ஐந்தவித்தான் ஆற்றல்
"இவனே ஒரு ஒழுக்கங்கெட்ட பய... இவன்தான் வள்ளுவருக்கு உதாரணமா கிடைச்சானாமா? அதுவும் பேசுறது என்னடான்னா முற்றத் துறந்த முனிவர்களுடைய பெருமையை எடுத்துச் சொல்றதுக்க்குன்னே வகுக்கப்பட்டதாகப் பரிமேலழகர் உரையில் குறிப்பிட்டிருக்கும் நீத்தார் பெருமை அதிகாரம்... ஒழுக்கத்தின் உயர்வு சொல்ல வேற ஆள் கெடக்கிலியாமா?" என்று பொரிந்து தள்ளியபடி வந்து குதித்தார் ஆத்மாராம். நினைவு தெரிந்த நாள் முதலாக என்னுடனேயே வாழ்ந்து வருபவர். இருந்தாலும் பொதுவாக வெளியில் தலைகாட்ட மாட்டார். எப்போது தோன்றுகிறதோ அப்போது மட்டும் வருவார். பாதித் தூக்கத்தில்கூட வந்து குடைவது உண்டு. ஒவ்வொரு முறையும் கேள்வியோடுதான் வருவார். பதில் கண்டுபிடித்தாக வேண்டியது என்வேலை. எனக்கும் அவருடைய கேள்விகளுக்கு விடைகாணும் வரையில் தூக்கமே வராது. உறவு அப்படிப்பட்டது. அவர் குடைந்த குடைச்சலுக்கெல்லாம் நான் தேடிக் கண்டறிந்த விடைகளைத்தான் இந்தத் தொடர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரையில் உங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அவர் குடைச்சலின் பலன் என்னவோ எனக்குத்தான் என்பதனால் நானும் இவருடைய கேள்விகளைக் குறித்து எரிச்சல் படுவதில்லை. ஆனாலும், இந்தக் கேள்வியுடன் வருவார் என்று சற்றும் எதிர்பார்த்திருக்காத காரணத்தால் "என்னய்யா சொல்றீரு... விளக்கமாத்தான் சொல்லுமேன்" என்றேன்.

"மொதல்ல திருக்குறளைக் கையில் எடும்" என்றார். எடுத்தேன். "நீத்தார் பெருமையில் பாரும்" என்றார். பார்த்தேன்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

##Caption## "சரி. படிச்சுட்டேன். என்ன ஆச்சு உமக்கு, ஏன் கிடந்து குதிக்கிறீர்? விளங்கும்படியாகத்தான் சொல்லுமே" என்றேன். ஆத்மாராம் பேசத் தொடங்கினார். "இந்திரன் என்பவன் ஒரு நபரா அல்லது பதவியா?". "முதலில் இவர்களையெல்லாம் நபர் என்றே சொல்லக்கூடாது. மனித வர்க்கத்தைச சேர்ந்தவர்களைத்தான் நபர் என்ற சொல்லால் குறிக்க முடியும். இருந்தாலும் பேச்சு சௌகரியத்துக்காக அப்படிச் சொல்லிக்கொள்கிறேன். இந்திரன் என்பது ஒரு பதவிதான். குறிப்பிட்ட சில தகுதிகளை உடைய யார்வேண்டுமானாலும் அந்தப் பதவியை அடைய முடியும்" என்றேன்.

கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது இவரிடம் தொடர்ந்து பேச. பழங்காலத்தில் எருது, யானை முதலியவற்றின் எலும்புகளையே அம்புகளாகப் பயன்படுத்தியிருந்திருக்கிறார்கள். மான்கொம்பு, மாட்டுக் கொம்பு போன்றவையும் வில்லிலிருந்து எய்யப் பயன்படுமாம். ஒரு நீண்ட பிடியை அவற்றிற்கு இணைத்தோ இணைக்காமலோ, வில்லிலிருந்து எய்வதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் வளைவு நெளிவின்றி நேராக நிமிர்ந்திருக்கும் அம்புகளைக் காட்டிலும் இவை ஆபத்தானவை. ஏனெனில், நேரான அம்புகளை வில்லில் பொருத்தும்போதே, யார்மீது குறிவைக்கப் படுகிறது; அது எந்தத் திசையில் வரும் என்பதை எதிராளியால் அனுமானித்துவிட முடியும். இவையெல்லாம் நேர்க்கோட்டில் செல்பவை. மேற்படி மான்கொம்பு, மாட்டுக்கொம்பு-எலும்புகளாலான அம்புகள் (அவற்றின் கோணல் மாணலான வடிவங்களின் காரணமாக) எந்தத் திசையில், எப்படிப் பாயும் என்பதை அனுமானிக்கவே முடியாது. "இவையெல்லாம் பொதுவாக விலக்கப்பட்ட அம்பு வகைகள், யுத்தங்களில் பயன்படுத்தக்கூடாது" என்று மஹாபாரதம் பேசுகிறது. ஆனால், இவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒற்றைக்கு ஒற்றையாக நின்று போரிடும் சமயங்களில் இவற்றை எய்வதில்லை; எய்வதில் பயனுமில்லை. எந்தத் திசையில் பாயும் என்று எய்பவனுக்கே தெரியாத போது, ஒரேயோர் ஆள்மீது வீச இதைப் பயன்படுத்தி என்ன பயன்! இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான வீரர்களை எதிர்கொள்ள நேரும்போது இவையும் பயன்பட்டிருக்கின்றன. எதிரில் இருப்பவர்கள் கூட்டமாக நிற்பதால் யார்மீதாவது பாய்ந்தே தீரும். ஆத்மாராம் கேட்கும் கேள்விகள் சிலசமயங்களில் அப்படிப்பட்டவைதாம். இருந்தாலும் பதில் சொல்லி வைத்தேன்.

"இந்திரன் ஐந்தவித்தவனா?" அடுத்த அம்பை வீசினார் ஆத்மாராம். சரியான முள்ளம்பன்றி முள்ளாலான அம்பு. தொடங்கும்போது அவ்வளவு ஆரவாரம் செய்ததும் இதை எய்வதற்கான முன்தயாரிப்புதானா! விஷயம் ஒருவாறு விளங்கியதைப்போல் இருந்தது. இருந்தாலும் புராணங்களில் பொதுவாகக் குறிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் தொடர்ந்தேன். "சரியான கேள்வி கேட்டீர். ஐந்து அவிக்காவிட்டால் எப்படி இந்திரப் பதவி கிடைக்கும்? தன் புலனை அடக்காதவன் தேவனாகவே ஆக முடியாது என்னும்போது தேவலோகத்துத் தலைமைப் பதவியான இந்திரப் பதவியை அடைய இது என்ன ஜனநாயக நாடா? இங்கே என்ன "யார்வேண்டுமானாலும் தேர்தலுக்கு நிற்கலாம்; என்ன தகுதி இருந்தாலும் சரி; இல்லாவிட்டாலும் சரி. ஓட்டுகளைப் பெற்றால் பதவியை அடைந்துவிடலாம்" என்றெல்லாம் நடந்துவிட முடியுமா? அடிப்படைத் தகுதிகள் ஏதுமே இல்லாதவர்களால் தேவலோகத்தை அடைவதும் அங்கே வாசம் புரிவதுமே இயலாத செயல் என்னும்போது, தேவலோகத்துத் தலைமைப் பதவியில் அமரவேண்டும் என்றால் அதற்கென ஒரு தகுதி இல்லாவிட்டால் முடியுமா? இந்திரன் ஐந்து அவித்தவன்தான்" என்றேன், அவருடைய நோக்கம் புரியாமல்.

