ஜூலை 18, 2009 அன்று குரு வனிதா வீரவல்லி நடத்தும் பரதம் அகாடமியின் (Bharatam Academy of Dance Arts, IL.) மாணவியான சுதீக்ஷணா வீரவல்லியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நேபர்வில்லில் நடைபெற்றது.
ஆரபி ராகப் புஷ்பாஞ்சலியுடன் தொடங்கியது நிகழ்ச்சி. பிரபல இசைவாணரான ஓ.எஸ். அருண் அவர்கள் இந்தப் பாடலைப் பிரத்தியேகமாக சுதீக்ஷணாவுக்கென வடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ‘நந்தி சொல்', வர்ணம் ஆகியவற்றில் குருவின் நட்டுவாங்கம் அற்புதம். ராமாயணத்தின் பல முக்கியக் காட்சிகளைச் சித்திரிக்கும் ‘ராமா நீவென ரக்ஷகுடு' (கரஹரப்ரியா) பாடலின் நாட்டியத்தில் பக்தி ரசம் சொட்டியது. விஸ்வாமித்திரர் வேள்வி, சபரிமோட்சம், சீதா சுயம்வரம் ஆகியவை இடம்பெற்ற இந்த நாற்பது நிமிட வர்ணமே நிகழ்ச்சியின் மகுடம் எனலாம். ஆண்டாளாக சுதீக்ஷணா தோன்றி ‘வாரணமாயிரம்' பாசுரத்துக்கு ஆடுகையில் நாயக-நாயகி பாவத்தின் சிறப்பு எழிலோடு வெளிப்பட்டது. ‘ஹரிதுமஹரோ' (மீரா பஜன்) பாடலுக்கு அவர் காட்டிய மாறுபட்ட ரசங்கள், குறிப்பாக நரசிம்ஹ அவதாரத்தில் கொப்பளித்த கோபம், பிரமிக்கச் செய்தது. முத்தாய்ப்பாக வந்த வலசி ராகத் தில்லானா சுதீக்ஷணாவே படைத்தது. அதில் அவரது இசை, நடனம், நடன வடிவமைப்பு ஆகிய பலதுறைத் திறனும் ஒருங்கிணைந்து வெளிப்பட்டது.
‘நாட்யா டான்ஸ் தியேட்ட'ரின் ஹேமா ராஜகோபாலன் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். பி. ரமா (குரலிசை), கே.எஸ். ஜெயராம் (புல்லாங்குழல்), ஜனார்தன ராவ் (மிருதங்கம்), பிரசன்ன குமார் (மோர்சிங், ரிதம் பேட்) ஆகியோர் திறம்படத் துணை போயினர்.
மேலும் தகவலுக்கு: www.bharatam.org
ரஞ்சனி ஐயங்கார், சிகாகோ, இல். |