு இசைக்கருவிகள் விற்கும் கடையில் வீணை ஆர்டர் செய்து இருப்பதாகவும், அதை எப்படி டெலிவரி எடுக்க வேண்டும் என்பதையும், அதற்கான விலையைக் கடன் அட்டையில் வசூலித்துக் கொள்வார்கள் என்றும், இரண்டு வாரங்களில் டெலிவரி செய்யப்படும் என்றும் ஒருமாதிரியாகப் பரமு புரிந்து கெண்டான். அதற்கான அத்தாட்சியாக வந்த ஈமெயிலையும் காட்டினாள். மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் கிட்டத்தட்ட ஒரு நான்காயிரம் அமெரிக்க டாலருக்கான செலவு வரும்போல் இருந்தது.
"ஏம்மா, இது கொஞ்சம் ஜாஸ்தியா படலை..." பரமு சற்றே இழுக்க, அலமுவின் முறைப்பில் அடங்கினான்.
ஒன்றும் செய்ய முடியாது. அலமு முடிவெடுத்து விட்டாள். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை ஒத்திப் போட முடியுமா. வழக்கம்போல தலையாட்டிவிடுவது உத்தமம்.
"சரி, என்ன வாசிக்கப் போற?" குரலை வழவழப்பாக மாற்றிக் கொண்டு கேட்டான்.
"கலைமகள் கைப்பொருளே" என்றது முந்திரிக் கொட்டை.
"இருடி. பெரியவா பேசும்போது இது என்ன மேனர்ஸ் இல்லாம? கோ டு பெட்" என்றாள் அலமு.
கைநிறைய ஸ்ட்ராபெரியை அள்ளிக் கொண்டு ஓடினாள் மீராக்குட்டி.
"ஏய் நில்லுடி. அத்தனை பழத்தையும் அள்ளிண்டு ஓடறது பாரு. வரவர சொன்னதே கேட்க மாட்டேங்கறா."
பரமு, தாயைப் போல பிள்ளை என்று சொல்ல வந்ததை, "கலைமகள் கைப்பொருளே வாசிக்கத் தெரியுமா?" என்று மாற்றினான்.
அலமு "கல்யாணி நோட்ஸ் அனுப்பிடுவா" என்று மேலும் விவரித்தாள்.
அதாவது வரும் புத்தாண்டு சமயத்தில் லேடீஸ் க்ளப் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பத்மினி வேலாயுதம் ‘கலைமகள் கைப் பொருளே' என்ற சினிமாப் பாடலைப் பாட, அதற்கு ஜெபராஜ் கீபோர்ட் வாசிப்பதாகவும், சாய் ரமேஷ் தபேலா வாசிப்பதாகவும், அதனூடே வருகின்ற வீணை இசையை அலமு வாசிப்பதாகவும் ஏற்பாடு. ஒவ்வொரு வார இறுதியிலும் இதற்கான ஒத்திகை ஒவ்வொருத்தர் வீட்டில் நடப்பதாகவும் ஏற்பாடு. இதற்கான முழுப் பொறுப்பும் துளசி ஆன்ட்டியும், இன்னும் பல லேடிஸ் க்ளப் உறுப்பினர்களும், அவர்களது இல்லத்தரசர்கள் அல்லது இல்லத்தடிமைகள் உதவிசெய்ய களேபரமாக நிகழ்ச்சித் தயாரிப்பு வேலைகள் ஆரம்பித்தன. கூகுள் க்ரூப் ஒன்று புதிதாகத் திறக்கப்பட்டு, மெயில், சாட் என்று அமர்க்களப்பட்டது.