##Caption## "அங்க வாரும். அதுக்குதான் கேட்டேன். பரிபாடல் படிச்சீர்தானே? அதுல 19ம் பாடலில் ‘இந்திரன் பூசை; இவள் அகலிகை; இவன் சென்ற கோதமன். சினன் உறக் கல்லுரு ஒன்றியபடி இது' அப்படின்னு ஒரு ஓவியத்துக்கு முன்னால நின்னபடி முருகன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் பேசிக்கறாங்க இல்லியா? ‘இந்தப் படத்தில் தீட்டியிருக்கும் பூனைதான் இந்திரன்; இதோ இந்தப் பெண் அகலிகை; இங்கே இருப்பவர் கௌதம முனிவர். இவருடைய கோபத்தினால், கொடுத்த சாபத்தினால் அகலிகை பாறையாகிக் கிடக்கிறாள் இங்கே' என்று விவரித்துக் கொள்கிறார்களே, இந்தப் பரிபாடல், திருக்குறளுக்குக் காலத்தால் முற்பட்டதுதானே"என்றார். "ஆமாம்" என்றேன். "அப்ப தாடி இதைப் படிக்கலியா? நீத்தார் பெருமை பேசும்போது இந்திரனுக்கு இங்கே என்ன வேலை? அகலிகைக் கதையைக் கம்பன் எழுதறதுக்கு ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே பரிபாடலில் எழுதி வச்சிருக்காங்களே! மைலாப்பூர் ஆசாமி என்ன இதையெல்லாம் படிக்காமதான் எழுதினாரா?" இருபது-முப்பது முகங்களைக் கொண்ட அம்புகளெல்லாம் இருந்திருக்கின்றன. இன்றைக்கு க்ளஸ்டர் பாம்--கொத்து குண்டு--என்று சொல்கிறார்களே, அப்படிப்பட்ட கொத்து அம்பாகப் பார்த்துதான் வீசுகிறார் ஆத்மாராம்.

"அப்ப என்னதான் சொல்ல வருகிறீர்? அதையாவது தெளிவாகச் சொல்லும்" என்றேன். "அது. அப்படிக் கேளும்" என்று தொடங்கி, "ஒண்ணு, திருவள்ளுவருக்கு ஒழுக்கத்தைப் பத்தி ஒண்ணுமே தெரியாதுன்னு அர்த்தம்; இல்லாட்டி அவர் பேசறது இந்த இந்திரன் இல்ல... வேற என்னமோ, ஏதோ கதையிலோ, புராணத்திலோ அல்லது வரலாற்றிலோ வரும் ஒரு நாயகன் அல்லது பாத்திரமாகத்தான் இருக்கவேண்டும். அவர் இந்த இந்திரனைப் பற்றிப் பேசவில்லை என்பது வெளிப்படை இல்லையா? பிறனில் விழையாமை என்று ஒரு அதிகாரமே வகுத்திருக்கிறாரே, அந்த வள்ளுவத் தராசில் இந்த இந்திர குணம் ஏறுமா? துலையில் ஏறினால்தானே எடைபோட! வள்ளுவர் தராசில் ஏற்றக்கூட அருகதையற்றவன் இவன். இவனைப் போயா வள்ளுவர், "ஐந்தவித்தனுடைய ஆற்றலுக்கு சாட்சி சொல்ல இவன் போதும் (சாலும் கரி)" என்று சொல்லியிருப்பார்? வள்ளுவர் காலத்தில் இந்திரனைப் பற்றி இப்படிப்பட்ட கதைகளே இருந்ததில்லை என்று சொல்லி சமாளிக்க முடியாதாக்கும். அதான் பரிபாடலைக் காட்டியிருக்கிறேன்" என்று முடித்தார். அவர் என்னைப் பார்த்த பார்வையில் சவால் இருந்தது.

