2009 ஆகஸ்டு 19, 20 தேதிகளில் மதியம் உச்சிவேளையில் நாட்யா டான்ஸ் தியேடர் சிகாகோ மிலேனியம் பார்க்கில் உள்ள ஜே பிர்ட்ஸ்கர் திறந்தவெளி அரங்கில் பரதநாட்டிய நிகழ்ச்சியை இலவசமாக வழங்க இருக்கிறது. முன்னொரு காலத்தில் இந்தியாவில் கோவில் குத்துவிளக்கின் ஒளியில் சதிர்க்கச்சேரி பார்த்த அனுபவத்தை மீட்டு வழங்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி இயற்கை ஒளியில் நடைபெறும்.
நாட்யாவின் கலை இயக்குனர் ஹேமா ராஜகோபாலன் "பெரிய திறந்தவெளி அரங்கத்தில் நாட்டியமாடுபவரின் முகபாவத்தைப் பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், ஒரு குழு நடனத்தைச் சரியாக வடிவமைப்பதன் மூலம் பாவத்தை வெளிக்கொணரும் புதிய வாய்ப்பை அது தருகிறது” என்று கூறுகிறார். 2006ல் இதே அரங்கத்தில் யோ யோ மா (செல்லிஸ்ட்) மற்றும் சில்க்ரூட் இசைக்குழுவுடன் நாட்யா முதலில் தோன்றியது. பின்னர் வந்த வருடங்களில் ஹெட்விக் டான்ஸஸ், மோர்டைன் & கோ ஆகியவற்றுடன் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது.
"நான் பழம்பொருள் காட்சியகக் காவலரல்ல. ஒரு படைப்பாளி. எனவே எப்போதும் மரபுடன் புதுமையை இணைத்துப் படைப்பதற்கான கலையார்வம் என்னில் உள்ளது” என்கிறார் ஹேமா. இணைக் கலை இயக்குனரும் ஹேமாவின் மகளுமான கிருத்திகா ராஜகோபாலன் இதன் அவசியத்தை உணர்ந்தே இருப்பது தொன்மையைக் காப்பதோடு கலையை முன்னெடுத்துச் செல்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும் தகவலுக்கு: www.millenniumpark.org, www.natya.com. தொலைபேசி: 312-742-1168
'நாட்யா' செய்திக் குறிப்பிலிருந்து |