ஸ்பினாச் பனீர் சோமாசி
தேவையான பொருட்கள்
ஸ்பினாச் கீரை (பொடியாய் நறுக்கியது) - 2 கிண்ணம்
பனீர் - 6 துண்டுகள்
பச்சை மிளகாய் - 5
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 2 பல்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க
கோதுமை மாவு - 1 1/2 கிண்ணம்

செய்முறை
கோதுமை மாவை துளி உப்புப் போட்டு கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கும் போது ஸ்பினாச்சையும் சேர்க்கவும். உப்புச் சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்து பனீரைத் தூளாக்கிப் போடவும். தண்ணீர் இருந்தால் அரிசி மாவைப் பூரணத்தில் தூவி கெட்டியாக்கிக் கொள்ளவும்.

கோதுமை மாவைச் சிறு அப்பளமாகத் தேய்த்து நடுவில் ஸ்பினாச் கீரைப் பூரணம் வைத்து அரை வட்டமாக மூடி ஓரத்தில் தண்ணீர் சிறிது தடவி ஒட்டி, பூரணம் வெளியே வராமல் மூடவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சோமாசிகளைப் போட்டுப் பொன்னிறமாய்ப் பொரித்து எடுக்கவும். மிளகாய்க்கு பதில் மிளகாய்ப் பொடி போட்டும் செய்யலாம்.

பி.கு:- பருப்புகளை ஊற வைத்து பருப்பு உசிலி போல் வதக்கிப் பூரணம் வைத்தும் கோதுமை மாவில் பருப்பு சோமாசி செய்யலாம்.

எல்லாம் ரவையில் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும். கோதுமை, மைதாவில் செய்தால் நேரம் ஆக ஆக நசத்துவிடும். சுடச்சுடச் சாப்பிட்டால் சுவையோ சுவை!

தங்கம் ராமசாமி,
நியூஜெர்ஸி

© TamilOnline.com