யோசித்தேன். இவரை இவர் வழியில்தான் மடக்கவேண்டும். கேள்விக்கு பதில் சொன்னால்தானே மறுகேள்வி கேட்பார்? மாறாக எதிர்க்கேள்வி போட்டேன். "சரி. ஒப்புக்கொள்கிறன். புலன்கள் ஐந்தையும் அவித்தவன் பேராற்றல் நிறைந்தவன். அப்படிப்பட்டவர்களுடைய ஆற்றலுக்குச் சாட்சி சொல்வதற்கு, வானவர் தலைவனான இந்திரனே போதுமானவன் என்றல்லவா சொல்லியிருக்கிறார்? அகல் விசும்புளார் கோமான் என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லியிருப்பதனால், நீங்கள் சொல்வதுபோன்று இந்திரன் என்பவன் யாரோ வட்டாரக் கதைகளிலோ, வரலாற்றிலோ வாழ்ந்த ஒரு நாயகன் அல்லன்; புராணங்களில் சொல்லப்படுபவன்தான் என்பது தெளிவாகிறது அல்லவா?"என்றேன். சற்றே தயங்கினார். யோசித்தார். "நீர் சொல்வதில் பொருளிருக்கிறது. இந்தக் குறளுக்குள்ளேயே இவன் புராணங்களில் சொல்லப்படும் இந்திரன்தான் என்பதற்கான குறிப்பு உறைந்து கிடக்கிறது. ஒப்புக்கொள்கிறேன். என் கேள்வியின் ஒரு பகுதிக்கு விடை சொல்லிவிட்டீர். மிகுந்திருக்கும் மற்ற பகுதியோ மிகப்பெரும் பகுதி. என்ன பதில் உண்டு உம்மிடம்" என்று மடைமாற்றினார்.

"ஐந்து என்று வெறும் எண்ணைச் சொல்லியிருந்தாலும், இங்கே சொல்லப்படுவது என்னவோ ஐம்புலன்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இதை நீங்கள் சொல்லாமலேயே தெரிகிறது. அவித்தல் என்பதற்கு என்ன பொருள் காண்கிறீர்கள்?" என்றேன். "என்னது! அவிக்கிறது என்றால் வேகவைத்தல் என்று பொருள். கிராமங்களில் எல்லாம் இன்னமும் புழக்கத்தில் உள்ள சொல்தானே! சென்னை நகரத்தில்கூட அவிச்ச கடலை உண்டே... அப்படி வேகவைப்பதுதான் அவிப்பது. உம்ம மண்டைக்கு உறைக்கும்படியாகச் சொல்லணும்னா, விதை நெல்லை அவித்துவிட்டால் அது முளைக்காது. அப்படிப் புலன்களை அவித்துவிட்டால் அவற்றிலிருந்து அந்தந்தப் புலன்களால் பெறக்கூடிய இன்பத்தை நாடும் போக்கு முளைத்து எழும்பாது. ஐந்து புலன்களையும் அவித்துவிட்டவனுடைய மனம், புலனிச்சைகளுக்குள் மீண்டும் புகாது; புலன்களால் ஏற்படும் கிளர்ச்சிகளை நாடாது; ஏனென்றால் அந்த வித்து அவிக்கப்பட்டுவிட்டது. அவிக்கப்பட்ட விதை முளைக்காததைப்போலவே, ஐந்து புலன்களையும் அவித்துவிட்டவன் மனத்திலும் புலனின்ப நாட்டம் எழாது. எண்ணம் என்பதே முளைக்க இடமில்லை என்னும்போது இச்சை எப்படி முளைக்க முடியும்?"

"அவித்தல் என்றால் வேகவைத்தல், புழுக்குதல் என்றெல்லாம் பொருளிருக்கிறதுதான். நீர் சொல்லும் விளக்கமும் வெகு அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த இடத்தில் அவித்தல் என்பதற்கு இதுதான் பொருளா? வள்ளுவர் புலன்களை எல்லாம் முற்ற முழுக்கச் சுட்டுச் சாம்பராக்கிவிடுவதைத்தான் சொல்கிறாரா? அப்படிப்பட்ட ஒரு முழுமையான நிலையை அடைவது என்பது ரமணரைப் போன்ற வெகுசிலருக்கே சாத்தியம் அல்லவா? சென்னைப் பல்கலைக் கழகததின் பேரகராதியை எடுத்துப் பாரும். நீர் சொல்லும் அர்த்தங்களையும் சொல்லியிருக்கிறார்கள். இதே குறளை மேற்கோள் காட்டி ‘அடக்குதல்' என்றும் ஒரு பொருள் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்தீரா?"என்ற கேட்டேன்.

