திரைப்படத்தில் காதலர்கள் பாடிக் கொண்டிருக்கும் போது வெளியே சோடா, பாப்கார்ன் சாப்பிடப் போவது வழக்கம். ஒரு மாதிரியாகப் பாடல் முடிந்துவிட்டது என்று நம்பி உள்ளே போகும் போது பாடலின் பல்லவி ஒலிக்கப் பசுந்தரையில் இருவரும் மலர்ந்து கிடக்க அவர்கள் மேலே ஏராள மான பூக்களைக் கொட்டுவார்கள்.
ஆனால் அதற்குப் பிறகு எத்தனை நாள் நாயகனும் நாயகியும் ஜலதோஷத்தால் அவதிப்பட்டார்கள் என்பதை யாரும் எழுதுவதில்லை. பூவில் முழுகினால் ஏன் சளி பிடிக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த இதழில் 'நலம் வாழ' பகுதியைப் படித்துப் பாருங்கள். சுருக்கமாக: பூவின் நடுப்பகுதியில் மகரந்தப் பொடி இருக்கிறது. அது அளவுக்கு மேலே போனால் ஒவ்வாமை வந்து ஜலதோஷம் பிடிக்கும்.
மகரந்தப் பொடி என்பதைக் குறிக்கத் தமிழில் எத்தனை சொற்கள் இருக்கின்றன தெரியுமா? இதோ பாருங்கள்: சின்னம், சிதர், செம்பொடி, சுணங்கு, இணர், கிளர், கொங்கு, கொந்து, கோசரம், தாது, பாரி, பின்னம், பிதிர், பூஞ்சுண்ணம், பூந்துகள், பொடி, துணர், வீ.
'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி' என்ற நக்கீரனின் பாடல் நினைவுக்கு வரவேண்டுமே.
இதைத் தவிர அளிம்பகம் என்னும் சொல் தாமரைப் பூவின் மகரந்தத்தைக் குறிக்கும்.
பயன்படுத்தாமலே இந்தச் சொற்களைத் தொலைத்துவிட்டு, தமிழில் போதிய சொற்கள் இல்லை என்று புகார் செய்கிறோம். யாராவது பயன்படுத்தினாலோ அவர் பண்டிதத் தமிழ் எழுதுவதாகப் பழி சொல்கிறோம். ஏன் இந்த இரட்டைக் குரல்? கண்டிப்பாக ஜலதோஷத்தால் அல்ல!
****** நான் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பது கிடையாது. ஆனாலும், சில சமயம் ஏதாவது கண்ணிலோ காதிலோ விழும். அப்படித் தான் ஒரு பாடல் பட்டுக்கோட்டையாரின் 'சின்னப் பயலே, சின்னப் பயலே..' என்பது போல ஒலித்தது. வாழ்க்கைக்குத் தேவை யான அறிவுரைகள் கொண்ட அவரது பாடல்கள் எனக்குப் பிடிக்கும். பக்கத்தில் போய்க் கேட்டால் 'திருட்டுப் பயலே, திருட்டுப் பயலே சேதி கேளடா. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் திருடன் தானடா' என்ற அற்புதமான தத்துவத்தைப் பாடிக்கொண்டிருந்தது. மனதில் வலித்தது.
"பட்டுக் கோட்டையாரின் 'சின்னப் பயலே'வுக்கு வைரமுத்து இழைத்திருக்கும் 'திருட்டுப் பயலே' ரீமிக்ஸ்-ஆழமான, அர்த்தமான, அவசியமான பாடல்" என்ற விகடன் விமர்சனக் குழுவின் பலமான சான்றிதழ் என் வலியை அதிகமாக்கியது.
இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்பார்கள். திரைப்படப்பாடலும் இலக்கிய வகைதான் என்கிறார்கள். இந்தப் பாடல் காலத்தின் கண்ணாடியாக இருந்துவிடக் கூடாதே என அஞ்சுகிறேன்.
