க்ரேஸி மோகன்

ஒலி வடிவத்தில் கேட்க

குழந்தைகள் புத்திசாலிகள்...


பேங்க் கவுன்ட்டர்-என்கவுன்ட்டர்


நடுராத்திரி நாய் சமாசாரம்


அமெரிக்கத் தமிழர்களைப் பற்றி


எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி...


எழுத்தாளர்களும் நகைச்சுவை எழுத்தும்


எது நகைச்சுவை?


"நீங்க ரொம்ப நாட்டி" என்பார் குஷ்பூ. "நீங்க என்ன கம்மி நாட்டியா?" என்பார் பதிலுக்குக் கமல். படம், 'மைக்கேல் மதன காமராஜன்'. இப்படி, யதார்த்தமான, சந்தேகிக்க முடியாத இடங்களில் கிச்சுகிச்சுவை நுழைத்துத் திரைப்படங்களைச் சிரிப்புக் கோலாகலம் ஆக்கியவர் க்ரேஸி மோகன். இவர் எழுதிய 'க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகம் பெற்ற வெற்றி, மோகனை 'க்ரேஸி' ஆக்கியது. 'சதிலீலாவதி', 'பம்மல் கே. சம்மந்தம்' என்று எந்தப் படங்களிலெல்லாம் வயிறுவலிக்கச் சிரித்தோமோ, அவற்றுக்கெல்லாம் வசனம் க்ரேஸிதான். 1979ல், சரியாக 30 வருடங்களுக்கு முன், சொந்த நாடகக் குழுவான 'க்ரேஸி கிரியேஷன்ஸ்' தொடங்கினார். தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நாடகம் போட்டுவிட்டார். 6000 நாடகக் காட்சிகள், டி.வி. சீரியல் 1500 எபிசோடுகள், 40 படங்களுக்கு மேல் கதை, வசனம், பத்திரிகைகளில் சிரிப்புக் கதைகள் என்று இடைவிடாத படைப்புகள், பாராட்டுகள், விருதுகள். இது தவிரவும் நேரம் கிடைத்த போது கவிதை, ஓவியம்! நமது நகைச்சுவைச் சிறப்பிதழுக்கு நேர்காணல் செய்ய க்ரேஸி மோகனைவிட யார் பொருத்தமானவர்! அந்தச் சந்திப்பிலிருந்து...

***


கே: மோகன் எப்படி 'க்ரேஸி' ஆனார் என்று சொல்லுங்களேன்!

ப: முதற் காரணம் குடும்பம். நான் அப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி என்று மிகப் பெரிய ஜனசமுத்திரத்தில் வளர்ந்தவன். குடும்பப் பொறுப்புகளையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். நிறைய நேரம் கிடைத்தது. அதில் இலக்கியம், கதை, கவிதை, ஓவியம் என்று எனது ஆர்வங்களை வளர்த்துக் கொண்டேன். நாடக ஆர்வம் பின்னால் வந்ததுதான். இரண்டாவது மிக முக்கிய காரணம் எனது நண்பன் சு. ரவி. எனக்குள் இருக்கும் ஆற்றலை அடையாளம் கண்டு என்னை ஊக்கப்படுத்தியவன். என்னுடன் பள்ளியிலும், பிறகு எஞ்சியனிரிங் கல்லூரியிலும் படித்தான். எஞ்சினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, என் தம்பி பாலாஜி, விவேகானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது இண்டர் காலேஜ் நாடகப் போட்டி வந்தது. நான் 'கிரேட் பாங்க் ராபெரி' என்று ஒரு கதையை எழுதிக் கொடுத்தேன். அது செலக்ட் ஆகி, எனக்கு 'பெஸ்ட் ஆக்டர்', 'பெஸ்ட் ரைட்டர்' எல்லாப் பரிசும் கிடைத்தது. பரிசு கொடுத்தவர் கமல்ஹாசன். அதுதான் ஆரம்பம்.

பிறகு என் தம்பி தனது காலேஜ் ட்ரூப்புக்காக அடிக்கடி நாடகம் கேட்க ஆரம்பித்தான். நானும் எழுதிக் கொடுத்தேன். அவை காலேஜ் அளவில் மிகப் பெரிய ஹிட் ஆகின. குமுதத்தில் வளர்ந்து வரும் கலைஞர்கள் என்று என்னைப் பற்றியும் பாலாஜியைப் பற்றியும் போட்டோவுடன் செய்தி வந்தது. 1979ல் நான் சொந்த ட்ரூப் ஆரம்பித்தேன். 'க்ரேஸி கிரியேஷன்ஸ்' உருவானது. முதல் நாடகம் 'அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்'.

கே: ஒரு நல்ல வேலையை விட்டுவிட்டு நாடகத்துறையில் நீங்கள் நுழைந்தபோது குடும்பத்தில் என்ன சொன்னார்கள்?

##Caption## ப: ஜாயிண்ட் ஃபேமிலியாக இருந்ததால் நான் பிழைத்தேன். நான் வேலையை விட்டதே யாருக்கும் தெரியாது. நான் ஒவ்வொரு நாளும் அதைச் சொல்ல ட்ரை பண்ணுவேன், ஆனால் யாருமே அதை காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள். டேய் என்ன இன்னிக்கு ஆஃபிஸ் போகலையா என்று கேட்பார்கள். ஆக்சுவலா அது என்னன்னா... என்று நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள் சரி சரி என்று கிளம்பிப் போய் விடுவார்கள். எனக்கு வேலை போய் விட்டது என்பதைச் சொல்லக் கூட முடியாமல் ரொம்ப நாள் திண்டாடினேன்.

