2009 ஜூலை 2 முதல் 5 வரை FeTNA ஆண்டு விழா மிகச் சிறப்பாக அட்லாண்டா மாநகரில் நடந்தேறியது.
ஜூலை 2 முந்தைய நாள் மாலையிலேயே விருந்தினர்களும், விழாக் கொடையாளர்களும் வரத் தொடங்கினர். சரியாக 7 மணிக்கு, திருமதி பெடி சர்மா தொகுத்து வழங்க, பேரவைத் தலைவர் முத்துவேல் விழாவைத் தொடங்கி வைத்தார். விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்த், அபை, அரசு, நாகி ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டு பாராட்டப்பட்டனர். உணவுக்குப் பின்னர், ஒருங்கிணைப்பாளர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.
ஜூலை 3 விழாவின் முக்கிய முதல்நாள். அரங்கின் முகப்பு திருவிழா போன்று வாழைமரம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிகப்புக் கம்பளம், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீறு மற்றும் மலர்களோடு விருந்தினரை வரவேற்ற காட்சி அமெரிக்காவை மறக்கடித்து நம் ஊர்த் திருவிழாவை ஞாபகப்படுத்தியது உண்மை. மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்தை அட்லாண்டா மாநகரக் கர்நாடக இசையாசிரியர்கள் இசைத்தது இனிது. வட அமெரிக்கத் தமிழ்ப்பேரவையின் தலைவர் முனைவர் முத்துவேல் வரவேற்புரை வழங்க விழா இனிதே தொடங்கியது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகை ஜெயஸ்ரீ அறிமுகப்படுத்தப்பட்டார்.
'மண்மொழி மனிதர்' என்பது இந்த விழாவின் கருத்தாக இருந்தது. இதை விளக்குமுகமாக அட்லாண்டா பரதநாட்டிய ஆசிரியர்கள் ஒரு குழுவாக அமைந்து நடனமாடியது ரசிக்கத்தக்கதாக இருந்தது. இதைத் தொடர்ந்து வந்த ‘என்ன செய்யப் போகிறாய்?' கண்களை ஈரமாக்கியது. காலை நிகழ்ச்சிக்கு லய கவிதையும் அண்ணா கவிதையும் அழகு சேர்த்தன். பீட்டர் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய இலக்கியப் பல்லூடக நிகழ்ச்சி சிறந்த தரத்தில் இருந்தது. அனிதா தங்கமணி அவர்கள் வடிவமைத்து நடத்திய ‘எல்லோரும் சேர்ந்திருப்போம்' என்ற நடன நிகழ்ச்சி வெகு சிறப்பு. ‘பிரதி மெய்' நிகழ்ச்சி அட்லாண்டா மாநகர முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளின் முத்தாக அமைந்தது. வரலாற்றுக் கதா பாத்திரங்களை நகைச்சுவையோடு படைத்த செல்வகுமார் மிகவும் பாராட்டுக்குரியவர்.
மதிய உணவுக்குப் பின் நடிகை கனிகா தொக்குத்து வழங்கும் பணியை மேற்கொண்டார். ‘ஸ்ருதிலயா'வின் திருப்பாவை மிக இனிமை. தொடர்ந்தது ‘வென்றாக வேண்டும் தமிழ்' என்ற தலைப்பில் கவியரங்கம். தலைவர் ஜெயபாஸ்கர். எட்டுக் கவிஞர்கள் மிகுந்த எழுச்சியோடு பங்கேற்றனர். ஜெயபாஸ்கரின் தலைமையுரை, இறுதியுரை மிகச் சிறப்பு. குமார் கணேசன் அருமையாக ஒருங்கிணைத்திருந்தார்.
தமிழனைத் தலைநிமிர வைத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பேச்சு கருத்துக் களஞ்சியமாக இருந்தது. 'அன்பாலயத்தில் ஆடும் ஜோதி' ரேவதி ராமச்சந்திரனின் நடனம் அனைவரையும் ரசிக்க வைத்தது.
