"அரசருக்குப் பைத்தியம்!"

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Aravind Swaminathan


குழந்தைகளே கோகுலாஷ்டமி, விஜயதசமி எல்லாம் உற்சாகமாக் கொண்டாடினீங்களா? நல்லது, வாங்க. இந்தக் கதையைக் கேளுங்க.

விஜயநகர அரசைக் கிருஷ்ண தேவராயர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருடைய அரசவையில் விகடகவியாக இருந்தவர் தெனாலி ராமண்ணா. சமயங்களில் கோமாளி போல் நடந்து கொண்டாலும் மிகுந்த புத்திகூர்மை உள்ளவர். தனது வேடிக்கை, விநோதப் பேச்சால் மன்னரது கோபத்தைத் தீர்த்து வைப்பதில் வல்லவர். இதனால் மன்னர் அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். ஆனால் தன்னைவிடத் தெனாலி ராமனுக்கு மன்னன் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ராஜகுருவுக்குப் பிடிக்கவில்லை. அவர், தெனாலிராமனை எப்படியாவது அவமானப்படுத்தி அங்கிருந்து விரட்டிவிட வேண்டும் என்று எண்ணினார்.

ஒருநாள் மன்னர் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அவருடன் ராஜகுருவும் இருந்தார். பேச்சு மெல்லத் தெனாலிராமன் பக்கம் திரும்பியது. "அவன் மிகுந்த புத்திசாலி என்பதில் ஐயமில்லை" என்றார் மன்னர். உடனே ராஜகுரு, "இல்லை மன்னா. அவன் அப்படியொன்றும் புத்திசாலி இல்லை. ஏதோ, நீங்கள் அவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் அவன் அப்படி நடித்து எல்லோரையும் ஏமாற்றி வருகிறான். உண்மையில் அவன் ஒரு முட்டாள்" என்றார்.

##Caption## மன்னருக்கு ராஜகுருவின் கூற்று வியப்பைத் தந்தது. "சரி, நீங்கள் சொல்வது உண்மையென்றால் அவன் புத்திசாலி என்பதை அவனே நிரூபித்துக் காட்டட்டும். நாளையே அவன் புத்திசாலி என்பதை அரசவையில் நிரூபிக்க வேண்டுமென்று தகவல் சொல்லி அனுப்புங்கள்" என்று கூறிவிட்டார் அரசர். ராஜகுருவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. படைவீரன் ஒருவன் மூலம் தெனாலிராமனுக்கு இதைத் தெரியப்படுத்தினார்.

மறுநாள் அரசவை கூடிற்று. எல்லோரும் தெனாலிராமன் வருகைக்காகக் காத்திருந்தனர். சற்று நேரத்தில் வியர்க்க, விறுவிறுக்கத் தெனாலி ராமன் சபைக்கு ஓடி வந்தார். அவிழ்ந்த குடுமி, கிழிந்த வேஷ்டி, கலைந்த மேலாடை என்று அவர் வந்த தோற்றத்தைப் பார்த்துச் சபையினர் நகைத்தனர்.

"என்ன ஆயிற்று தெனாலி ராமா உனக்கு. நீ ஒரு முட்டாள் என்பதை இப்படியே நிரூபிக்கப் போகிறாயா என்ன?" என்று கேட்டார் மன்னர்.

"மன்னிக்க வேண்டும் மன்னா, வழியில் ஒரு முரட்டுக் காளை ஒன்று என்னை முட்ட வந்தது. அதனிடமிருந்து தப்பித்து வருவதற்குள் இப்படி ஆகிவிட்டது. தயவுகூர்ந்து என்னை மன்னிக்க வேண்டும்" என்றார் தெனாலி ராமன்.

"சரி போகட்டும், நீ புத்திசாலி என்பதை உடனடியாக இப்போது எல்லோருக்கும் நிரூபித்தாக வேண்டும் என்று மன்னர் விரும்புகிறார். இல்லாவிட்டால் நீ ஒரு முட்டாள் என்பதை ஒப்புக்கொண்டு அரசவைப் பதவியைத் துறந்துவிட்டு, வந்தவழியே போக வேண்டியதுதான்" என்றார் ராஜகுரு.