எல்லோரும் சொல்வார்கள், மோகன் சுந்தரம் கிளேட்டன் வேலையை விட்டதற்குக் காரணம் சினிமா ஆசை, நாடக ஆர்வம் என்று. ஆனால் அது உண்மையில்லை. உண்மையான காரணம் நாய் பயம். சுந்தரம் கிளேட்டனில் நைட் ஷிப்ட் முடித்து வீட்டுக்கு வரும் போது ஜெமினியில் ஒரு க்ரூப் நாய் என்னை பிடித்துக் கொள்ளும். அப்படியே ஸ்டெல்லா மாரிஸ் வரை கூடவே வந்து, என்னை அங்கே விட்டுவிட்டுப் போய்விடும். அங்கே இன்னொரு க்ரூப் நாய் காத்துக் கொண்டிருக்கும். அது ம்யூசிக் அகாடமி வரைக்கும் கொண்டு வந்து விடும். பின் அங்கிருந்து வீடு. எனக்காகவே பிளான் பண்ணி அந்தக் காலத்தில் நாய்கள் க்ரூப் வாழ்ந்து வந்திருக்குமோ என்று சந்தேகம். ரிலே ரேஸ் மாதிரி என்னை அவை சுற்றிச்சுற்றி வந்தன. என்னால் முடியவேயில்லை ரொம்ப பயமாகிப் போய்விட்டது. குரைக்கிற நாய் கடிக்காது என்பதெல்லாம் பொய். நான் நம்பவே மாட்டேன். நாய் பத்தின எந்த பழமொழியையும் நான் நம்ப மாட்டேன். எனக்கு நாய் பயம் ரொம்ப ஜாஸ்தி. அதனால்தான் வேலையை விட்டேன். அதுதான் உண்மை.

கே: க்ரேஸியின் திரையுலகப் பிரவேசம் பற்றிச் சொல்லுங்கள்...

ப: நான் பி.ஈ., எம்.டெக். படிப்பை முடித்ததும் சுந்தரம்-கிளேட்டனில் வேலைக்குச் சேர்ந்தேன். எழுத்தும், டிராமாவும் நன்கு போய்க் கொண்டிருந்தன. விகடனில் நாடகம், தொடர்கள் என்று எழுதிக் கொண்டிருந்தேன். விகடன் ஆபிஸுக்குப் போவேன். அது மாய உலகம் போல இருக்கும். ராவ், சுதாங்கன், மதன், வீயெஸ்வி என்று எல்லோரும் ஒரே கலகலப்பாக இருப்பார்கள். காலையில் எழுந்து பாலசந்தர் சார் வீடு.அவர், நான் விகடனில் எழுதிய 'மேரேஜ் மேட் இன் சலூன்' நாடகத்தை 'பொய்க்கால் குதிரை' என்னும் பெயரில் சினிமாவாக எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஜாலியாக டிபன் எல்லாம் சாப்பிட்டுவிட்டு, "என்ன மோகன் டயமாச்சு, நீ ஆபிஸ் கிளம்பு" என்பார். எனக்கு ரொம்பப் பொறாமையாக இருக்கும், 'என்னடா இது, இப்படி எல்லாரும் ஜாலியாக இருக்கிறார்கள். நாம் மட்டும் எழுத்தில் இவ்வளவு ஆர்வத்தை வைத்துக்கொண்டு இப்படிக் கஷ்டப்படுகிறோமே' என்று.

கிளேட்டனில் வேலை இயந்திரத்தனமாகப் போய்க் கொண்டிருந்தது. ஒருமுறை மதனோடு ஹ்யூமர் கான்ஃபெரன்ஸிற்காக ஹைதராபாத் போயிருந்தேன். அவரிடம் எனது ஆர்வத்தைச் சொன்னேன். மதன் அதை அப்படியே விகடன் எம்.டி.யிடம் சொல்லிவிட்டார் போலும். மறுநாள் எம்.டி என்னிடம் "என்ன மோகன் ரொம்ப வருத்தப்பட்டியாமே, ஆனந்த விகடனில் சேந்துர்றியா?" என்றார். வேடிக்கையாக எழுதுவேன், அவ்வளவுதான். பத்திரிகை அனுபவம் கிடையாது. ஆனாலும் என்னை உதவி ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டு, நான் சுந்தரம் கிளேட்டனில் வாங்கிய அதே சம்பளத்தைக் கொடுத்தார் எம்.டி. இன்றுவரை என் எழுத்து எங்கு பிரசுரமானாலும் அதற்கான நன்றி விகடனுக்குத்தான்.

