இன்னும் தேடுகிறேன்...
இதில் வரும் நிகழ்வுகள் 1980களில், எனது பள்ளி நாட்களில், நடந்தவை. நெல்லைக்கு அருகில் சங்கர்நகர் என்னும் ஒரு சிமெண்டு கம்பெனியின் காலனியில் வசித்து வந்தோம். தாழையூத்து என்பது அந்த ஊருக்குப் பெயர். சிறிய ஊர். எதுவானாலும் வாங்கத் திருநெல்வேலி ஜங்ஷன் செல்ல வேண்டியிருக்கும். அப்பொழுதெல்லாம் வீட்டுப் பெரியவர்கள் அவ்வளவாக ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட மாட்டார்கள். நானும் என் நண்பனும் மட்டும் நெல்லை ஜங்ஷனில் உள்ள ஹோட்டல்களுக்கு செல்லுவோம். நெல்லை பஸ் ஸ்டாண்டுக்கு அருகில், ம.தி.த. ஹிந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி வளாகத்துக் காம்பவுண்டுச் சுவரை ஒட்டி 'ராஜ் கபே' இருந்தது. சாப்பாடு பிரமாதமாக இருக்கும். டிபன் வகைகள் மிக ருசியாக இருக்கும். குறிப்பாக தோசையைப் பற்றிச் சொல்ல வேண்டும். ரவா, வெங்காயம் என்று வகைவகையாய்க் கிடைக்கும். வாழையிலையில் பரிமாறுவார்கள். தொட்டுக்கொள்ளத் தேங்காய் சட்னி, சாம்பார், மிளகாய்ப் பொடி இருக்கும். அந்த பூமியில் விளைந்த அரிசியின் மகிமையா அல்ல அது செய்பவரின் பக்குவமா தெரியாது, அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த டிபனுக்கு பிறகு ஒரு காப்பி குடித்தால் அது இன்பத்தின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்லும். பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் இருந்த அந்த ஓட்டலை ஒரு நாளும் காலியாகப் பார்தது கிடையாது.

ஒரு சமயம் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் வேலை தேடி நெல்லைக்கு வந்தார். அவருக்கு ராஜ் கபேயில் சூப்பர்வைசர் வேலை கிடைத்தது. 'ஆஹா! பழம் நழுவிப் பாலில் விழுந்துவிட்டது' என்று நினைத்தேன். அந்த உறவினர் பேரைச் சொல்லி ராஜ் கபேக்குப் பலமுறை சென்றிருக்கிறேன், ராஜ உபசாரத்துடன் வரவேற்புதான்!

பக்கத்தில் பாரதியார் சிலை ஒன்று இருக்கும். அதை சுற்றிச் சாலையோரக் கடைகள் சிலையை மறைத்துக் கொண்டிருக்கும். அது பாரதியாரின் நூற்றாண்டு என்பதால் காக்கை, குருவிகள் எச்சமிட்டிருந்த அவர் சிலையைச் சுத்தம் செய்யக் கோரி மக்கள் கலெக்டருக்கு மனு கொடுத்தனர். “அவர யாரு காக்கை, குருவி எங்கள் ஜாதி என்று பாடச் சொன்னது?” என்று நண்பனிடம் வேடிக்கையாகச் சொல்லுவேன். என்ன அதிசயமோ முனிசிபாலிடி உடனே நடவடிக்கை எடுத்தது.

அந்த ஆண்டு நெல்லைக்கு ஒரு வட இந்தியர் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் சாலை போக்குவரத்தைச் சீரமைக்கும் பணி துவங்கியது. அப்போதுதான் அந்த திடுக்கிடும் சம்பவம் நடந்தது.

##Caption## நானும் நண்பனும் வழக்கம் போல் ஜங்ஷன் வந்திறங்கினோம். ராஜ் கபேயை நோக்கி நடந்தோம். ராட்சஸ புல்டோஸர்கள், ராஜ் கபேயை இடித்துக் கொண்டிருந்தன. அக்கம்பக்கத்துச் சாலையோரக் கடைகள் எல்லாம் அகற்றப்பட்டிருந்தன. பக்கதில் ஒருவரிடம் கேட்டபோது “தம்பி கவர்மெண்டு நிலத்த இத்தனை வருஷமா ஆக்கிரமிச்சுக் கடை போட்டிருந்தாங்களாம், அதான் இடிக்கானுங்க” என்றார்.

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வளவு பெரிய ஹோட்டல் இத்தனை வருஷங்களாக எப்படி இங்கே நடந்தது? இதில் யார் சரி, யார் தவறு, என்றெல்லாம் நண்பனோடு விவாதித்தேன் முடிவில்லாமல். சில மாதங்களுக்குப் பின்னர் வேறோர் இடத்தில் அதை மீண்டும் நிறுவப் போகிறார்கள் என்று ஒரு பேச்சு இருந்தது. நாங்களும் சென்னைக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டதால் என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியாது.

ஆனால் ஒன்று நிச்சயம். இன்று எவ்வளவோ பெரிய உணவகங்கள் இருந்தாலும் ராஜ் கபே டிபனுக்கு இணையான சுவையை நான் அமெரிக்கவிலும் சரி இந்தியாவிலும் சரி இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். காணக் கிடைக்கவில்லை.

சாம் வெங்கட்
ஃபோல்ஸம், கலிஃபோர்னியா.

© TamilOnline.com