ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Madhurabharati
அதிபர் ஒபாமாவுக்கு அடுத்தபடியாக மிகப் பிரபலமாகப் பேசப்படுவது இந்த H1N1 வைரஸ்தான் என்றால் மிகையாகாது. ஏப்ரல் மாதத்தில் மனித இனத்தைத் தாக்க ஆரம்பித்த இந்த வைரஸ் இன்னமும் பரவிக் கொண்டிருக்கிறது. வரும் இலையுதிர் காலத்தில் இது மேலும் பரவலாம் என்ற சந்தேகம் உண்டு. இதற்கான தடுப்பு ஊசி தயார் செய்யப்படுகிறது.
H1N1 வைரஸ் என்றால் என்ன?
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் பன்றிகளிடம் (Swines) பரவிவரும் ஒரு வைரஸின் மரபணுக்கள் இந்த வைரஸிலும் காணப்படுகிறது. அதனால் இது பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. மேலே செய்த ஆராய்ச்சிகள் இந்த வைரஸில் பறவை மற்றும் மனித இனங்களைத் தாக்கும் மரபணுக்களும் கண்டுபிடிக்கப் பட்டன. அதற்குப் பின்னர் இது H1N1 என்று வழங்கப்படுகிறது.
H1N1 வைரஸ் தாக்கினால் ஏற்படும் அறிகுறிகள்
சாதாரணமாக ஏற்படும் வைரஸ் ஜுரங்களைப் போலவே இந்த வைரஸும் உடல் உபாதை அளிக்கும். ஃப்ளூ ‘Flu' என்று சொல்லப்படும் வைரஸ் ஜுரம் உடல் வலி ஏற்படுத்துவதில் பிரபலமானது. அதே வரிசையில் இந்த H1N1 வைரஸ் தாக்கக்கூடியது.
##Caption## - தொண்டை வலி - இருமல், சளி - தசைகள் முறுக்கி உடல்வலி - காய்ச்சல் - வாந்தி, பேதி - தலைவலி - நடுக்கம்
இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இது சாதரண ஜுரம் போலவே இருப்பதால் இதனை வித்தியாசப்படுத்தி அறிவது கடினம். இந்த நோயின் அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னர் முதல் 5-7 நாட்கள் வரை பரவலாம். சளி, இருமல் மூலமாகவும், நோய்வாய்ப்பட்டவர் தொட்ட மேசை, நாற்காலி போன்றவற்றை நாம் தொடுவதின் மூலமாகவும் பரவலாம்.
H1N1 வைரஸ் யாரைத் தாக்கும்?
- கர்ப்பிணிப் பெண்கள் - 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் - 25 வயதுக்கு குறைவானவர்கள் - 25 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் - நோய்களின் காரணமாக எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள். (நீரிழிவு நோய், ஆஸ்த்துமா, நுரையீரல் உபாதை உடையவர்கள், மருந்துகள் மூலம் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள்)
65 வயதுக்கு மேலானவர்களுக்கு ஃப்ளூ வைரஸ் தாக்கும் அபாயம் இருந்தாலும், இந்த H1N1 வைரஸ் அவர்களை அதிகமாகத் தாக்குவதில்லை. இதற்குத் தேவையான 'antibody' இவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. 25 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்களையே இந்த வைரஸ் அதிகமாகத் தாக்குகிறது.
H1N1 வைரஸ் தாக்கினால் செய்ய வேண்டியவை
- சுத்தம், சுத்தம், சுத்தம்! இதுவே முக்கியம். மூக்குச் சளியை காகிதக் கைக்குட்டையால் துடைத்து (disposable tissue) உடனடியாகக் குப்பையில் எறிய வேண்டும்.
- கூடுமானவரை கை, நாற்காலி, மேசை, புழங்கும் இடம் இவை இருமல், சளி போன்றவையால் மாசுபடாதபடிச் சுற்றுப்புறத்தைத் தூய்மை செய்ய வேண்டும்.
- சோப்புப் போட்டு நல்ல தண்ணீரில் கை கழுவ வேண்டும்.
- எப்போது மூக்கைத் தொட்டாலும் கையைச் சோப்புப் போட்டு கழுவுவதின் மூலம் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியும்.
- சோப்பு கிடைக்காத இடங்களில் சாராயத்தில் செய்த ஜெல்லினால் கையைத் துடைக்க வேண்டும்.
- வைரஸின் ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்டவுடனே, வீட்டிலேயே இருத்தல் உசிதம். மருத்துவரை நாட வேண்டிய அவசியமில்லை. கடைத்தெரு, கோயில், வேலை, பள்ளிக்கூடம் என்று செல்லாமல் விடுப்பு எடுத்தல் நல்லது. இல்லையென்றால், இந்த வைரஸ் மற்றவர்களுக்குப் பரவுவதன் மூலமும், வீரியம் அதிகரிக்கவும் ஏதுவாகும். விடுப்பு எடுப்பவர்கள் வீட்டுக்குக் கறிகாய் வாங்கி வருகிறேன், துணிக்கடைக்குச் செல்கிறேன் என்று கிளம்புவது நல்லதல்ல. தகுந்த முறையில் ஓய்வு எடுத்துக் கொள்வதின் மூலம் இந்த வைரஸை முளையிலேயே கிள்ளி விடலாம்.