விகடனில் இரண்டு வருடகாலம் வேலை பார்த்திருப்பேன். ஒருநாள் நான் எனது துணிகளை இஸ்திரி போடுவதற்காக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தேன். வழியில் உள்ள சிமெடரியில் இருந்து ஒருவர் என்னைக் கை அசைத்துக் கூப்பிடுவது தெரிந்தது. அங்கே ஏதோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. சந்தேகத்துடன் அருகில் போனால், அது கமல்! 'சத்யா' ஷூட்டிங் அது. என் நாடகங்கள் சிலவற்றைக் கமல் பார்த்திருக்கிறார். என்னைப் பற்றிக் கேள்விப்பட்டுமிருக்கிறார். சிறிது நேரம் என்னைப் பற்றி, வேலையைப் பற்றி எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஒருநாள் கமல் ஆபிஸிலிருந்து போன். 'நீங்கள் சாயங்காலம் ஃப்ரீயாக இருந்தால் வாங்களேன்!' என்றார் கமல். சரி, கமல் கூப்பிடுகிறார், ஜாலியாகப் பொழுதைக் கழித்துவிட்டு வரலாம் என்று போனேன். நான் 'அபூர்வ சகோதரர்கள்' என்று ஒரு படம் எடுக்கப் போகிறேன். அதற்கு நீங்கள் எழுத வேண்டும் என்றார். சரி என்றேன். 'சரி நீங்க எங்க வேலை பார்க்கறீங்க?' என்றார். 'முன்னால கிளேட்டன்ல இருந்தேன். அதை விட்டுட்டு இப்போ விகடன்ல இருக்கேன்' என்றேன். 'அப்போ விகடனையும் விட்டுடுங்களேன்' என்றார் கமல். உடனே எனக்குக் கமலை ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது. யாராவது என்னை வேலையை விட்டுவிடச் சொன்னால் அவர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். காரணம், க்ரேஸி மோகன் பயங்கர லேஸி மோகன். கமலோடு 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வேலை செய்தேன். அது பெரிய ஹிட். தொடர்ந்து 'மைக்கேல் மதன காமராஜன்', 'மகளிர் மட்டும்', 'சதி லீலாவதி', 'தெனாலி', 'அவ்வை ஷண்முகி', 'பம்மல் சம்பந்தம்' என்று தொடர்ந்து எல்லாமே சூப்பர் ஹிட். ரஜினி, பிரபு, சூர்யா என்று பல படங்களுக்கு எழுத ஆரம்பித்து அது இன்றளவும் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு ரைட்டர், ஆக்டர் என்று எனக்கும் கமலுக்கும் தொடர்பு ஏற்பட்டு, இரண்டு நகைச்சுவையாளர்களின் தொடர்பாக அது வளர்ந்து, இன்று கமல் எனக்கு மிக நெருங்கிய நண்பராகி விட்டார்.

அதுபோல புதிதாக எனக்குக் கிடைத்த மற்றொரு நண்பர் இரா.முருகன். மிக நெருங்கிய நட்பு. அவருடைய ஒரு கதையைப் படித்து விட்டு, அது மிகவும் பிடித்துப் போய் அவருடைய நாவல்கள், கட்டுரைகள் எல்லாவற்றையும் வாங்கிப் படித்தேன். அவரிடம் ஒரு சின்ன சுஜாதாத்தனம் ஒளிந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. நட்பு பலப்பட்டு இப்போது மிக நெருக்கமான நண்பர்களாக இருக்கிறோம்.

கே: உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார், யார்?

ப: நான் கல்கி, தேவனின் மிகப் பெரிய விசிறி. ஜெயகாந்தன் நூல்கள் எல்லாம் எனக்கு மனப்பாடப் பகுதி மாதிரி. அப்புறம் ல.ச.ரா., தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன் என எல்லோர் எழுத்துக்களையும் படித்திருக்கிறேன். மிகமிகப் பிடித்த எழுத்தாளர் சுஜாதாதான். அவர் மிகப்பெரிய ஜீனியஸ். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், சினிமா, விஞ்ஞானம், கம்ப்யூட்டர் என்று அவர் சாதிக்காத துறையே இல்லை. அடுத்து இரா. முருகன். அவரது எழுத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஞானக்கூத்தன் கவிதைகள், வைத்தீச்வரன், விக்ரமாதித்யன் கவிதைகள் எல்லாமும் பிடிக்கும்.

கே: நகைச்சுவை என்றால் என்ன? உங்களது நகைச்சுவை எழுத்திற்கு முன்னோடி என்று யாரைச் சொல்வீர்கள்?

ப: குழந்தை, குழந்தைதான். அது கறுப்பா, சிவப்பா, குண்டா, ஒல்லியா என்று ஆயிரம் வியாக்கியானம் செய்தாலும் மொத்தத்தில் குழந்தையைப் பார்ப்பதிலும், ரசிப்பதிலும் நமக்கு சந்தோஷம். நகைச்சுவையும் அதைப் போன்றதுதான். க்ரேஸி மோகனும் சிரிக்க வைக்கிறான். கழைக்கூத்தாடியும் சிரிக்க வைக்கிறான். ஆஸ்கார் படங்களும் சிரிக்க வைக்கின்றன. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் யாரோ ஒருவருக்கு, ஏதோ ஒருவித பயனை அளிப்பதாய் இருக்கின்றன.

எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் என்று படைப்பாளிகளுக்கு ஒரு தரம் இருக்கிறது. அது தராதரம் இல்லாததாக ஆகிவிடக் கூடாது. அதில் ஒருவனுக்கு கவனம் இருக்க வேண்டும். பணத்துக்காக நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் போதுதான் தரம் கீழே இறங்குகிறது. அவ்வாறு செய்வது அவன் சார்ந்த துறைக்கே துரோகம் செய்வதாகும். நகைச்சுவை என்னுடைய வீடு. அதில் நான் என்ன செய்தாலும், எதை எழுதினாலும் அதன் தரம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எனது பொறுப்பு. அதைத்தான் நான் செய்து கொண்டு வருகிறேன்.

உண்மையில் நகைச்சுவை என்பது மிகப் பெரிய கடல். அதில் முன்னோடிகளான கல்கியும் தேவனும் மூழ்கி முத்தெடுத்திருக்கிறார்கள். பி.ஜி. உட்ஹவுஸும், சித்ராலயா கோபுவும் அதன் கரையில் விளையாடி இருக்கிறார்கள். நகைச்சுவையில் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

##Caption## கே: உங்கள் நாடகங்களுக்கு குழந்தைகள் கூட்டம் அதிகம் வருகிறது, எப்படி?

