கடலைப்பருப்பு சோமாசி
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 1/2 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 மேசைக் கரண்டி
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறிது
பூண்டு - 3 பல்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - சிறிதளவு
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
கோதுமை மாவில் துளி உப்புப் போட்டுக் கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். வெறும் வாணலியில் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை இவற்றை வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். கடலைப்பருப்பை வேகவிட்டுக் குழையாமல் பிசைந்து கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், வாணலியில் தாளித்துப் பருப்பையும், மசாலாப் பொடி, இஞ்சி, பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கிப் பூரணம் செய்து கொள்ளவும்.

கோதுமை மாவை அப்பளமாக இட்டு நடுவில் கடலைப்பருப்பு, பூரணம் 1 மேசைக்கரண்டி வைத்து அரை வட்டமாக வடித்து ஓரம் பிரியாமல் துளி தண்ணீர் விட்டு அழுத்தி மூடவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சோமாசியைப் பொன்னிறமாகப் பொரித்துச் சாப்பிடவும். சூடாகச் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
நியூஜெர்ஸி

© TamilOnline.com