ஓநாயின் துரோகம்

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Aravind Swaminathan


குழந்தைகளே, எல்லாரும் இங்கே வாங்க, தாத்தா ஒரு கதையோட வந்திருக்கேன்!

ஒரு காட்டில் வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது ராஜா என்பதால் மற்ற மிருகங்கள் எல்லாம் அதற்குக் கட்டுப்பட்டு பணிவாக வாழ்ந்தன. ஒருநாள் இரைதேடிச் சிங்கம் தன் குகையை விட்டு வெளியே வந்தது. எங்கும் அலைந்து பார்த்தும் அதற்கு இரை கிடைக்கவில்லை. வெறுப்புடன் அது சோர்ந்து படுத்துக் கொண்டிருந்த போது அங்கே ஒரு ஓநாய் வந்தது. ஓநாயைக் கண்டதும் சிங்கம் மிகுந்த ஆவலுடன் அதன் மேல் பாய்ந்தது.

ஓநாயோ நடுநடுங்கித் தன்னை விட்டுவிடுமாறு சிங்கத்திடம் வேண்டிக் கொண்டது. தான் மிகச்சிறியவன், தன்னைக் கொன்றால் சிங்கத்துக்கு வயிறு நிரம்பாது என்று கூறியது. "என்னை உயிரோடு விட்டால் வேறு நல்ல ஒரு இரையைக் கொண்டு வருவகிறேன்" என்று கூறியது. "என்னை ஏமாற்ற நினைத்தால் கொன்றுவிடுவேன்" என்று எச்சரிக்கை செய்து சிங்கம் ஓநாயை அனுப்பியது.

தப்பித்தோம், பிழைத்தோம் என அங்கிருந்து புறப்பட்ட ஓநாய் வழியில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு குதிரைக் கூட்டத்தைப் பார்த்தது. ஒரு கொழுத்த குதிரையிடம் சென்று, "வேறு ஓரிடத்தில் நிறையப் பயிர்கள் விளைந்துள்ளன. நீங்கள் அங்கு வந்தால் ஆனந்தமாகத் தின்னலாம். வாருங்கள்" என்று அன்பொழுகப் பேசியது. குதிரையும் ஆவலுடன் ஓநாயுடன் புறப்பட்டது.

வழியில் யானைக்காக வெட்டப்பட்டிருந்த ஒரு பெரிய குழியில் குதிரை தவறி விழுந்துவிட்டது. அது எவ்வளவோ முயன்றும் அதனால் மேலே ஏற இயலவில்லை. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த ஓநாய் சிங்கத்திடம் ஓடோடிச் சென்று, தான் சொன்னபடியே இரையைக் கொண்டு வந்து விட்டதாக ராஜ விசுவாசத்துடன் அறிவித்தது.

சிங்கமும் வந்தது. குழிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் குதிரையைப் பார்த்தது. அதனால் தப்பிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டது. பின் ஓநாயைப் பார்த்து, "நன்றி கெட்ட ஓநாயே, நீ உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இன்னோர் உயிரை ஏமாற்றி இங்குக் கூட்டி வந்திருக்கிறாய். இப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகிகளுக்கு இந்தக் காட்டில் இடமில்லை" என்று கோபத்துடன் சொல்லியபடி அதன்மேல் பாய்ந்து அதனைக் கொன்றது.

அடுத்த மாதம் வேறொரு கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com