ப: குழந்தைகள் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்கள்தான் என் ரிபீட் ஆடியன்ஸ். குழந்தைகளுக்கு வன்முறை, வல்காரிட்டி, விரசம் பிடிக்காது. ரொம்ப அறுவையாக இருந்தால் பிடிக்காது. எங்கள் நாடத்தில் இவை இடம்பெறுவதில்லை. குடும்பத்துடன் வந்து பார்க்கிற மாதிரிதான் என் நாடகங்கள் இருக்கும். இப்போது போடும் 'சாக்லேட் கிருஷ்ணா'வில் நிறைய மேஜிக் செய்கிறோம். திடீரென்று கை நீட்டினால் கையில் ஃப்ளூட் வரும். ஆண்டாள் கிளி வேண்டும் என்று கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து போன் செய்வாள். நான் மந்திரம் போட்டதும் துணி கிளியாக மாறி, அப்படியே பறந்து போய்விடும். இப்படி குழந்தைகளைக் கவரும் அம்சங்கள் நிறைய இருக்கின்றன

கே: ஒரு நாடகம் ஏதாவது கருத்துச் சொல்வது அவசியமா அல்லது பொழுதுபோக்கிற்கு மட்டும்தான் நாடகம் என்பது உங்கள் கருத்தா?

ப: எனது நாடகத்தைப் பார்த்துவிட்டு ஒருவர், "உங்கள் நாடகத்தை ரசித்துப் பார்த்தேன். ஆனால் வீட்டுக்குப் போனவுடன் எல்லாம் மறந்து போய்விட்டது" என்றார். ஏன் ஞாபகம் இருக்க வேண்டும். எல்லாமே மறந்து போக வேண்டும். தி. ஜானகிராமனே, ரபீந்தராநாத் தாகூரே மறந்து போகவேண்டும் என்கிறேன் நான். எதற்காக எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்? Forgetfulness is bliss. மறதி வேண்டும். அப்போதுதான் ஞாபகம் என்பதே வருகிறது. 'சிரி, சிந்தி. சிந்திக்க முடியவில்லையா, சிரி, மீண்டும் சிரி' இதுதான் எனது நாடகங்களின் கருத்து. ஏனென்றால் சிரிப்பதையே மிகப் பெரிய சமூக சீத்திருத்தமாக நான் கருதுகிறேன்.

கே: உங்கள் நாடகத்திற்கான கருவை எப்படி உருவாக்குகிறீர்கள்?

ப: முன்பெல்லாம் ஒரு நல்ல தலைப்பைத் தேர்வு செய்து அதன் பின்னர் அதற்கேற்றவாறு கதையை எழுதுவது என் வழக்கம். 'அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்', 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' - எல்லாம் இப்படி எழுதியதுதான். ஆனால் நாளடைவில் அதை நான் மாற்றிக் கொண்டுவிட்டேன். அது ஒரு தவறான பழக்கம். இப்போது அப்படி இல்லை. சினிமாவில் அனுபவம் ஆன பிறகு, முதலில் ஒரு சப்ஜெக்ட்டை எடுத்துக் கொண்டு, பிறகு அதற்கேற்ற கதையை எழுதுகிறேன். கதைக் கரு எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்.

அல்பனி, நியூயார்க்கில் 'மீசையானாலும் மனைவி' ட்ராமாவில் சீனுவாக நடிப்பவர்தான் இறுதியில் டாக்டராக வருவார். 'கங்க்ராஜுலேஷன் மாது, நீங்க அப்பாவாகப் போறீங்க!' என்பது டயலாக். அதற்குப் பதிலாக, 'கங்க்ராஜுலேஷன் மாது, நீங்க எனக்கு அப்பாவாகப் போறீங்க!' என்று உளறிவிட்டார். அதற்கு ஆடியன்ஸிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் வேறு. எப்படியோ அதைச் சமாளித்தாலும், உடனே எனக்குத் தோன்றியது சீனுவுக்கு மாது அப்பாவானால் எப்படி இருக்கும் என்று? அப்படி உருவானதுதான் ஜுராஸிக் பேபி. அதில் மாதுவுக்குப் பையனாக, அசுர வளர்ச்சி பெற்ற குழந்தையாகச் சீனு நடிப்பான்.

கே: நாடக மேடையில் நடந்த நகைச்சுவையான, மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி...

ப: பல சம்பவங்களைச் சொல்லலாம். சமயங்களில் ஆர்டிஸ்ட்கள் குறிப்பாக லேடி ஆர்டிஸ்ட்கள் சில காரணங்களால் வர இயலாமல் போய் விடுவதுண்டு. ஆண்கள் வராவிட்டால் வேறு ஒருவரை நடிக்க வைத்துச் சமாளித்து விடலாம். ஆனால் பெண்கள் வராவிட்டால் சிக்கல்தான். இப்படித்தான் ஒருமுறை கோ-ஆப்டெக்ஸ் எக்ஸிபிஷனில் டிராமா. என்னுடன் ஜோடியாக நடிக்க வேண்டிய பெண் வரவில்லை. எனது ட்ரூப் நண்பர் ஒருவர் தவறாமல் தனது மனைவியுடன் என் நாடகம் பார்க்க வருவார். அவர் மனைவியிடம் நிலைமையைச் சொன்னேன். அவரும் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். டயலாக் பற்றியெல்லாம் கவலைப்படாதே, எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லி விட்டேன். நண்பரும் 'அதற்கென்ன பரவாயில்லை, என் மனைவி நடிக்கட்டும்' என்று பெருந்தன்மையாகக் கூறி விட்டார். நாடகம் ஆரம்பித்தது. எனது நண்பரோ பார்க்க மிகவும் வாட்டசாட்டமாக இருப்பார். நடிப்பதோ அவரது மனைவி. நாடகத்தின்படி நான் மனைவியை மிகவும் டாமினேட் பண்ணக் கூடிய கேரக்டர். ஆனால் ஊரான் மனைவியை, அதுவும் அவருக்கு முன்னாலேயே எப்படி வாடி, போடி என்று கூப்பிடுவது? 'மைதிலி, என்னடி நீ பைத்தியம் மாதிரி பேசற, சரியில்லடி நீ பண்றது' என்றெல்லாம் டயலாக் பேச வேண்டியவன் 'வாங்க மைதிலி, போங்க மைதிலி, நீங்க பண்றது சரியில்லீங்க மைதிலி' என்றெல்லாம் பேச வேண்டியதாகி விட்டது. பார்வையாளர்கள் மத்தியில் ஒரே சிரிப்பு. கலகலப்பு.

