கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமன் வழங்கும் நாட்டிய நாடகம்
சென்னை சரஸ்வதி கான நிலையத்தின் இயக்குனரான கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமன் அவர்கள் தமது குழுவினருடன் வழங்கிய ‘லலித பிரபாவம்' நாட்டிய நாடகம் ஹூஸ்டன், சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி உட்பட அமெரிக்காவின் பல பகுதிகளிலும் மேடையேறியது. அகத்திய முனிவருக்கு ஹயக்ரீவ முனிவர் உபதேசித்த ‘லலித பிரபாவம்' என்ற காவியம் லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ளது. அதனை, சரஸ்வதி கான நிலையத்தின் நிறுவனர் லலிதா கதையாகத் தொகுக்க, ரங்கநாயகி ஜெயராமன் நாட்டிய நாடகமாக அமைத்து நிலையக் கலைஞர்கள் மூலம் வழங்கினார்.

சரஸ்வதி கான நிலையம், கலாக்ஷேத்ராவுக்கு அடுத்தபடி சென்னையில் உள்ள மிகப் பழமையான கலைப்பள்ளி. 1939ல் லலிதா அவர்களால் துவங்கப்பட்ட சரஸ்வதி கான நிலையம் 2008ம் ஆண்டு 70வது ஆண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. கிட்டத்தட்ட 1995வரை இங்கு நடந்துவந்த தியாகராஜ ஆராதனையில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி ஐயர், ML வசந்தகுமாரி, மஹாராஜபுரம் சந்தானம், வீணை பாலச்சந்தர் போன்ற பல பெரிய வித்வான்கள் பங்கேற்றுப் பாடியுள்ளனர். விரிகுடாப் பகுதியில் இந்துமதி கணேஷ் (நிருத்யோல்லாசா நாட்டியப் பள்ளி), ஆஷா ரமேஷ் (ராகமாலிகா இசைப்பள்ளி) ஆகியோரும் ரங்கநாயகி அவர்களின் மருமகள்களே.

சரஸ்வதி கான நிலையத்தின் முதல் மாணவியான ரங்கநாயகி ஜெயராமன், அதன் நிறுவனர் லலிதாவின் மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்றார். “நாட்டிய நாடகங்களை வழங்குவதில் சரஸ்வதி கான நிலையம் முன்னோடி” என்றார் ரங்கநாயகி. சக்தி பிரபாவம், சிவ பிரபாவம், கிருஷ்ணாஞ்சலி, ஷண்முக பிரபாவம், பாவயாமி ரகுராமம், குருநாம ஸ்மரணம், நவரச நாயகி, தெய்வீக வாகனங்கள், கந்த புராணம், பக்தியின் சக்தி, லலித பிரபாவம், நமாமி கணேசம், மாருதி மஹிமை, தான வைபவம் போன்ற பல நாட்டிய நாடகங்கள் மற்றும் குழு நடனங்களை சரஸ்வதி கான நிலையம் மேடை ஏற்றியிருக்கிறது. லலித பிரபாவத்தை அமெரிக்காவில் மேடையேற்ற 11 பேர் அடங்கிய குழு வந்திருக்கிறது.

1995ல் கலைமாமணி விருது பெற்ற ரங்கநாயகி ஜெயராமன் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை 6 பரதநாட்டிய இசைத்தட்டுக்களை வெளியிட்டுள்ளதோடு பல தில்லானா, புஷ்பாஞ்சலி, ஜதிஸ்வரம், வர்ணம் மற்றும் பத வர்ணங்களை இயற்றியுள்ளார். இவர் பரதநாட்டியம் தவிர, வாய்ப்பாட்டு, வயலின், வீணை ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தீபா ராமானுஜம்,
ப்ரீமாண்ட், கலி.

© TamilOnline.com