நடிகர் ஜீவாவின் சிறப்புத் தோற்றம் அருமை. எளிமையாகப் பேசியதும் வேண்டுகோளுக்கிணங்க உடனே நடனமாடியதும் அதில் கனிகாவும் இணைந்து கொண்டதும் சுவையாக இருந்தன. மைக் கிளாண்டன் (அட்லாண்டா பெருநிலப் பிரதிநிதி) அவர்களின் உரை மிகச் சிறப்பாக இருந்தது. ‘அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கம்' சார்பாக வழங்கப்பட்ட ‘இது ஒரு கிராமத்து நையாண்டி' உமா முரளி அவர்களால் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 'INFITT' சார்பாகத் தமிழ்மணம் பரப்பக் கருத்துப் பரிமாற்றம் நடந்தது. இரவுணவுக்குப் பின் வந்த தமிழருவி மணியனின் ‘உணர்வு கொள்வோம், உரிமை காப்போம்' சிறப்புரையின் போது அரங்கமே தமிழருவியில் குளித்தது.
தொடர்ந்து அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கத் தலைவர் சந்திரசேகர் குப்புசாமியின் ‘தமிழ் மையம்' அட்லாண்டாவாவில் மிகச் சிறப்பாக உருவெடுத்து வருவது குறித்தும் அதன் தேவை குறித்தும் பேசினார். இதையடுத்து சிலம்பொலி செல்லப்பனின் ‘அண்ணா அவர்களின் பேச்சு அனுபவம்' சிறப்பாக இருந்தது. பின்னர், சேலம் ஸ்ரீராம், மகாநதி ஷோபனா இணிந்து பாடிய இன்னிசையோடு அன்றைய நிகழ்ச்சி நிறைவுற்றது.
ஜூலை 4 அட்லாண்டா தமிழ்ச் சங்கம் சார்பாக ராஜஸ்ரீ அவர்களின் ‘சாந்தி நிலவ வேண்டும்' இரண்டாம் நாள் விழாவின் தொடக்கமாக அமைந்தது. தொடர்ந்து ப்ரியா சண்முகம் அவர்களின் 'நாட்டுப்புற ஆடலும் பாடலும்' நிகழ்ச்சி சுவை கூட்டியது. பின்னர், வியாபார நண்பர்களின் உதவியும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இளைய சமுதாயத்தினரின் இளமை நிகழ்ச்சி அரங்கை அதிர வைத்தது. அடுத்து வந்த ‘வள்ளி திருமணம்' பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சந்திரிகா சந்திரனின் கவித்துவமான நடன நிகழ்ச்சி வெகு சிறப்பு. ‘உணர்வு கொள்வோம், உரிமை காப்போம்' என்ற தலைப்பில் டாக்டர் சிலம்பொலி செல்லப்பன் பேசிய எழுச்சி உரை வெகு சிறப்பு.
ஜோதி கண்ணனின் சிலம்பாட்டம், தமிழர்களின் பழங்காலத் தற்காப்புக் கலையின் சிறப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது. தமிழ்ச் சிறார்களுக்காக ஜெயஸ்ரீ நடத்திய ‘தமிழ்த்தேனீ' அருமையாகத் தொகுக்கப்பட்டு சிறப்பானதாக இருந்தது. வி.கே.ரங்கா அவர்கள் எழுதி இயக்கிய 'வீரபாண்டிய கட்டபொம்மன்' அரங்கு அலங்கரிப்பும், வசன உச்சரிப்பும், நடிப்பின் ரசமும் கட்டபொம்மனைக் கண்முன் கொண்டு வந்தது. தொடர்ந்து ஒலித்த கரவொலியில் இதன் சிறப்பு வெளிப்பட்டது. இந்துமதி ரமேஷின் வீணா கானத்தை அரங்கமே அமைதியாய் இருந்து ரசித்தது. சந்திரசேகர் குப்புசாமியால் ஒருங்கிணைத்து, 40 பேர் பங்கேற்ற விஜய் டி.வி. புகழ் கோபிநாத் நடத்திய ‘அதிகம் முன்னேற்றம் அடைந்தது ஆண்களா?, பெண்களா?' விவாத அரங்கம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விறுவிறுப்பாக, சுவையாக, ஈடுபாட்டோடு தொகுத்து வழங்கினார் கோபிநாத், ‘ஆண்களே' என்ற தீர்ப்பும் வழங்கினார். கூல் வோக்சின் சிறப்பாக அமைக்கப்பட்ட 'ARR திரையிசையில் ஒரு ஆஸ்கர் திரைக்கதை' மிகச் சிறப்பான நடனம், அருமையான பொருள் கொண்ட நடன அமைப்பு என அனைவரையும் நடனமாட வைத்தது. அடுத்ததாக நடிகர் பசுபதியின் ‘தெருக் கூத்து' பற்றிய பேச்சும் நேருக்கு நேர் அரங்கில் அவர் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது. எளிமையாக அவர் அளித்த பதில்கள் அருமையாக இருந்தது. இந்த மாநாட்டின் சிறப்பாக தமிழின் பத்து சிறந்த தொழிலதிபர்களைக் கண்டறிந்து வாழ்த்தியது சிறப்பின் சிறப்பாக அமைந்தது.