- சின்னக் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் நோய்வாய்ப்பட்டவர் இருக்கும் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
எப்போது மருத்துவரை நாட வேண்டும்?
##Caption## மூச்சு வாங்கினாலோ, விடாமல் வாந்தி பேதி ஏற்பட்டாலோ, சோர்வு அடைந்து காணப்பட்டாலோ மருத்துவரை நாட வேண்டும். சின்னக் குழந்தைகளைச் சற்று முன்னரே மருத்துவரிடம் காட்டிவிட வேண்டி வரலாம். இவர்கள் தொடர்ந்து அழுகை, தூங்கித் தூங்கி விழுதல் போன்ற அறிகுறிகளும் காட்டலாம். வைரஸ் அறிகுறிகள் சரியாகிப் பின்னர் அதிகக் காய்ச்சல், இருமல் ஏற்பட்டாலும் மருத்துவரை நாடுவது உசிதம்.
வீட்டில் இருப்போருக்கு வைரஸ் நோய் தாக்கினால் மற்றவர் செய்ய வேண்டியவை என்னென்ன?
வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் நோய் தாக்கினால், மற்றவர்கள் வேலைக்குச் செல்லலாம். ஆனால் சுத்தம் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கூடுமானவரை மற்றவர்களை வீட்டுக்கு அழைக்கமால் இருப்பது நல்லது. கையை அவ்வப்போது சோப்புப் போட்டு கழுவ வேண்டும். மேசை, நாற்காலி, கட்டில் என்று எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். அதற்காக நோய்வாய்ப் பட்டவரை ஒதுக்குவது அவசியமில்லை. அவர்கள் உபயோகிக்கும் தட்டு, டம்ளர்களை நன்கு கழுவி உபயோகிக்கலாம். அவர்களுக்குச் சத்துள்ள ஆகாரம் செய்து தரவேண்டும்.
அந்தக் காலத்தில் அம்மை ஏற்பட்டால் மற்றக் குழந்தைகளை அழைத்து அதன்மூலம் அம்மை பரவி, தீவிரக் குறைவு ஏற்படுத்துவது பாட்டிமார்களுக்குப் பரிச்சயமாக இருக்கலாம். அதுபோல 'swine flu party' செய்வதை CDC (Centers for Disease Prevention and Control) கண்டிக்கிறது. இது யாரைத் தீவிரமாகத் தாக்கும் என்பது தெரியாததால் கூடுமானவரை நண்பர்களை அழைப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் பலபேர் இறந்து விடுவதால் இந்த வைரஸ் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
H1N1 வைரஸ் தீர்வு மருந்துகள் என்னென்ன?
இந்த வைரஸுக்குத் தீர்வு மருந்துகள் இரண்டு உள்ளன. 'Tamiflu' என்று சொல்லப்படும் வைரஸ் மருந்து (Oseltamivir) உபயோகிக்கலாம். இதைத் தவிர Relenza'(Zanamivir) என்று சொல்லப்படும் மருந்தும் உபயோகிக்கலாம். இவை நோயின் ஆரம்ப அறிகுறிகளில் முதல் 2 நாட்களுக்குள் அளிக்கப்பட்டால் தீவிரம் குறையும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு முதலில் அளிக்கப்படவேண்டும். Tamiflu-வை ஒரு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம். Relenza-வை ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம். ஆனால் நோயின் தீவிரம் உணர்ந்து மருத்துவர்களே இந்த மருந்தைத் தர முடியும். தீவிரம் அதிகம் ஆனவர்களுக்காக இந்த மருந்து சேமித்து வைக்கப்படுகிறது.
மேலும் நோய்த் தடுப்பு மருந்தாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அளிக்கப்படலாம்.
H1N1 வைரஸ் தடுப்பு ஊசி எப்போது யாருக்கு அளிக்கப்பட வேண்டும்?
