மாமாவின் புளுகு
எங்கள் உறவினர் ஒருவர் இருந்தார். நடுத்தர வயதினர். வாய்க்கு வாய் சிறுசிறு பொய்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார். யாரையும் கஷ்டப்படுத்தாத பொய். அவரைக் கண்டால் எங்களுக்கெல்லாம் ஒரே கிண்டல். அவரைப் 'புளுகு மூட்டை' என்று கேலி செய்வோம்.

மாமியும் அவரும் வருவார்கள். "என்ன ஆட்டோவில் வந்தீங்களா, எவ்வளவு கொடுத்தீங்க?" என்று கேட்டால். "இல்லே. டாக்சியில்தான் வந்தோம். அப்பா, என்னமா கொள்ளையடிக்கிறாங்க, திருட்டுப் பசங்க!" என்பார். மாமியோ, "என்னது இது, ஏன் இல்லாததையும், பொல்லாததையும் சொல்றீங்க... பஸ்ல இல்ல நாம வந்தோம். ஏன் இப்படிப் பொய் சொல்றீங்க?" என்று சொல்லி குட்டை உடைத்து விடுவார். மாமாவுக்கு முகம் தொங்கிப்போகும். ஆனால் இதற்காகவெல்லாம் பொய் சொல்வதை நிறுத்திவிட மாட்டார்.

அவருக்கு ஒரு மகள். 26 வயது. ஆனாலும் வரன் கூடி வராமல், கல்யாணம் ஆகாமல் இருந்தாள்.

ஒருநாள் மாமா, "இன்றைக்கு நம்ப ரமாவைப் பெண் பார்க்க வராங்க. ரெடியாயிருங்க. நான் ஆபிஸ் டியூடியில் பெங்களூரு போகணும். நீயே சமாளிச்சுக்க" என்று மாமியிடம் கூற, மாமி பயத்துடனும் கொஞ்சம் சந்தேகத்துடனும் "நிஜமாவா சொல்றீங்க?" என்று கேட்கவும் செய்தார். "இதுல என்ன விளையாட்டு? சீரியசா ஒரு விஷயத்தைச் சொல்றேன். நம்பமாட்டங்கறயே!" என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.

மாமி பரபரப்பாகி விட்டார். அக்கம்பக்கம் சில சிநேகிதர்கள் உதவியுடன் சாமான்களை ஏற்பாடு செய்து பூ, பழம், பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் தயார் செய்தார். பெண்ணோ, "என்னம்மா, எப்பப் பாத்தாலும் புடவை, நகைன்னு மாட்டிக்கிட்டு ஷோரூம் பொம்மை மாதிரி! எனக்குப் பிடிக்கலை. நான் ரொம்ப மனசு வெறுத்துப் போய் இருக்கேன். என்னை யாரும் பார்க்க வர வேண்டாம்" என்று சொல்லி அழுது கொண்டிருந்தாள்.

##Caption## "சரி, நீ சாதாரண டிரஸ் போட்டுக்கிட்டு இரு போதும். உன்னை யாரும் தொந்தரவு பண்ணலை" என்று கூறி மாமி சமாதானம் செய்தார். எல்லோரும் காத்துக் கொண்டிருந்தனர். பகல் 1 மணி இருக்கும். டிப்டாப் ஆக ஓர் இளைஞன் ஸ்கூட்டரில் வந்து இறங்கினான்.

"ராமன் சார் வீடு இதுதானே!" அவன் கேட்டான்.

"ஆமாம், ஆமாம். இதுதான், வாங்க வாங்க!" என்று ஏக வரவேற்பு அவனுக்கு. பையனைப் பேசவே விடவில்லை.

"உட்காருங்க. பெரியவங்க வேற யாரும் கூட வரலையா?"

"பெரியவங்க எதுக்கு? முதல்ல நான் பார்த்துட்டு ஓகே சொன்னா அப்புறமா அவங்க பாக்க வருவாங்க. எங்க ஃபேமிலி கொஞ்சம் பெரிசு. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டின்னு..."

"ஓஹோ. வெரிகுட். ரொம்ப நல்லதாப் போச்சு. நாங்களும் அப்படிப்பட்டவங்களைத் தான் பாத்துக்கிட்டு இருக்கோம். எல்லாம் எங்க அதிஷ்டம்தான்" என்றார் ஒருவர்.

மாமி சற்றே சங்கோஜத்துடன் டிபனும் காபியும் கொண்டு வந்து கொடுத்தார்.

"ஐய, இதெல்லாம் எனக்கு ஒன்றும் வேண்டாம். நான் சும்மா பாத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்..."

"இருக்கட்டும். சாப்பிடுங்க. பரவாயில்லை" மாமி கூறினார்.

இதற்குள் ரமா ஹாலுக்கு வந்து கை கூப்பினாள்.

"இவதான் எம் பெண் ரமா. டாடா கன்சல்டன்ஸியில் வேலை" என்று அறிமுகம் செய்து வைத்தார்.

"ஓ. டாடா கன்சல்டன்ஸியா, என பிரண்ட் கூட ராஜான்னு பேரு. அங்கதான் வேலை செய்யறான். உங்களுக்குத் தெரியுமா?"

பேச்சு கம்பெனி, படிப்பு என்று திரும்பி இருவரும் பேசிக் கொண்டேயிருந்தனர்.

டிபனைக் கொஞ்சம் சங்கோஜத்துடன் சாப்பிட்டு முடித்தவன், "வெரிகுட், நான் வந்த காரியம் இன்னும் முடியலை. இப்ப நான் பார்க்கலாம் இல்லையா வீட்டை..." என்று கேட்க...

"என்ன சொல்றீங்க நீங்க..." என அனைவரும் அதிர்ச்சியில் கோரஸாய் எழுந்துகொள்ள...

"இங்கே மாடி போர்ஷன் காலியா இருக்குன்னு என் பிரண்ட் சொன்னான். ஆபீஸ் விஷயமா இந்தப் பக்கம் வந்தேன். அப்படியே பாத்துட்டுப் போலாம்னு..." என்று அவன் இழுத்தான்.

"அய்யய்யோ, நீங்க வீடு பாக்க வந்தவரா...?" எல்லோர் குரலிலும் ஒரே அதிர்ச்சி. கொஞ்சம் அசடும், வெட்கமும் கூட.

அதன் பிறகு அந்தப் பையனைப்பற்றி மேற்கொண்டு விசாரித்தது, அவனையும், அவன் குடும்பத்தையும் ரொம்பவே பிடித்துப் போனது, அவனுக்கே ரமாவைத் திருமணம் செய்து வைத்தது எல்லாம் வேறு கதை.

எப்படியோ 'புளுகு மூட்டை' மாமா வழக்கம் போல் விளையாட்டாய்ச் சொன்ன பொய், ஏதோ ஒரு விதத்தில் நல்லதாக முடிந்து விட்டது.

தங்கம் ராமசாமி,
நியூஜெர்சி

© TamilOnline.com