ஒருமுறை நியூஜெர்ஸியில் நாடகம் போடச் சென்றிருந்தோம். அங்கே நடிகை பத்மினி வசித்து வந்தார். அவரைச் சந்திக்கப் போயிருந்தோம். சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென, மோகன், இன்றைக்குச் சாயங்காலம் உங்கள் டிராமாவில் நானும் நடிக்கிறேனே என்றார். எங்களுக்கு ஒரே எக்ஸைட்மெண்ட் ஆகிவிட்டது. சரி என்று சந்தோஷமாக ஒப்புக் கொண்டோம். டிராமாவின் இறுதியில் ஒரு காட்சி வரும். 'கங்க்ராஜுலேஷன் மாது நீங்க அப்பாவாகப் போறீங்க!' என்று டாக்டர் வந்து சொல்வதாக. அந்தக் காட்சியில் பத்மினி நடித்தார். 'கங்க்ராஜுலேஷன் மாது, நீங்க அப்பாவாகப் போறீங்க!' என்பார் மாதுவிடம். மாது உடனே அதற்கு 'என்ன குழந்தை டாக்டர்?' என்பான். 'ஸ்கேன் பண்ணிப் பாத்துட்டேன், ட்வின்ஸ். ஒரு ஆண்; ஒரு பெண். ஆண் குழந்தைக்கு சிவாஜின்னு பேர் வைங்க; பெண் குழந்தைக்கு பத்மினின்னு பேர் வைங்க' என்று பத்மினி சொல்ல, ஆடியன்ஸிடமிருந்து அதற்கு பயங்கர ரெஸ்பான்ஸ். கைதட்டல், பாராட்டுக்கள். பத்மினி மேடம் விரும்பி எங்கள் நாடகத்தில் நடித்தது வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு சம்பவம்.

கே: வெளிநாட்டு அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்களேன்!

ப: அமெரிக்கா, துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, ஹாங்காங் என்று பல நாடுகளுக்குப் போயிருக்கிறேன். நல்ல வரவேற்பு. அமெரிக்காவில் மட்டுமே 100 ஷோ போட்டிருக்கிறோம். 1999, 2002, 2004 என மூன்றுமுறை அமெரிக்கா சென்று அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் நாடகம் போட்டிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் 40, 45 ஷோ நடக்கும். மூன்று, மூன்றரை மாதம் அங்கேயே தங்கி நாடகம் போட்டிருக்கிறோம். அமெரிக்காவில் எல்லோருமே நல்ல கலா ரசிகர்கள். உதாரணமாக, நான் ஸ்கிரிப்டில் சில டயலாக்ஸ் எழுதியிருப்பேன். அது எனக்கு மிகவும் பிடித்த டயலாகாக இருக்கும். ஆனால் இங்கே அது எடுபடாது. ஆனால் அமெரிக்காவில் பறக்கும் அந்த ஜோக்குகள் எல்லாம். அவர்கள் சட்சட் என்று அதைப் புரிந்து கொண்டு ரசிப்பார்கள், பாராட்டுவார்கள். அங்கு சாதாரண ஒரு ரசிகருடன் பேசுவதே கூட பேட்டி போன்றுதான் இருக்கும். என்னுடைய படத்தைப் பற்றி, அதில் வந்த வசனம் பற்றி, நாடகம் பற்றி என மிகத் தெளிவாக ஞாபகம் வைத்துப் பேசுவார்கள், கேள்விகள் கேட்பார்கள்.

நாங்கள் டிராமாவுக்கு முன்னால் ஒரு ஸ்டேண்ட்-அப் காமெடி செய்வோம். அமெரிக்க அனுபவங்களை வைத்து வேடிக்கையாகப் பேசுவோம். அது ஈமெயில் மூலமாக எல்லா இடங்களுக்கும் பரவி, அதுவே ஒரு பெரிய ஷோ மாதிரி போகத் தொடங்கிவிட்டது.

அமெரிக்க நண்பர்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது திருமதி பார்கவி சுந்தர்ராஜன். நியூஜெர்ஸியில் இருக்கிறார். அமெரிக்காவில் நூறு ஷோக்கள் நடத்தினோம் என்றால் அதற்குக் காரணம் அவர்தான்.

கே: அழகாகப் பெயிண்டிங் செய்கிறீர்கள், கவிதைகள், பக்திப் பாமாலைகள் புனைந்திருக்கிறீர்கள், இந்த ஆர்வம் எப்படி வந்தது?

