கலிபோர்னியாத் தமிழர் மன்றம்: இலங்கைத் தமிழர் நினைவு நாள்
ஜூன் 20, 2009 அன்று கலிஃபோர்னியாத் தமிழர் மன்றம் (Tamils of Northern California) இலங்கை இனப்படுகொலையில் உயிரிழந்த முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நினைவு நாள் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. லிவர்மோரில் நடந்த இந்த நினைவு நாள் அகவணக்கத்துடன் தொடங்கியது. மன்றத் தலைவர் உரையைத் தொடர்ந்து இலங்கை இனப்பிரச்சனை பற்றிய வரலாறு, இடம்பெயர்ந்த மக்களின் அவலநிலை, இதற்கான அரசியல் தீர்வு ஆகிய குறித்த காணொலிகள் இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளராக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளரும் தமிழ் ஆர்வலருமாகிய தமிழருவி மணியன் தமது பாரியாரோடு கலந்துகொண்டார். தற்சமயம் தடுப்பு முகாம்களில் பட்டினி, நோய் போன்ற பேரவலங்களுக்கு உள்ளாகி வாழ்ந்துகொண்டிருக்கும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்குத் தேவையான மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதுடன், அகிம்சை முறையில் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை ஒன்றிணைந்து மேலெடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவரது உரையின் சாராம்சமாக இருந்தது.

இந்த அவலநிலையை மாற்ற புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விளக்கியும், இன்னும் அதிகரித்த பங்களிப்புக்கான அவசியத்தை வலியுறுத்தியும் காட்சியளிப்பு, உரைகள் நிகழ்த்தப்பட்டன. இப்பேரவலத்தின் ‘தற்கால நிலையும், முன்னோக்கிய நகர்வும்' என்பதை மையப்பொருளாகக் கொண்டு கேள்வி-பதில் கலந்துரையாடல் நடந்தது.

பணிகளில் பங்கேற்கவும் நன்கொடை அளிக்கவும் பார்க்க வேண்டிய வலைப்பக்கம்: www.tnc-usa.org

கனகசபை சிவராமன்,
சான் ரமோன், கலி.

© TamilOnline.com