கனெக்டிகட்டில் கிருஷ்ணாஷ்டமி
ஒருநாள் காலை கனெக்டிகட்டில் காலை ஐந்து மணி அளவில் சற்றுப் புழுக்கமாக உணர்ந்தோம். எழுந்து பார்த்தபோது மின்விசிறி நின்று போயிருந்தது. ஃபேனில் கோளாறு ஏதும் இருக்கலாம் என நினைத்து திரும்பப் படுத்தோம். திரும்ப ஆறுமணிக்கு எழுந்து பார்த்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மகனின் முகத்தில் கவலைக்கோடுகள். அமெரிக்காவில் மின்சாரம் இல்லாவிட்டால் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போகும் என்பதை உணர்ந்தோம். மகன் காரை எடுத்துப் போய் ஸ்டார் பக்ஸிலிருந்து காபியும் பேகலும் வாங்கிக் கொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றான். அன்று கிருஷ்ண ஜெயந்தி. நம்மூரில் செய்வது போல இங்கும் கோகுலாஷ்டமி கொண்டாட வேண்டுமென்று நினைத்து முதல்நாளே மிக்ஸியில் சீடைக்கு மாவு அரைத்து வைத்திருந்தேன். வெல்லச் சீடைக்குப் பதமாக வெல்லப் பாகில் மாவு சலித்து வைத்திருந்தேன். அமெரிக்காவிலிருக்கும் கிருஷ்ணனுக்கு வெல்லச் சீடையும் உப்புச் சீடையும் முறுக்கும் பிடிக்காதா? அதனால்தான் மின் இணைப்பைத் துண்டித்தானா? ராத்திரி பன்னிரண்டு மணிக்கு கேக் வெட்டி ஹேப்பி பர்த்டே கிருஷ்ணா என்று பாடி சாக்லேட் நிவேதனம் செய்தால் போதுமா? இப்படி மனதில் எண்ணங்கள் ஓடின.

ஜில்லென்ற நீரில் குளித்தோம். முதல் நாள் இரவு செய்த சப்பாத்தி நல்ல வேளையாக மீதம் இருந்தது. ஊறுகாய் மிளகாய்ப்பொடியுடன் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். அருகிலேயே இருந்த 'Stop and Shop'-க்குச் சென்று பழங்கள் வாங்கிக் கொண்டோம். வெல்லமும் தேங்காயும் துருவி அவலில் போட்டு பிசறி வைத்தேன். மகாராஜபுரம் சந்தானமும் டி.எம்.எஸ்ஸும் சீர்காழி கோவிந்தராஜனும் பாம்பே சகோதரிகளூம் அருணா சாயிராமும் iPod மூலம் கிருஷ்ணன் புகழைப் பாடிய வண்ணம் இருந்தார்கள். மாலை ஆறு மணிக்கு கிருஷ்ணன் படத்தை அலங்கரித்து, பூஜை செய்து வெண்ணெய், தயிர், பால், பழங்கள், அவல் வைத்து நிவேதனம் செய்தோம். திடீரென்று வந்த மின் இணைப்பால் வீடு ஜகஜ்ஜோதியானது. கிருஷ்ணன், நாங்கள் விரதமிருந்து சமர்ப்பித்த ஆரோக்கியமான நைவேத்தியத்தை அங்கீகரித்த மாதிரி மனசுக்குத் தோன்றியது. "சர்க்கரை நோயாளிகளான உங்களுக்கு ஆகாத சீடையும் முறுக்கும் எனக்கு எதற்கு?" என்று கண்ணன் நினைத்தானோ!?

உமா கண்ணன்,
கனெக்டிகட்

© TamilOnline.com