பாரிஸுக்குப் போனோம்
கரியாலி ஐ.ஏ.எஸ்.,
தமிழில் திருவைகாவூர் கோ. பிச்சை

நான் பிரிட்டிஷ் கவுன்சிலின் குறுகிய கால அழைப்பாளராக 1978 டிசம்பரில் பாரிஸுக்குச் சென்றிருந்தேன். எனது கணவர் லண்டனிலுள்ள மன நோய் ஆய்வு மன்றத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் வருகைதரும் ஆய்வறிஞராக அங்கு வந்தார். சிறுவயது முதலே பாரிஸ் என்னை வசீகரித்திருந்தது. அதுவே என் வீடு என்பதாகக் கனவு கண்டதுண்டு. ஆயினும் நாங்கள் அந்தச் சமயம் குறைந்த உதவித் தொகையில் சென்றதால் பாரிஸ் தொலைதூரக் கனவாகவே இருந்தது.

பாரிஸ் கலைகளின் இருப்பிடம். உலகப்புகழ் பெற்ற சாமர்செட் மாம், விக்டர் ஹ்யூகோ, சார்த்ர், காம்யூ ஆகியோர் சுவாசித்த காற்றைச் சுவாசித்து, அவர்கள் நடந்த பாதையில் நடந்து, அவர்கள் பூங்காவில் அமர்ந்த இடங்களுக்குச் சென்று அமர்ந்திருக்க விரும்பினேன்.

எனது கணவரின் பிறந்தநாள் டிசம்பர் 3. ஆகவே அந்த நாளைப் பாரிஸில் கழிக்க முடிவு செய்தோம். எங்களது திட்டம், லண்டனிலுள்ள கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்திலிருந்து பிரிட்டிஷ் ரயிலில் டோவர் செல்வது. பின் அங்கிருந்து படகில் இங்கிலீஷ் ஜலசந்தியைக் கடந்து காலைஸ் செல்வது. அங்கிருந்து பிரெஞ்சு ரயிலில் பாரிஸ் செல்வது. போகவரக் கட்டணம் முப்பது பவுன்கள்தான். அதனால் வியாழக்கிழமையிருந்து திங்கள் கிழமைவரை நான்கு நாள்கள் பாரிஸில் தங்கச் சாத்தியமாயிற்று.

##Caption##மாலையில் நாங்கள் டோவர் செல்ல ரயில் ஏறினோம். டோவரில் சுங்கச் சோதனைக்குப் பிறகு படகில் ஏறினோம். கடலைப் பார்க்க வசதியாகப் படகின் ஓரத்தில் இடம் பிடித்துவிட்டோம். படகிலேயே பல உணவகங்கள் இருந்தன. பர்கர், உருளை வறுவல், கோக், ஐஸ்கிரீம் ஆகியவை தாராளமாகக் கிடைத்தன. நாங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது படகின் மையப்பகுதி முழுவதும் அதிக 'பேக்பைப்பர்' வாத்தியக்காரர்களாலும், ஸ்காட்லாந்திய ஆண், பெண்களின் மகிழ்ச்சியான ஆடல், பாடல்களாலும் நிரம்பி வழிந்தது. ஸ்காட்லாந்து மக்கென்சி, மக்டானல், மகின்டோஷ் முதலிய பெருமைமிக்க மலைவாழ் மக்கள் இனங்களைக் கொண்டது. எமது படகில் வந்த குழு மக்கென்சி இனத்தைச் சார்ந்தது. அவர்களது இசையும் நாட்டியமும் விடியும்வரை - நாங்கள் காலைஸ் சென்று சேரும்வரை - நீடித்தது.

காலைஸிலிருந்து பாரிஸுக்குச் செல்ல ரயிலைப் பிடித்தோம். ரயில் பெட்டியில் எங்களுடன் ஓர் இளம் பெண்ணும் துணையாக இரண்டு வாலிபர்களும் இருந்தனர். மூவரும் லண்டனில் கடைகளில் சாமான் வாங்கிக்கொண்டு ஊர் திரும்புகிறவர்கள். வழக்கமாக பிரஞ்சுக்காரர்கள் ஆங்கிலத்தில் பேச விரும்புவதில்லை. ஆங்கிலம் அறியாதவர்கள்போல் பாசாங்கு செய்வார்கள். இந்த இரண்டு தேசங்களுக்கிடையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த பகைமையின் பின்புலனில் இதைக் காணவேண்டும்.