ப: நண்பன் சு. ரவி நல்ல கவிஞன். அவன்தான் பல இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்தி ஆர்வம் உண்டாகச் செய்தான். நான் உற்சவர் என்றால் அவன்தான் மூலவர். சு. ரவி, க.ரவி (வழக்கறிஞர், ஷோபனா ரவியின் கணவர்), வ.வே.சு., சுகிசிவம் என நாங்கள் எல்லோரும் 'சிந்தனைக் கோட்டம்' என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தோம். அது தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் இயங்கி வந்தது. இவர்கள் எல்லாம் தீவிரமாக இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருந்தவர்கள். அந்தக் குழுவில் நான்தான் தெனாலிராமன். அவர்கள் ஒருமுறை ஆம்பூருக்குச் சென்றிருந்தபோது நானும் சென்றிருந்தேன். அது ஒரு கவியரங்கம். எல்லோரும் கவிதை படித்துக் கொண்டிருந்தார்கள். தண்டமிழ்க் கொண்டல் என்னையும் ஒரு கவிதை எழுதச் சொன்னார். அவரது வற்புறுத்தலால் நான் முதலில் எழுதிய கவிதை அதுதான்.

முகிலாண்ட இமயத்து முக்கண்ணன் இதயத்தில் முருகாக நின்ற உமையே
அகிலாண்ட நாயகி அகலாதென் உள்ளத்தில் அணுவாக நின்ற சுமையே
அகிலுண்ட வாசத்தின் அலையாத கேசத்தின் ஆறாத பாரத்தினால்
துகிலாண்ட இடை சற்று துவளவே நடையிட்டு துணையாக வா காளி நீ!


அதன் பிறகு கவிதைகள் எதுவும் அதிகம் எழுதவில்லை. தற்போது அதிக ஓய்வு நேரம் இருப்பதால் நிறைய வெண்பாக்கள் - ரமணவழி (40 வெண்பாக்கள்), கண்ணன் வெண்பாக்கள் (900த்திற்கும் மேல்) எழுதியிருக்கிறேன்.மேலும் நிறைய வெண்பாக்களை, கவிதைகளை எழுதி வருகிறேன்.

சிறுவயது முதலே நான் நிறைய ஓவியம் வரைவேன். எனது பக்கத்து வீடு ஓவியர் மணியமுடையது. அவர் வரையும்போது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அதுபோல சில்பி வரையும்போதும் பக்கத்தில் இருந்து பார்ப்பேன். அவர் என்னை விரட்டி விரட்டி விடுவார். கோபுலு சார் வரைவதையும் கவனித்திருக்கிறேன். இப்போதும் நேரம் கிடைக்கும் போது அவரைச் சந்தித்து ஆசி பெற்று விட்டு வருவதுண்டு.

தன்செயல் எண்ணி தவிர்ப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவுபெறும் வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன்


இதை பாரதியாரின் மிகப் பெரிய மந்திரம் என்பேன். இது நமக்குக் கைவந்து விட்டால் பிறகு எந்த பிரச்சனையும் படைப்பில் வராது. பிராணாயாமம், பிரத்யாகாரம் என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் மேல் நிலைகள். நாம் செய்வது இறைவனின் செயல் என்ற எண்ணம் சுபாவமாக வந்து விட்டால் 'தான்' என்ற அகந்தை, என் எழுத்துதான் உயர்வு போன்ற எண்ணங்கள் எல்லாம் வராது. அப்படி நாம் சுபாவமாக பூரண சரணாகதி எண்ணத்தோடு நமது செயல்களைச் செய்தால் உயர்வு நிச்சயம். நாளையே நான் ஒபாமாவுக்கு முன்னால் கூட நாடகம் போட வேண்டி வரலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நடக்காது என்று சொல்ல முடியாது. எல்லாம் இறைவனின் செயல்தானே. நாம் ஒரு கருவி மாத்திரமே. அதை உணர்ந்து கொண்டால் போதும்.

கே: உங்கள் குடும்பம் பற்றி...

ப: இரண்டு மகன்கள். பெரியவனுக்குத் திருமணமாகிப் பேரனும் பிறந்தாகி விட்டது. இரண்டாவது பையன் பி.டெக் முடித்து விட்டு எம்.பி.ஏ. பண்ணுவதற்காக மும்பை சென்றிருக்கிறான்.

கே: நீங்கள் ஒரு கூட்டுக் குடும்பவாசி. ஆனால் தற்போதைய காலத்தில் தனியாக வசிப்பதையே விரும்பும் அளவுக்கு ஆகிவிட்டது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: இப்போது கணவனும் மனைவியும் சேர்ந்து வசிப்பதே ஜாயிண்ட் ஃபேமிலி என்று ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் நாங்கள் எல்லாம் ஜாயிண்ட் ஃபேமிலியாகத் தான் இருக்கிறோம். எங்கள் குடும்பம், பெரியப்பா குடும்பம் என்று எல்லா வரவு செலவையும் இன்னமும் என் அப்பாதான் பார்த்துக் கொள்கிறார். சொல்லப்போனால் நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன், எனது தம்பி எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதெல்லாம் கூட எங்களுக்குத் தெரியாது. இதுநாள்வரை நான் பேங்குக்கே போனது கிடையாது. அதை என் மனைவி பார்த்துக் கொள்கிறார். கூட்டுக் குடும்பம் என்பது வாழ்க்கையில் சோகம், பிரச்சனைகள் என்று வந்தால் அதற்கு ஓரு அணை போடுவதாய், ஆறுதல் தருவதாய், சுமுகமான சூழ்நிலையை உண்டாக்குவதாய் இருக்கும்.