"அடக்குவதற்கும் நான் சொன்னதற்கும் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்" என்று மறித்தார். "ஆத்மா, ஒண்ணு சொல்றேன் கேளும். அடக்குவது என்பது, தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதைக் குறிக்கிறது. எப்போது ஒன்று தன் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அப்போதே அதற்கு ஓயாத காவலும் கண்காணிப்பும் தேவைப்படும். உண்டா இல்லையா?"

"அதாவது புலனடக்கம் என்பதற்கு, புலன்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் என்று பொருள் என்றும்; அந்த நிலையில் எவ்வளவுகாலம் நின்று பழகியவனாக இருந்தாலும், ஓயாமல் விழித்திருக்க வேண்டும் என்றும்;அந்த விழிப்பு நிலையில் சற்றே ஏறுமாறாகிப் போனால், நிலை தடுமாறுமானால் புலணுணவு விழித்துக்கொள்வதும், புலனின்ப விழைவு தோன்றுவதுமான நிலைகள் ஏற்படும் என்றும் சொல்ல வருகிறீரா? நல்லாத்தான் இருக்கு நீங்க சொல்றது. ஆனா நீங்க சொல்றது மத்தவங்க ஒத்துக்க வேணாமா"

"ஆத்மா, மத்தவங்க என்றால் யார் அது மத்தவங்க? நாம வள்ளுவரை எப்படி அணுகறோம்? வள்ளவருக்கு வள்ளுவர்தானே அகராதி? ஒரிடத்தில் கேள்வி எழுமானால் வள்ளுவர் அந்தக் கேள்விக்கு இன்னோரிடத்தில் பதில் சொல்லி வைத்திருப்பாரல்லவா? அவருடைய சொல்லுக்கும் ஆட்சிக்கும் அவரே அல்லவோ விளக்கம்? அவரிடத்திலல்லவா பொருள் விளக்கம் கேட்டறிய வேண்டும்? இப்படித்தானே நீரும் நானும் படித்துக் கொண்டிருக்கிறோம் என் இனிய நண்பரே! வள்ளுவர் நான் சொல்லும் விளக்கத்துக்குத் துணை நின்னா, ஏத்துக்கொள்வீங்களா? அது என்னுடைய விளக்கமா இல்லையா என்பது கேள்வியில்லை. பொருத்தமானதா இல்லையா என்பதை உரசிப் பார்ப்தற்கான உரைகல்--touchstone--அவர்தானே? அவர் வாக்கின்படி இது பொருத்தமாயிருந்தால் சரியா?" என்று கேட்டேன். "அதில் ஏதும் மறுப்பில்லை" என்றார் ஆத்மா.

"புலனடக்கம் என்பது,விழைவுகள், நாட்டங்கள் என்று அனைத்தையும் சுட்டுப் பொசுக்கிவிட்ட "அவித்த"நிலையா; வேகவைத்த விதை முளைக்காததைப்போல் விழைவுகள் ஏதும் துளிர்விடமுடியாத நிலையில் வைத்திருப்பதைத்தான் "ஐந்து அவித்தான்"சொல்கிறதா? அல்லது, "புலன்களைத் தன் கட்டுக்குள் வைத்திருத்தல்" என்று பல்கலைக்கழகப் பேரகராதிப் பொருளுடன் ஒத்துப் போகும் விளக்கம் திருவள்ளுவருக்கு ஏற்புடையதா என்றுதானே பார்க்கப்போகிறோம், ஆத்மா? நான் கேட்பது சரிதானே?"என்றேன். ஆத்மா தலையை அசைத்தார். "ஒப்புக்கொள்கிறீர் என்றால், "அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை" என்று சொல்கிறாரே, அது என்ன "அடல்வேண்டும்?" யோசிக்க வேண்டாமா, ஆத்மா?"என்றேன். "சொல்லும்" என்றார் ஆத்மா. சொல்கிறேன்.

ஹரிகிருஷ்ணன்

(தொடரும்)

© TamilOnline.com