பிரெஞ்சுக்காரர்கள், பயணிகள் தங்களுடன் பிரெஞ்சு மொழியில்தான் பேசவேண்டுமென்று விரும்புகின்றனர். ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் பதில் சொல்வதில்லை. உலகத்தில் பெருவாரி மக்கள் பிரெஞ்சு மொழியைவிட ஆங்கிலத்தைக் கற்க விரும்புகிறார்கள் என்ற யதார்த்தத்தையும் அவர்கள் ஏற்பதில்லை. இது பிரெஞ்சு தெரியாத பயணிகளுக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக எங்கள் சக பயணிகள் அரைகுறை ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள். அவர்களிடம் எங்களிடமிருந்த நேரத்தையும் பணத்தையும் பாரிஸில் எப்படிச் சிறப்பாக உபயோகித்துக் கொள்ள இயலும் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அவர்களுடைய வழிகாட்டுதல் மிகப் பயனுள்ளதாக இருந்தது.

##Caption## முதலில் பாரிஸ் பாதாள ரயில்நிலையத்தில் பயணச்சீட்டுகளை வாங்கிக் கொள்ளும்படி யோசனை சொன்னார்கள். பத்துச் சீட்டுகள் கொண்ட ஒரு கட்டு இருபது ஃபிராங்குகள்தான். நாங்கள் தங்கி இருந்த நான்கு நாட்களும் பாதாள ரயிலையே பயன்படுத்தினோம். என்ன சாப்பிடுவது, எங்கு மெல்லிய பட்டுத் துணி கிடைக்கும், எங்கு பழங்களைப் புதிதாக, மலிவாக வாங்கலாம் எனச் சகல விபரங்களையும் எங்களுக்குத் தெரிவித்தார்கள். எப்போதும் வெளியில் சாப்பிடாமலிருக்கப் பாரிஸ் சென்றவுடன் முதல் வேலையாக இவைகளை வாங்கி அறையில் வைத்துத் கொள்ளும்படியும் யோசனை சொன்னார்கள்.

தங்குமிடம் சென்று, குளித்துவிட்டு, எனது கனவு லோகமான லூவர் அருங்காட்சியகம் சென்றோம். பிரமாண்டமான பழைய கட்டிடத்தில் இருந்த இதன் அசலான பகுதி பிரெஞ்ச் அரசர்களின் அரண்மனையாகும். பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி அடைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்க்க ஒருவருக்குப் பல மாதங்களாகும். ஆனால் எங்களுக்கு இருந்ததோ ஒரே ஒரு நாள்தான். இங்கிலாந்தில் காட்சியகங்களுக்கு நுழைவு இலவசம். இதை ஒப்பிட்டால் ஐந்து ஃபிராங்க் நுழைவுக்கட்டணம் என்பது அதிகம்தான். நுழைவாயிலில் கிடைத்த சிறு பிரசுரத்தில், கட்டிடத்தின் முழு தரைப்படமும், ஒவ்வொரு அறையின் கதவு எண் உட்பட்ட விபரப்பட்டியலும் இருந்தது. முதலில் பார்க்க வேண்டிய இடங்களை முடிவுசெய்ய இது உதவியது. நேராக லியோனார்டோ டாவின்சி, பிக்காசோ, வான் கோ, ரெனாய்ர், மோனே, ரெம்பிராண்ட், மறுமலர்ச்சி, பின்மறுமலர்ச்சிக் கலை அரங்கப் பகுதிகளுக்கு விரைந்தோம்.

'தி லாஸ் சப்பர்', 'மோனாலிசா' அல்லது 'வீனஸ் டி மிலோ' இவைகளைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தை வர்ணிக்க முடியாது. வின்சென்ட் வான் கோ அரங்கைச் சுற்றி ஏராளமான மஞ்சள் நிற சூரியகாந்திப் பூக்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. முத்திரை பதித்தவர்களின் அரங்கில் மரங்களில் இலைகள் சலசல வென்ற ஓசை எழுப்புவதைக் கேட்டதுடன், இளந்தென்றல் தவழ்ந்து செல்வதையும் ரசித்தேன். லூவர் அரங்கில் இத்தாலிய மத்தியகால பன்னிரண்டாம் நூற்றாண்டின் மாதாகோவில் கலைகள் தொடங்கி நவீன கலைஞர்கள் பிக்காசோ வரையிலானதைப் பார்க்க முடியும். ஒரு சிற்பத்தைப் பார்த்துப் பெரிதும் பரவசத்துக்கு உள்ளானேன். அது ஒரு கம்பம், அதைச்சுற்றி அழகான மூன்று பெண் உருவங்கள் உள்ளன. இவை சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய தெய்வங்கள். பிரெஞ்சுப் புரட்சியை ஊக்கப்படுத்தியதில் இந்தச் சிற்பங்கள் மிக முக்கியப் பங்கு வகித்ததாகச் சொல்லப்படுகிறது.

(தொடரும்)

கரியாலி ஐ.ஏ.எஸ்.,
தமிழில் திருவைகாவூர் கோ. பிச்சை

© TamilOnline.com