******
ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலம் சிலருக்காவது நினைவில் இருக்கலாம். அப்போதெல்லாம் பத்திரிகைகளில் ஒரு கழுகோ பருந்தோ வந்து உட்கார்ந்து, ஆறிப்போகும் டீயைக்கூடப் பொருட் படுத்தாமல் எப்படி அவர் பலரது சொத்துக் களை அடிமாட்டு விலைக்கோ அல்லது வெறும் அடி, உதை கொடுத்தோ பறித்துக் கொண்டார் என்று விலாவாரியாகச் சொல்லும். சொத்தைக் கொடுக்காவிட்டால் பள்ளிக்குப் போகும் பேரக் குழந்தையைக் கொன்றுவிடுவேன் என்று அடியாட்கள் மிரட்டியதாகக் கிசுகிசுக்கும்.
அடுத்த தேர்தலில் அரசு கவிழ்ந்தது. வீட்டில் இருந்த சூட்கேஸ்கள், செருப்பு களின் எண்ணிக்கை கூடப் பத்திரிகைச் செய்தி ஆயிற்று. அரசியல்வாதிகளுக்கு மறதி அதிகம்.
முப்பாட்டன் காலத்தில் இருந்தே இந்தியா வின் பல துறைகளிலும் நேர்மையாகத் தொழில் நடத்தி முன்னுக்கு வந்ததாகப் பெயர் பெற்ற டாட்டா நிறுவனத்தின் கையை முறுக்க தயாநிதி மாறன் முயற்சித்திருப் பதாகச் செய்திகள் வருகின்றன. போதா ததற்கு உலக அளவில் ஊடகப் பேரரசாக இருக்கும் ரூபர்ட் மர்டாக்கையே தொடர்பு கொண்டு அவர்கள் டாட்டாவோடு இணைந்து நடத்தும் DTH சேனல் நிறுவனத்தின் பங்குகளைப் பத்து ரூபாய்க்கே (சந்தை விலை அதிகமாக இருந்த போதும்) கேட்டு மிரட்டியதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
இதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் ரத்தன் டாட்டாவும், ரூபர்ட் மர்டாக்கும் இவற்றை மறுக்கவும் இல்லை. சில சமயம் உண்மை வெளிவரலாம். சில சமயம் விசாரணைக் கமிஷன்களால் கொல்லப்படலாம். எதுவும் நடக்கலாம்.
******
இப்போதெல்லாம் எதையாவது கேட்டால் நாம் 'என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்தேன்' என்று அதன்மீது பழியைப் போட்டுவிடுகிறோம்.
மனசாட்சி பொய்சொல்லாது என்று யார் சொன்னார்கள்? திருடர்கள் திருடுகிறார்கள். கொலைகளும் கட்டைப் பஞ்சாயத்தும் நடந்தவண்ணம்தான் இருக்கின்றன. 'உன்னைத் தவிர வேறு யாரையும் நான் நெனச்சுக்கூடப் பாக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து பல பெண்களோடு உறவுகொள்பவர்கள் இருக்கிறார்கள்.
நமக்கு வேண்டியபடி மனசாட்சியைப் பழக்கிவிடலாம். அதுவும் நாம் செய்ப வற்றுக்கு அங்கீகாரம் தரும். நம்முடைய கைப்பாவைதானே அது. எனவேதான் பெரியோர்கள் திருக்குறள் போன்ற நீதிநூல்களை எழுதிவைத்தார்கள். நாம் செய்பவற்றை அத்தகைய நூல்களும் அவை சொல்லும் நெறியைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும் (உபதேசிக்கும் அல்ல) சான்றோரும் ஒப்புக்கொள்கிறார்களா என்பதுதான் உரைகல்.
உங்கள் வீட்டில் திருக்குறள் புத்தகம் இருக்கிறதா? இல்லையென்றால் அவசியம் வாங்குங்கள். வாங்கினால் போதாது. குறளின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பொருளோடு மூன்று நாட்கள் தொடர்ந்து படியுங்கள். படித்ததைச் சிந்தித்துப் பாருங்கள். 1330 குறள்களையும் படித்து முடிக்கும் வரையில் நிறுத்தாதீர்கள்.
மனம் மாறும்; சிந்தனைப் போக்கு மாறும்; வாழ்க்கை மாறும்.
வெள்ளத்து அனைய மலர் நீட்டம்; மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு.
மதுரபாரதி |