காலம் மாறி விட்டதுதான். சின்ன இட நெருக்கடியான பிளாட்டில் வசிக்க வேண்டி இருக்கிறது. வேலை, வேலை என்று அலைய வேண்டி இருக்கிறது, அண்ணன், தம்பி என்று சேர்ந்து வசிக்க முடியாதுதான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதற்காக பெற்றவர்களை ஒதுக்கி வைப்பது எப்படிச் சரியாகும்? பிளாட்டுகளில், அறிமுகமில்லாத சக குடியிருப்பாளர்களை குழந்தைகளுக்கு அங்கிளாகவும், ஆண்டியாகவும் புது உறவாக்கிக் கொள்ளும் நாம், நம்முடைய ஆண்டிகளை, அங்கிள்களையும் முதியோர் இல்லத்தில் தானே விட்டு வைத்திருக்கிறோம். அதற்கு புதுப்புது சமாதானங்களையும், காரணங்களையும் கூறிக் கொள்கிறோம். நாம் கெட்-டுகெதர் கொண்டாடுகிறோம். வீக் எண்ட் பார்ட்டி நடத்துகிறோம். பீச்சில் போய் கொண்டாடுகிறோம். எல்லாம் சரி, அதை நாம் அப்பா, அம்மா, குழந்தைகள், தாத்தா, பாட்டி என்று குடும்பத்தோடு கொண்டாடலாமே! ஏன், அவர்களை பாரமாகக் கருதி ஒதுக்கி வைக்க வேண்டும்? வயதானவர்களை தயவு செய்து ஒதுக்கி வைக்காதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.

கே: தென்றல் வாசகர்களுக்குச் சில வார்த்தைகள்....

ப: அமெரிக்கத் தமிழர்கள் நல்ல ரசிகர்கள். தமிழ்நாட்டில் இருந்து தள்ளி இருக்கிறோம் என்ற ஏக்கம் அவர்களிடம் நிறையவே இருக்கிறது. இண்டெலக்சுவலி மிகவும் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் ஒவ்வொருவர் வீட்டிலும் அவர்களது பேஸ்மெண்ட்டில் ஒரு அட்டகாசமான நூலகம் வைத்திருப்பதுதான். அதில் வைரமுத்து இருப்பார். தி. ஜானகிராமன் இருப்பார். லா.ச.ராமாமிர்தம் நூல்கள் இருக்கும், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் இருக்கும். இல்லாவிட்டால் உரையாசிரியர் அண்ணாவின் சௌந்தர்ய லஹரி, சிவானாந்த லஹரி எனப் பல நல்ல நூல்கள் இருக்கும். இது எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருக்கும். தமிழர் பண்பாடு, கலாசாரத்தின் மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறார்கள். இங்கிருந்து மிகவும் தள்ளி இருப்பதால் அந்த எண்ணமே, ஏக்கமே அவர்களை மிகுந்த ஆர்வத்தோடு செயல்பட வைப்பதாய் இருக்கிறது. டான்ஸ், மியூசிக் என்று தொடர்ந்து பயிற்சி செய்கிறார்கள். விடுமுறை நாட்களில் கூட. இதெல்லாம் எனக்கு மிகவும் வியப்பைத் தந்த ஒன்று. தங்களுக்கு இருக்கும் பல்வேறு பரபரப்பான பணிகளிலும் கூட தமிழக கலை, கலாசாரம், பண்பாட்டை வளர்க்க நேரம் ஒதுக்கி அவர்கள் செயல்பட்டு வருவது பெருமையைத் தருகிறது.

மறுநாள் புதுடெல்லியில் நாடகம். அதற்கான வேலைகள். இடையிடையே போன் வருகிறது. அவ்வப்போது வெற்றிலை சீவல் போட்டுக் கொள்கிறார். ஆனால், எவ்வளவு பிசியானாலும் சிரிக்கச் சிரிக்கப் பேசத் தவறுவதில்லை. கவலை மேகங்கள் சூழ்ந்த சாதாரணர்கள் வாழ்வில் நகைச்சுவைச் சூரியனாக வலம் வரும் க்ரேஸி மோகனுக்கு நன்றி கூறிப் புறப்பட்டோம்.


பெட்டிச் செய்திகள்

சாக்லேட் கிருஷ்ணா

இதுவரை நடந்த என் நாடகங்களிலேயே அதிக வரவேற்பு கிடைத்திருப்பது 'சாக்லேட் கிருஷ்ணா'வுக்குத் தான். 200 ஷோக்களுக்கு மேல் போட்டாகி விட்டது. எல்லாம் ஹவுஸ் ஃபுல். இதுவரை வந்த கடவுள் கதைகளில் எல்லாம் பக்தன் வேண்டிக் கொள்வான், கடவுள் வருவார், என்ன வரம் வேண்டும் என்று கேட்பார். அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். இதுதான் கதையாக இருக்கும். ஆனால் சாக்லேட் கிருஷ்ணாவின் கதையே வேறு. மாது இதில் சாக்லேட் கம்பெனியில் வேலை செய்கிறான். அவன் சாக்லேட்கள் எதுவுமே விற்பதில்லை. அவனுக்குப் பல்வேறு பிரச்சனைகள். அப்போது கிருஷ்ணர் வருவார். அவர் மாதுவுக்கு வரத்தைத் தருவதற்காக வரவில்லை. அவர் சில பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பூமிக்கு வருகிறார். எப்படி அர்ஜுனரும் கிருஷ்ணரும் நட்பாக இருந்தார்களோ அது போல் மாதுவுடன் ஜாலியாக இருந்து அவனுக்கு என்ன உதவிகள் செய்து விட்டுப் போகிறார் என்பதுதான் கதை. நிறைய மேஜிக் எல்லாம் இதில் செய்திருக்கிறோம். இதற்காக நானே மேஜிக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