வீணை வந்திறங்கிய நாள் அன்று, தேங்காய் வெல்லம் சேர்த்த கர்ச்சிக்காய் என்னும் பதார்த்தம் செய்தாள் அலமு. வீணை ஒரு பெட்டிக்குள் காகிதக் குப்பைகள் நடுவே மூன்று பகுதிகளாக இருந்தது. அதனுடன் வந்திருந்த குறிப்பையும், துபாய் கல்யாணி அனுப்பியிருந்த விவரங்களையும் வைத்து, வீணை அசெம்பிளி ஆரம்பமானது. நல்ல வேளை, உடைப்பு, சிராய்ப்பு என்று எதுவும் இலவச இணைப்பாக வீணையுடன் வரவில்லை. ஒவ்வொரு பகுதியாக ஒட்டவைத்து, அதற்கான திருகுகளைத் திருகி, கம்பிகளைக் கட்டி ஒரு மாதிரி நாங்கள் வீணை உருவத்தைச் செய்து முடிக்க மூன்று மணி நேரமானது. கர்ச்சிக்காய், ஸ்ட்ராபெரி என்று கலந்து கட்டி வீணைக்கு நைவேத்தியம் செய்துவிட்டு, அலமு பய பக்தியுடன் வீணையை மடியில் வைத்து, விரல்களில் கம்பி மோதிரம் அணிந்து கொண்டு ஒரு தட்டுத் தட்ட "டொய்ங்" என்றது. ஆஹா! வீணைச் சத்தம்தான்.
மீராக்குட்டி, தன் வயலினை போட்டியாக வைத்துக் கொண்டு ஹேப்பி பர்த் டே வாசித்து, அலமுவை வீணையில் அதை வாசிக்கச் சொன்னாள்.
"போடி அந்தண்டை" என்று மீராவை விரட்டினாள் அலமு.
##Caption## அடுத்த சில நாட்களுக்கு அலமுவையும், வீணையையும் பிரிக்க முடியவில்லை. துபாய் கல்யாணியின் நோட்ஸ்களை வைத்துக் கொண்டு முதலில் அலமு கலைமகள் கைப்பொருளே முழுப்பாடலையும் வாசிக்கக் கற்றுக் கொண்டாள். கலைமகள் மட்டும் சரியாக வர, கைப்பொருள் தவறியது. வாராவாரம் இசைக்குழுவுடன் பயிற்சி என, ஒவ்வோர் இடத்துக்கும் வீணையைக் கழட்டி, மாட்டிக் கிட்டத்தட்ட ஹாண்டிமேனாக அவதாரம் எடுக்க ஆரம்பித்தான் பரமு.
அலமு விரல்களில் வீணைக் கம்பிகளை அழுத்தியதால், பரமு ரகசிய சினேகிதனாக மாறி அவளது கை விரல்களுக்கு ஆலிவ் எண்ணெய் தடவ வேண்டியதாயிற்று.
கீபோர்ட் ஜெபராஜ் வயதானவர். அவரும் இசையை முறையாகக் கற்கவில்லை போலிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஜெபக்கூட்டங்களில் பிரார்த்தனைப் பாடல்களுக்கு மென்மையாக கோரசுடன் கீபோர்ட் வாசித்த அனுபவம் ஒன்றை வைத்துக் கொண்டு ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் கீபோர்ட் கட்டைகளை அழுத்தும் போதெல்லாம் ஜபக் கூட்ட அனுபவத்தைத் தந்தது.
பத்மினி வேலாயுதம் ஒவ்வொரு ப்ராக்டிசிலும், ஒவ்வொரு மாதிரிப் பாடினாள். அலமு மாதிரியே, அவளும் தனது கல்லூரிக் காலத் திறமைகள் இன்னும் தனக்கிருப்பதாக நம்பிக் கொண்டிருந்தாள். சாய் ரமேஷும் முறையாகக் கற்றவனில்லை. பஜனைப் பாடல்களுக்கு வாசித்த அனுபவத்தில் ஏதோ ஆர்வக் கோளாறால் தட்டிக் கொண்டிருந்தான். சுருதி என்பது ஒருவருக்கும் சேரவில்லை.
துளசி ஆன்ட்டி "போன வாரத்துக்கு இந்த வாரம் நல்லா வந்துருக்கு" என்று ஒவ்வொரு வாரமும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்க, தினமும் ப்ராக்டிஸ் செய்வதாக முடிவாயிற்று. வீணையை எடுத்துக் கொண்டு, கழட்டி, மாட்டும் வேலை வேண்டாமென்று, தினப்படி ப்ராக்டீஸ் அலமு தன் வீட்டிலே நடக்கட்டும் என்று அறிவித்தாள். தினமும், பரமுதான் ப்ராக்டீஸ் பண்ண வருபவர்களுக்கு நொறுக்குத் தீனி, உணவு என்று எல்லாவற்றையும் செய்தான். வீடு களேபரப்பட்டது. ஆனால், கலைமகள் இன்னும் மனது வைக்கவில்லை.