"அப்படியே ஆகட்டும்" என்ற தெனாலிராமன் சிறிது நேரம் யோசித்தார். பின் மன்னரை நோக்கி, "மன்னா நான் கேட்கும் கேள்விக்கு நீங்களோ தலைமைக் குருவோ அமைச்சர்களோ 'ஆம்' அல்லது 'இல்லை' என்று பதில் கூறிவிட்டால் உடனடியாக நான் இந்த நாட்டை விட்டே போய்விடுகிறேன்" என்றார்.

"ஆம் அல்லது இல்லை என்றுதானே கூறவேண்டும். சம்மதிக்கிறோம்" என்றனர் அமைச்சர்கள். ராஜகுருவும் சம்மதித்தார். தெனாலிராமனும் உடனே சபையினரைப் பார்த்து "கிருஷ்ண தேவராய மன்னருக்குப் பிடித்திருந்த பைத்தியம் குணமாகி விட்டதா?" என்று கேட்டார்.

அவை திடுக்கிட்டது. மன்னர் திகைத்தார். மந்திரிகள் பதில் கூற முடியாமல் விழித்தனர். 'ஆம்' என்று பதில் கூறினால், மன்னருக்கு இதுநாள் வரை பைத்தியம் பிடித்திருந்தது என்பதை ஒப்புக் கொண்டதாகி விடும். அது மன்னரை அவமானப்படுத்துவதாகி விடும். 'இல்லை' என்று பதில் கூறினால் மன்னருக்கு இன்னமும் பைத்தியம் குணமாகவில்லை என்றாகிவிடும். அதுவும் மன்னருக்கு அவமானம். என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் எல்லோரும் திகைத்தனர்.

ராஜகுரு முன்வந்து "மன்னா, மன்னிக்க வேண்டும். இந்தக் கேள்விக்கு எங்களால் பதில் கூற இயலாது. நாங்கள் தோல்வியை ஒப்புக் கொள்கிறோம். புத்திசாலியான தெனாலிராமனே இதற்கு விடை கூறட்டும்" என்றார்.

மன்னரோ, தெனாலிராமன் சபையினர் முன் தன்னைப் பைத்தியம் என்று கூறி அவமானப்படுத்தி விட்டதாகக் கோபத்தின் உச்சியில் இருந்தார். எனவே அவர் பேசாமல் தெனாலிராமனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தெனாலிராமன் மன்னரை வணங்கினான். பின் அவரிடம், "மன்னா தங்களைப் பைத்தியம் எனக் கூறியதற்காகத் தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும். என் கேள்விக்கான விடை 'இல்லை' என்பதுதான். ஆம். மன்னா, தங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. ஆனால் அது இன்னமும் குணமாகவில்லை. நீங்கள் ஒரு இசைப் பைத்தியம், இலக்கியப் பைத்தியம், ஓவியப் பைத்தியம், நாடகப் பைத்தியம், பக்திப் பைத்தியம், நாட்டியப் பைத்தியம். இப்படிப் பல பைத்தியங்கள் உங்களைப் பிடித்திருக்கின்றன. நீங்கள் ஒருபோதும் இவற்றிலிருந்து குணமாகப்போவதில்லை. குணமாகவும் முடியாது. அதனால்தான் தங்களை ஒரு பைத்தியம் என்றேன்" என்றார்.

உடனே மன்னர் எழுந்தார். சபையினர் முன் தெனாலிராமனை அப்படியே அணைத்துக் கொண்டார். பின் ராஜகுருவையும் சபையோரையும் பார்த்து, "பார்த்தீர்களா, தான் புத்திசாலிதான் என்பதை ராமன் எவ்வளவு அழகாக நிரூபித்துவிட்டார்! இவரை முட்டாள் என்பவர்கள்தான் உண்மையில் முட்டாள்கள்" என்று கூறித் தெனாலிராமனுக்கு பல பரிசுகளைத் தந்து கௌரவப்படுத்தினார்.

சரி. அடுத்த மாதம் சந்திப்போம்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com