‘தாய் மண்' சுபத்ரா சுதர்சனின் நடன நிகழ்ச்சி ஈழத்தின் நிலையை நடன அமைப்பாலும், ‘ஈழத்தாயின்' அருமையான முகபாவத்தாலும் அரங்கத்தைக் கட்டிப் போட்டது. அதைத் தொடர்ந்து டாக்டர் எல்லின் ஷாண்டர் கருத்துத் தொகுப்பு வழங்கினார். இவரின் ஒப்பு நோக்கலும் மனதைத் தொடும் படங்களும் அவரது வேண்டுகோளும் அவையே எழுந்து நின்று மரியாதை செய்ய வைத்தது. அடுத்துப் பேசிய கவியரசர் வைரமுத்து அவர்களின் உரை சிறப்பாக அமைந்தது.
பின்னர் FeTNA உயர்குழு, ஒருங்கிணைப்பாளர், தொண்டர்கள் அறிமுகம் நடந்தது.
இதைத் தொடர்ந்து அனுராதா ஸ்ரீராம், கன்சாஸ் ராசா இசைநிகழ்ச்சி தொடங்கியது. இனிய பாடல்கள், இடையிடையே நடனங்கள் என நிகழ்ச்சி நெஞ்சை அள்ளியது. அட்லாண்டாவைச் சேர்ந்த பனிரெண்டே வயதான அட்சயா மற்றும் மீனா, ஐஸ்வர்யா ஆகியோரும் பாடித் தனிக் கவனம் பெற்றனர்.
ஜூலை 5 முனைவர் பிரபாகரன் ஒருங்கிணைப்பில் சங்க இலக்கியம் பற்றித் தமிழருவி மணியன், சிலம்பின் சிறப்பைப் பற்றி டாக்டர் சிலம்பொலி செல்லப்பன், சமகாலப் புதுக்கவிதைகள் பற்றி ஜயபாஸ்கரன் ஆகியோரின் பேச்சுக்கள் சிரிக்க, சிந்திக்க வைத்தன. அரசு செல்லையா நன்றியுரை வழங்கினார்.
இதே சமயத்தில் அரங்கின் மற்றப் பகுதியில் பல நிகழ்ச்சிகள் நடந்தேறின. தொழில்துறைக் கருத்தரங்கம், மருத்துவக் கருத்தரங்கம், தமிழ்ப் போட்டிகள், INFITT கருத்தரங்கம், இளைஞர்கள் சந்திப்பு, FeTNA உறுப்பினர் சந்திப்பு, WTO சந்திப்பு, யோகா கருத்தரங்கு, ஈஷா யோகக் கருத்தரங்கு, முனைவர் மயில்சாமி அண்ணாதுரையோடு சந்திப்பு, TPAC கூட்டம், வெவ்வேறு பல்கலைக்கழக/கல்லூரிகளின் முன்னாள் மாணவர் சந்திப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
கணக்கற்ற தொண்டர்கள், கொடையாளிகள், தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோரின் உழைப்பாலும் வழிகாட்டுதலாலும் இந்த மூன்றுநாள் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறியது. ஏற்பாடு செய்தோருக்கும் பங்கேற்றோருக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் போதுமானதாக இராது.
தொடர்புக்கு: president@gatamilsangam.org இணையதளம்: www.gatamilsangam.org
சந்திரசேகர் குப்புசாமி, தலைவர், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மற்றும் ‘பழமைபேசி' |