சினிமா, தொலைக்காட்சி போன்றவற்றின் ஆதிக்கத்தின் இடையிலும் தொடர்ந்து மேடை நாடகங்களை நடத்திக் கொண்டு வருகின்றனர் 'யுனைடெட் அமெச்சுர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' நாடகக் குழுவினர். 1952-ல் ஒய்.ஜி. பார்த்தசாரதியால் தொடங்கப்பட்ட இக்குழுவை நடத்தி வருகிறார் தற்போது அவரது மகன் ஒய்.ஜி. மகேந்திரன்.
யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ் அளிக்கும் மற்றொரு நகைச்சுவை நாடகம் 'தந்திரமுகி'. ஒய்.ஜி.மகேந்திரன் முக்கியப் பாத்திரம் ஒன்றில் வந்து நகைச்சுவையை அள்ளி வீசுகிறார். சித்ராலயா ஸ்ரீராம் எழுதிய 'தந்திரமுகி'யில் வரும் சித்தர் ஒருவருக்கு வயது ஐநூறுக்கும் மேல்! அவருக்கு ஏதேதோ அபூர்வ விஷயங்கள் எல்லாம் தெரியும் ஆனால் அன்றைய கிழமை மட்டும் நினைவில் இருக்காது. காதலில் தொடர்ந்து தோல்வியுறும் ஹரிக்குக் கல்யாணம் செய்விக்கும் சவாலை ஏற்றுக்கொள்கிறார் சொல்யுஷன் சுந்தரம் (ஒய்.ஜி. மகேந்திரன்).
ஹரி முற்பிறவியில் கல்யாணம் ஆகப் போகும் சமயத்தில் மணப்பெண்ணை ஏமாற்றியதாகவும், மனமுடைந்து அவள் தற்கொலை செய்துகொண்டு விட்டதாகவும் நாடி ஜோதிடம் சொல்வதாக சித்தர் சொல்கிறார். அதே பெண்ணைக் கண்டு பிடித்து, அதே முகூர்த்த நாளில் மீண்டும் ஹரி தாலி கட்டினால்தான் அந்த தோஷம் தீரும் என்றும், அப்போதுதான் ஹரிக்கு அவன் விரும்பும் பெண்ணுடன் திருமணம் நடக்கும் என்றும் சித்தர் கூறுகிறார். இது போதாதா கலகலப்பான கணங்களை ஏற்படுத்த!
பல டி.வி. தொடர்களைக் கிண்டல் செய்யும்படி அமைந்த பாத்திரங்களும் சம்பவங்களும் ஏராளம். கதாநாயகியின் வளர்ப்புத் தாயார் 'ரெப்டைல் ராக்கம்மா', ஹாலிவுட் ரேஞ்சுக்குப் போகும் நாட்டுப் புறப்புறப் பாடகி (உங்களுக்கு 'பரவை முனியம்மா' நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல). 'என்னதான் கராத்தேயில பிளாக்பெல்ட் வாங்கியிருந்தாலும், நாயைக் கண்டா ஓடித்தானே போகணும்' என்பது போன்ற அபூர்வமான தத்துவங்களை அள்ளி வீசுவார்.
ராமனுஜம், பாலாஜி, புருஷோத்தமன், டி.வி. கிரிஷ், வசந்த், ஜே. சுப்பிரமணி, நாகலட்சுமி, பிருந்தா மற்றும் ஆனந்தி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
அமெரிக்காவின் ராகசித்ரா பவுண்டேஷன் 'தந்திரமுகி' மற்றும் 'காதலிக்க நேரமுண்டு' நகைச்சுவை நாடகங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஜூன் 23 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இந்நாடகங்கள் நடைபெறவிருக்கின்றன.
உங்கள் நகருக்கு வருகிறதா என்று அறியவும், அங்கே ஏற்பாடு செய்ய விரும்பும் அமைப்புகள் தொடர்புகொள்ளவும் info@ragachitra.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.
நாடகத்தைப் பற்றிய விவரங்களுக்கு: www.ygeem2006.com மற்றும் www.ragachitra.org
மதுரபாரதி, கேடிஸ்ரீ |