வெள்ளிக்கிழமை அன்று கடைசி ப்ராக்டீஸ். மைக் செட், ஸ்பீக்கர் செட், மிக்சர் என்று நிறைய எலக்ட்ரானிக் உபகரணங்கள் வந்திறங்க, எல்லாவற்றையும் செட்டப் செய்வதில், பத்மினியின் கணவர் வேலாயுதமும், துளசி ஆன்ட்டியும் உதவி செய்தனர். இருவரும், ஹெட்போன் மாட்டிக் கொண்டனர். பரமு 'ஒன், டூ, த்ரீ' சொல்ல, ரிகர்சல் ஆரம்பித்தது.
பத்மினி மைக் முன்னால் பாட ஆரம்பிக்க, என்ன ஆச்சர்யம், குரல் பாவம், அலமுவின் வீணை, ஜெபராஜ் கீபோர்ட்மூலம் வாசித்த வயலின், சாய் ரமேஷின் தபேலா எல்லாம் சேர்ந்திசைத்து அற்புதமாக ஒலித்தது. என்ன மந்திரம்? இத்தனை நாள் சேராத சுருதியும், பாவமும், தாளமும், லயமும் எப்படி இன்று ஒரே நாளில் சேர்ந்தது? எல்லாம் பரமுவுக்கு ஆச்சர்யம். அலோபதி, ஹோமியோபதி, நேச்சுரோபதி எல்லாம் பார்த்தும் தீராத வலி, ஒரு டம்ளர் துளசிச்சாறில் தீர்ந்து விட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறோமே, அது மாதிரி இது என்ன, துளசி ஆன்ட்டி ஏதாவது மந்திரம் போட்டாரா? ஆச்சர்யம் அடைந்தான் பரமு.
இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் பரம திருப்தி, பாட்டு நல்லபடியாக வந்துவிட்டது என்று. மறுநாள் நிகழ்ச்சியில் இதேபோல் அசத்தணும் என்று எல்லோரும் ஒருவருக்கொருவர் பாராட்டிப் பேசிக்கொண்டனர்.
அலமுவுக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. மீராக்குட்டிக்கு, இன்னும் இரண்டு கப் ஸ்ட்ராபெரிகளை அவளே கொண்டுவந்து கொடுத்தாள்.
சனிக்கிழமை நிகழ்ச்சி நாள். பேச்சு, கவியரங்கம், சிறுவர்கள் நாடகம் என்று எல்லாம் நடந்து, ‘கலைமகள் கைப்பொருளே' ஆரம்பிக்க இருந்த சமயம். அரங்கத்தில் பரமு போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான்.
அலமு திடீரென்று ஓடிவந்து "பரமு கொஞ்சம் வா" என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மேடையின் பின்புறம் சென்றாள்.
பதற்றத்துடன் "வீணைக் கம்பி அறுந்து போச்சு" என்று அழுதாள்.
"என்னது இது. வெண்ணை திரளும்போது தாழி உடைஞ்சாப்ல. ம்ம்... என்ன பண்றது?"
"தெரில பரமு. யார் கண் பட்டதோ தெரிலை. நான் இன்னும் துளசி ஆன்ட்டிகிட்ட சொல்லலை. பயமா இருக்கு" என்றாள்
அப்பொழுது அந்தப் பக்கம் வந்த பத்மினியின் கணவர் வேலாயுதம், "எந்தா பரமு, ஏன் அலமுக்குட்டி கரையுன்னு?" என்றார்.
பரமு விஷயத்தை விளக்கினான்.
வேலாயுதம், "ஆ! இதி ஸ்மால் மேட்டர். ஞான் துளசி ஆன்ட்டியோட பரயு. ஜெஸ்ட் லீவ் டு மீ" என்று சொல்லி, அலமுவை எப்பொழுதும் போல வீணை வாசிக்கச் சொன்னார்.