தற்போது அமெரிக்காவிலேயே இந்தத் தடுப்பு ஊசி தயார் செய்யப்படுகிறது. சாதரணமாக Flu தடுப்பு ஊசி அக்டோபர் மாதத்தில் அளிக்கப்படும். இந்த ஊசி flu vaccine உடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இது எடுப்பதினால் சாதாரண ஃப்ளூவுக்கு எதிராகப் பாதுகாப்பு கிடைக்காது. மேலும் Flu vaccine எல்லோருக்கும் உகந்தது. இந்தத் தடுப்பு ஊசி ஒரு சிலருக்கு முக்கியமானது. CDC நிறுவனம் இந்தத் தடுப்பு ஊசியை முக்கியமாக ஒரு சிலருக்கு முதலில் அளிக்கும்படி அறிவுறுத்துகிறது. அவர்கள் பின்வருமாறு:
- கர்ப்பிணிப் பெண்கள் - 6 மாதத்திற்குக் குறைவான கைக்குழந்தை வசிக்கும் வீட்டில் இருப்பவர்கள் - மருத்துவமனை, அவசர சிகிச்சை பகுதிகளில் வேலே செய்பவர்கள் - 6 மாதம் முதல் 24 வயது வரையிலானவர்கள் - 25 முதல் 64 வயது உடையவர்களில், நோயின் காரணமாகவோ, மருந்தின் காரணமாகவோ எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால் அவர்களுக்கும் இந்தத் தடுப்பு ஊசி வழங்கப்பட வேண்டும்.
இவர்களைத் தவிர, மற்றவர்களுக்குத் தேவைப்பட்டால் வழங்குவதற்கு மேலும் தடுப்பு ஊசி உற்பத்தி செய்யப்படலாம். அதுவரை மேற்கூறியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
- சுத்தமாக இருத்தல்
- கூடுமானவரை நோய்வாய்பபட்டவரிடம் நெருங்கிப் பழகாமல் இருத்தல்
- சாதாரண சளி இருமல் ஏற்பட்டாலும், கையை உடனடியாக சோப்புப் போட்டு கழுவுதல்
- விடுமுறைக் காலத்தில் கூட்டம் சேரும் இடங்களில் அதிக முன்னெச்சரிக்கை தேவை.
- விமானம், கப்பல் பயணம், சினிமாக் கொட்டகை போன்ற பொது இடங்களில் கூடுமானவரை கதவு, மாடிப்படி போன்றவற்றின் கைப்பிடிகளைத் தொட்டால் கை கழுவுதல் நல்லது. சோப் இல்லையெனில் எரிசாராயத்தில் தயார் செய்யப்பட்ட சுத்தப்படுத்தும் மருந்தின் மூலம் கையைக் கழுவ வேண்டும். குறிப்பாகப் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்.
- இதையும் மீறி நோய் தாக்கினால் கூடுமானவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகை, காய்கறி, பால், ஜுரமருந்து போன்றவற்றை வீட்டில் வைத்துக்கொள்வது நல்லது.
- முகமூடி அணிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த நோய் இருக்கிறது என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டவரிடம் பழகும்போது, அவர்களைக் கண்காணித்து கொள்ளும்போது முகமூடி தேவைப்படலாம்.
உலகளாவிய நோயின் தாக்கம்
இந்த நோய் மெக்ஸிகோ, அமெரிக்க நாடுகளில் ஆரம்பித்து தற்போது உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்குச் செல்வோருக்கு விமானத்தில் சில பரிசோதனைகள் தேவைப்படலாம். பயணிகள் எல்லோருக்கும் வினாத்தாள் விமானங்களில் வழங்கப்படுகின்றது. சுங்கப் பரிசோதனைக்கு முன்னர், முகத்திரை அல்லது மூக்குமுடி அணிந்த விமான அதிகாரிகள் இந்தக் காகிதங்களை வாங்கிப் பரிசீலித்து, அதன் பின்னர் குறிப்பிட்ட சிலரைப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வர். கூடுமானவரை இருமல், சளி இருப்பவர்கள் விமானப் பயணத்தை ஒத்திப்போடுவது நல்லது.
மேலும் விவரங்களை www.cdc.gov என்ற வலைதளம் அளிக்கும். CDC
இந்த நோயின் தீவிரத்தைக் கண்காணித்து அதை வாராவாரம் புதிய தகவல்களை அளித்து வருகிறது. ( target="_blank">www.cdc.gov). அவ்வப்போது இந்த ஊரில் மரணம், அந்த ஊரில் தீவிரம் என்று செய்திகளைப் படித்துக் குழம்ப வேண்டாம். மற்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறையும் போது, இந்த வைரஸ் தீவிரமாகத் தாக்க வல்லது. நல்ல உடல நிலையில் இருப்பவர்களில் பலருக்கு இந்த நோய் மற்றுமொரு வைரஸாக, சாதாரண ஜலதோஷம் போலவே தாக்ககூடியது. ஒரு வருடத்தில் ஃப்ளூவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவு. அதேபோல் இந்தியா போன்ற நாடுகளில் மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகம். ஆகையால் ஊடகங்கள் செய்யும் அமளியில் பயப்படாமல், சுத்தம் சுகம் தரும் என்பதை மனத்தில் கொண்டு, அவரவர் வீட்டில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
நம்பகமான வலைதளங்களின் வழியே மட்டும் விவரங்களை அறிவோம். தேவைப்பட்டால் மருத்துவரை நாடுவோம். எதிர்வரும் இலையுதிர் காலத்தைத் துணிவோடு எதிர்கொள்வோம்.
மரு.வரலட்சுமி நிரஞ்சன் |