***


தாத்தாவை மறக்க முடியாது

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் எனது தாத்தா வெங்கட கிருஷ்ண அய்யங்கார்தான். அவர் 86 வயது வரை இருந்தார். அவர் இறந்த போது எனக்கு 40 வயது. நாங்கள் எல்லாம் புரண்டு புரண்டு அழுதோம். அவரோ தாத்தா. இவனோ பாதி தாத்தா. என்ன இப்படி அழுகிறானே என்று எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அவர் தாத்தா மட்டும் அல்ல; என்னுடைய நெருங்கிய நண்பன் போன்று இருந்தவர். நான் கவிதை எழுதினால், பிரமாதம். பாணன், பட்டன், காளிதாசன் மாதிரி இருக்கு என்பார். ஓவியம் வரைந்து காட்டினால் ஆஹா, பிரமாதம். ரவிவர்மா மாதிரி இருக்குடா என்பார். ஒருமுறை வீட்டில் அம்பாள் படம் ஒன்றை வரைந்தேன். அதைத் தாத்தாவிடம் காண்பித்தேன். என்னடா இது, நம்ப வீட்டு வேலைக்காரி மாதிரி இருக்குன்னார். எனக்கு ரொம்பக் கோபம் வந்து விட்டது. சரி என்று மறுபடியும் வரைந்தேன். மறுபடியும் அதையேதான் சொன்னார். திருப்பித் திருப்பி வரைய திருப்பித் திருப்பி அதையே சொல்லிக் கொண்டிருந்தார். சரி என்று வேலைக்காரியையே வரைந்து காண்பித்தேன். 'ஆஹா, சாட்சாத் அம்பாள் மாதிரி இருக்குன்னார்'. ஆமாம், உண்மைதானே, அம்பாளைவிடப் பெரிய வேலைக்காரி இருக்க முடியுமா இந்த உலகத்தில்?

- க்ரேஸி மோகன்

***


அப்பாவுக்கும் பையனுக்குமான உறவு மரியாதை கலந்ததாக இருக்கும். தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவுதான் மிக அன்யோன்யமாக, அதிக அன்பு கலந்ததாக இருக்கும். காரணம், அவருக்கு எல்லா பொறுப்புகளும் பூர்த்தியாகி விட்டன. பேரனிடம் அவர் தன்னைப் பார்க்கிறார். புத்தகத்தை பைண்ட் பண்ணிக் கொடு என்றால் கொடுப்பார். ஏதாவது ஆர்டிகிள் எழுதிக் கொடு என்றால் கொடுப்பார். பேசாம இரு தாத்தா என்றால் பேசாமல் இருப்பார், அவர் மிகப்பெரிய ஆளாக இருந்தாலும் கூடத் தாத்தா என்று வந்து விட்டால் அங்கே பந்தா, மிடுக்கு எல்லாம் போய்ப் பாசம் மட்டுமே மிஞ்சி இருக்கும். ஆனால் இக்காலத்தில் யாருமே தாத்தாவாக விரும்புவதில்லை. எல்லாம் டை அடித்துக் கொண்டு எண்பது வயதிலும் அப்பாவாகவே விரும்புகிறார்கள். முதலில் உடலளவில் நாம் தாத்தாவாக ஆனால்தான் உள்ளத்தளவில் தாத்தாவாக முடியும். 55 வயதானால் எல்லோரும் தாத்தாவாகப் பாருங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.

- க்ரேஸி மோகன்

***

நமது அறிவை, ஆர்வத்தை கடவுள் நமக்குக் கொடுத்த திறமையைக் கொண்டு வாசகர்களையோ, பார்வையாளர்களையோ இப்ப இருக்கும் கட்டத்தை விட்டு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிகிறதா அல்லது அதே கட்டத்தில்தான் அவர்களை வைத்திருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அட்லீஸ்ட் கீழே இறக்காமலாவது இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அதுதான் ஒரு படைப்பாளியின் தார்மீகமான கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.

- க்ரேஸி மோகன்

***


சமுதாய மருத்துவர்கள்

நகைச்சுவை மூலம் நீங்கள் சமுதாயத்திற்கு என்ன சேவை செய்திருக்கிறீர்கள் என்று கேட்டால், நகைச்சுவையே மிகப்பெரிய சேவை என்பேன். நான் சமுதாயத்தை மாற்றுவதற்காகப் போராடுகிறேன். அதற்காக என் வியர்வையை, இரத்தத்தைச் சிந்தி, அதை பேனாவில் மையாக ஊற்றி எழுதுகிறேன் என்றெல்லாம் ஒருவர் சொன்னால் அதெல்லாம் சும்மா பம்மாத்து. சுத்த பேத்தல். எந்த எழுத்தாளராலும் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியாது. சமுதாயத்தில் நிறைய புரையோடிப் போன அல்சர்கள், அப்பெண்டிசைடிஸ்கள் இருக்கின்றன. அவற்றைக் குணமாக்குவதற்கு நிறைய டாக்டர்கள் வேண்டும். ஆனால் இந்த எழுத்தாளர்கள் அந்த டாக்டர்கள் கிடையாது. அந்த social doctors யார் என்று கேட்டால் அவர்கள்தான் மதர் தெரஸா, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, பாரதி போன்றவர்கள்.

- க்ரேஸி மோகன்

***


சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com