மணமகள் தேவை
'சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது'

அரவிந்தனுக்கு ஒரு அழகான, படித்த தமிழ்ப்பெண் தேவை. என்ன, அரவிந்தன் தன்னைக் கண்ணாடியில் பார்ப்பதில்லையோ என்று தோன்றுகிறதா? அவன் தோற்றம் எப்படி இருந்தாலென்ன, அவன் சிலிக்கன் வலியில் வேலை செய்யும் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஆயிற்றே!

அரவிந்தனுக்கு இப்போது 26 வயது. அவன் இலங்கையிலிருந்து வந்து ஒஹையோவில் B.S. முடித்துவிட்டு பின்னர் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் M.S. பட்டமும் பெற்று, இப்போது வளைகுடாப் பகுதியிலுள்ள ஒரு பெரிய கணினி நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவனுக்கு வேலை கிடைத்ததும் அம்மா ஊரில் பெண் பார்க்கத் தொடங்கிவிட்டார். ஆனால் அரவிந்தனுக்கு அம்மா பார்க்கும் கிராமத்துப் பெண்களில் அவ்வளவு இஷ்டமில்லை.

அவன் ஸ்டான்ஃபர்டில் படித்த காலத்தில், இங்கு வந்து நீண்டகாலமாக வாழ்ந்து வரும் சிவகுமார் மாமா வீட்டுக்கு அடிக்கடி போய் வருவான். சிவகுமார் மாமா அம்மாவின் தூரத்து உறவினர். அவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவுடனேயே அமெரிக்காவுக்கு வந்துவிட்டார். பின்னர் திரும்பி வந்து கமலா மாமியைக் கட்டிக் கொண்டு போனபோது அரவிந்தனுக்கு இரண்டு வயதென்று அம்மா சொல்லுவார். பின்னர் தொடர்புகள் விட்டுப்போயிருந்தன. திடீரென்று ஒருநாள் மாமா டெலிபோனில் அழைத்து அவனை வீட்டுக்கு வரும்படி அழைப்பு விட்டார். அத்தோடு உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.

##Caption## ஒரு சனிக்கிழமை முதல் முறையாக மாமா வீட்டுக்குப் போனபோது அவனுக்கு ஒரு அழகான ஆச்சரியம் காத்திருந்தது. அது மாமாவின் மகள் சுருதிதான். அவள் அப்போது பெர்க்கலி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். மாமி அவளை அறிமுகப்படுத்தும் போது “அவளின் பரத நாட்டிய அரங்கேற்றம் மூண்டு வருடங்களுக்கு முந்தி நடந்தது. இப்போதும் நிகழ்ச்சிகளில் ஆடுவாள். அத்தோடு நல்லாப் பாடுவாள். தமிழ் நல்லாத் தெரியும். தனது தாத்தா பாட்டியோடு தமிழில் கதைப்பாள்” என்று பெருமையோடு சொன்னார். சுருதி நாணம் கலந்த புன்னகையொன்றை உதிர்த்தாள். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், தமிழ்ப் பண்பாட்டோடு வளர்ந்திருக்கிறாளே என்று அரவிந்தன் அதிசயித்தான்.

அதன்பின்னர் வாரந்தோறும் அவனுக்கு அழைப்பு வரும். மாமிக்கும் மாமாவுக்கும் அவனை ரொம்பப் பிடித்துவிட்டது. அவனுக்கு மட்டுமென்ன, சுவையான யாழ்ப்பாணச் சமையலோடு சுருதியின் தரிசனமும் கிடைப்பது பிடிக்காமல் இருக்குமா? அரவிந்தனும் சுருதியும் சகஜமாகப் பழகத் தொடங்கி விட்டார்கள்.

மாதங்கள் கழிந்தன. திடீரென்று மாமாவிடமிருந்து அழைப்பு வருவது நின்று விட்டது. அரவிந்தன் இடையிடையே டெலிபோன் செய்தபோதும் முந்திய நெருக்கம் இல்லை. அவன் குழப்பமடைந்தான்.

சில வாரங்கள் சென்ற பின்னர் வேறு நண்பர்கள் மூலமாக ஒரு உண்மை தெரியவந்தது. சுருதிக்கும் அவளோடு கூடப் படிக்கின்ற ஒரு கறுப்பு இன மாணவனுக்கும் காதலாம். இது நீண்ட காலமாகவே இருந்ததாம். இப்போதுதான் மாமிக்கும் மாமாவுக்கும் தெரிய வந்தது. அவர்கள் இடிந்து போனார்கள். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவனோடுதான் தனது வாழ்க்கை என்று சுருதி உறுதியாக இருக்கிறாளாம்.