"எப்படி சார், ஒரு கம்பியில்லாம வீணை வாசிக்கறது", அழுகையும், ஆத்திரமும் ஒருசேர அலமு கேட்டாள்.
"அலமு, ஜெஸ்ட் டூ வாட் ஈ சேட்டன் ஸே. எனிக்கு நேரமாயி, ஞான் ஓடியோ சிஸ்டம் இன்சார்ஜாக்கும்" என்று கூறிச் சென்றார் வேலாயுதம்.
இருக்கிற கடவுளையெல்லாம் சபித்தும், திட்டியும், வேண்டியும் மற்ற இசைக்கலைஞர்களுடன் மேடை ஏறினாள் அலமு.
சுகுணா சாம்பசிவம் "அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கலைமகள் கைப்பொருளே பாடல்" என்று அறிவிப்புச் செய்ய ஆரம்பித்தாள்.
மேடை மைக் எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. பத்மினி ஆரம்பித்தாள், அலமு கம்பியில்லா வீணையை மீட்ட, நாதம் ஓங்காரமாய் அற்புதமாக வந்தது. முழுப் பாடலும் முதல்நாள் நடந்த இறுதி ஒத்திகையை விடப் பல மடங்கு அழகாக, துல்லியமாக எல்லா ரசிகர்களையும் கவர்ந்தது. அரங்கத்தில் கரகோஷம். எழுந்து நின்று எல்லோரும் கைதட்டி ஆரவாரித்தனர்.
நிகழ்ச்சி முடிந்தது. எல்லா சப்தங்களும் அடங்கியபின். மேடையின் பின்புறம் பரமுவும், அலமுவும், வேலாயுதம் சாரைப் பார்த்தனர்.
வேலாயுதம், தன்னை நோக்கிக் கை காட்டியபடியே, "அலமு, வேலாயுதம் சார் இன்னிக்கு உன்னைக் காப்பாத்திட்டார். ம்யூசிக் மிக்சர்ல உன்னோட வீணை ட்ராக்கை சாமர்த்தியம் பண்ணி அழகா கேக்கக் வைச்சுட்டேன். எண்ட குருவாயூரப்பன் மகிமையாக்கும். அடுத்த ப்ரோக்ராம்ல இனிமே ஜாக்கிரதையா இருக்கணும்" என்றார்.
பரமுவுக்கு என்னவோ வேலாயுதம் சாரின் சமாதானம் சரியாகப் படவில்லை. அலமுவுக்கு சரி. ஆனால் மற்ற இசைக்கலைஞர்கள் செய்த எல்லாத் தப்பையும் இந்த எலக்ட்ரானிக் கருவி சமாளித்ததா என்பதில் பரமுவுக்கு முழுச் சந்தேகம்.
மறுநாள் அலமு இல்லாத சமயமாக துளசி ஆன்ட்டிக்குப் போன் செய்து, அலமுவுக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு தன் சந்தேகத்தைக் கூறி விளக்கம் கேட்டான்,
"பரமு. அதுவா? நானும் வேலாயுதம் சாரும் செஞ்ச சின்ன செட்டப். நாங்க போட்டது ஒரிஜினல் ட்ராக். மேடையில அவங்க வாசிக்கறதை சுத்தமா ம்யூட் பண்ணிட்டு, ஒரிஜினலை மானிட்டர்லயும், ஸ்பீக்கர்லயும் போட்டோம். அவங்க வாசிச்ச மாதிரி ஆக்ட்தான். அவங்களுக்கே தெரியாது. இதை நாங்க ரெண்டு பேரும் முன்னாடியே முடிவு செஞ்சதுதான். அன்னிக்கு நடந்த ரிகர்சல்லயும் அதான் நடந்தது. இதைப் பத்தி யாருக்கும் சொல்லிடாதே! யாருக்கும் தெரியாது. இப்ப தெரியுதா, எப்படி எல்லாரும் சுருதி சுத்தமா இசை வழங்கினாங்கன்னு?!"
சேகர், இல்லினாய்ஸ் |