சில மாதங்களுக்குப் பின்னர் மாமாவை, அரவிந்தன் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியொன்றில் கண்டான். அவர் மிகவும் வாடிப்போய் இருந்தார். மாமி நிகழ்ச்சிக்கு வரும் மனநிலையில் இல்லை என்றார். பின்னொருநாள் சுருதியை ஒரு நண்பர் வீட்டில் சந்தித்தபோது அவள் வழமைபோலவே “ஹவ் ஆர் யூ, அரவிந்த்” என்று அன்பாகப் பேசிப் பழகினாள். இங்கு பிறந்து வளர்ந்த பெண்களைத் தன்னால் புரிந்துகொள்ள முடியாது என்பதை அவன் உணர்ந்தான்.

##Caption## இப்போது வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. கனடாவின் டொராண்டோவிலுள்ள ஒரு கல்யாணத் தரகருக்கு தனது விபரங்களை அரவிந்தன் கொடுத்திருந்தான். அங்குதான் இப்போது ஒரு பெரிய ஈழத் தமிழ்ச் சமூகமே இருக்கிறதே. டாக்டர், எஞ்சினியரிலிருந்து கல்யாணத் தரகர்வரை எல்லாத் தொழில் புரிபவர்களும் அங்கே இருக்கிறார்கள். அத்தோடு, புலம்பெயர்ந்து வாழும் இளம்பெண்களில் பலர் நன்றாகப் படித்து முன்னுக்கு வந்துவிட்டதை அவன் அறிவான். தரகர் அப்படியான ஒரு பெண்ணை அவனுக்காகப் பார்த்திருப்பதாகவும் முதல் சந்திப்பை ஸ்கார்பரோவிலுள்ள ஒரு தமிழ் உணவகத்தில் வைத்துக் கொள்ளலாமென்றும் தெரிவித்திருந்தார். அழகான பெண், பெயர் பிரியா. நல்ல குடும்பம், வாட்டர்லூவில் B.A. படித்துவிட்டு டொராண்டோவில் வேலை பார்க்கிறாள் என்றெல்லாம் தரகர் சொன்னார். அரவிந்தன் நம்பிக்கையோடு கனடா புறப்பட்டான்.

மதிய உணவுக்கு இருவரும் சந்திப்பதாக ஏற்பாடு. பிரியா ஜீன்ஸ், ரீ சேர்ட்டோடு கவர்ச்சியாக வந்திருந்தாள். “வெரி நைஸ் டு மீட் யூ” என்று ஆரம்பித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசினாள். அவள் பேசும்போது அவள் கண்களும் பேசின. கேட்க வேண்டிய தேவையின்றி எல்லாவற்றையும் அவளே சொல்லி முடித்தாள். அந்தத் திறந்த மனசு அவனுக்குப் பிடித்திருந்தது. பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுவிட்டு ஒரு பைனான்ஸ் கம்பனியில் வேலை செய்வதாகச் சொன்னாள். M.B.A. படிக்க விருப்பம் என்றாள். இப்போதும் அப்பா, அம்மா, தம்பியோடு சேர்ந்து நிறையத் தமிழ்ப் படங்கள் பார்ப்பாளாம். சூர்யாவைப் பிடிக்குமாம். ஏ.ஆர். ரஹ்மானின் பாட்டுக்கள் என்றால் விருப்பம் என்றாள்.

அரவிந்தன் புட்டும் கோழிக்கறியும் சாப்பிட்டான். அவளுக்கு வெஜிட்டேரியன் பிரியாணி.

இருவரும் வெளியே வந்து எக்லிங்டன் சாலையின் ஓரமாக நடந்தார்கள். அரவிந்தனுக்கு பிரியாவைப் பிடித்துவிட்டது. தூரத்தே தெரிந்த சேலைக் கடையில் அவளுக்கு ஒரு சேலை வாங்கிப் பரிசளிக்க நினைத்தான். அப்போது பிரியா “உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல வேணும்” என்றாள். அவன் அவளை நோக்கித் திரும்பினான். “வாட்டர்லூவில் படிக்கும்போது நானும் என்னோடு படித்த ஒரு தமிழ் மாணவனும் நெருங்கிப் பழகினோம். படிப்பு முடிந்ததும் அவனது பெற்றோர் அவனைக் கட்டாயப்படுத்தி ஊரில் ஒரு பெண்ணுக்குக் கட்டிவைத்து விட்டார்கள். அவன் என்னிடம் மன்னிப்புக் கோரினான். ஊரிலுள்ள ஒரு ஏழைத் தமிழ்ப் பெண்ணின் வாழ்வு மலர்வதை நினைத்து என் மனதை நான் தேற்றிக்கொண்டேன்” என்றாள். முகம் சற்று வாடியிருந்தது. “இதைச் சொல்ல வேண்டியது எனது கடமை” என்றாள்.

அரவிந்தனின் ஏமாற்றம் முகத்தில் தெரிந்தது. சேலை வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டான். “ஐ வில் கால் யூ” என்று சொல்லி விடை பெற்றான்.

அவளுக்குத் தெரியும் அந்த டெலிபோன் அழைப்பு வராதென்று.

அரவிந்தனின் அடுத்த தேடல் பயணம் இலங்கையாகத்தான் இருக்கும்.

இரத்தினம் சூரியகுமாரன்,
சான் ஹோசே, கலி.

© TamilOnline.com