ஆதித்யா ராஜகோபாலன்
ஆதித்யா ராஜகோபாலன் (17) இன்டெல் (INTEL) நிறுவனம் நடத்திய விஞ்ஞானத் திறனாய்வுப் போட்டியில் 2009ம் வருடம் இறுதிகட்டத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட 40 இளைஞர்களில் ஒருவர். ஆதித்யாவைத் தவிர 8 இளைஞர்கள் இந்திய-அமெரிக்கர்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் (முழுப் பட்டியல் கீழே).

இன்டெல் நிறுவனத்தின் அறிவியல் திறனாய்வு, கவுரவத்துக்குரிய போட்டியாகும். 1600 போட்டியாளர்களில் தொடங்கி, 300 போட்டியாளர்களை அரையிறுதிக் கட்டத்தில் நிறுத்தி, அவர்களுள் 40 பேர் மட்டுமே தேர்வு பெறுவர். அதிபர் பராக் ஒபாமாவுடன் சந்திப்பு, பிரத்யேக வாஷிங்டன் டி.சி. சுற்றுலா, நோபெல் விஞ்ஞானிகளுடன் சந்திப்பு, $6000 வரை உபகாரச் சம்பளம் என்று பரிசுகளைப் பட்டியலிடலாம். அந்த அனுபவத்தைப் பற்றி ஆதித்யாவிடம் கேட்டோம்.

கனெக்டிகட்டிலுள்ள ‘கொயேட் ரோஸ்மரி ஹால்' (Choate Rosemary Hall) என்ற தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளார் ஆதித்யா. பள்ளியின் விவாதக் குழுத் தலைவரான இவர், ஒருமுறை ‘மாறுபட்ட ஆற்றல் - ALTERNATE ENERGY' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் பங்கேற்றார். இத்தலைப்பைப் பற்றித் தாமே ஆய்வு செய்தால் என்ன என்று இவர் மனதில் பொறிதட்டியது. அப்போது ஆதித்யா 10ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். இம்முயற்சியில் முழு மனதுடன் ஈடுபட்டு, தாவரவியல் கழிவுகளைக் கொண்டு 'செல்லுலோஸிக் எத்தனால்' தயாரிப்பது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

##Caption##தன் வீட்டு நிலவறையை ஆய்வுக்கூடம் ஆக்கிக்கொண்டார். அடிப்படை ஆராய்ச்சி களைத் தொடங்கி, அமெரிக்காவின் சில கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் ஆராய்ச்சி விண்ணப்பம் அனுப்பினார். மிச்சிகனிலுள்ள ‘மிச்சிகன் ஸ்டேட் யூனிவர்சிட்டி' தமது கிரேட் லேக்ஸ் பயோ எனர்ஜி ரிஸர்ச் சென்டரில் இவருக்கு ஆராய்ச்சி செய்ய அனுமதியளித்தது. அவரது அடிப்படை ஆய்வுகளுக்கு நிதியுதவியும் அளிக்க முன்வந்தது. பள்ளி விடுமுறை நாட்களில் ஆதித்யா மிச்சிகனுக்கு வந்து பல்கலைக் கழகத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டார். முதல் ஆண்டில் எட்டு வாரமும், இரண்டாம் ஆண்டில் ஆறு வாரமும் நடந்த இவ்வாராய்ச்சியில், கதிர் நீக்கிய சோளத் தட்டைகளைக் கொண்டு, குறைந்த செலவில், 'செல்லுலோஸிக் எத்தனால்' தயாரிக்க முயற்சி செய்தார். இதற்கெனப் பிரத்யேகமான ‘கணித மாதிரி' (Mathematical Model) ஒன்றையும் தயார் செய்தார்.

2008ம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் ‘இன்டெல்' போட்டியில் இவ்வாராய்ச்சியைப் பதிவு செய்தார். 2009 ஜனவரி மாத முற்பகுதியில் அரையிறுதிப் போட்டியாளரானார். அதே மாத இறுதியில் இறுதிக் கட்டத்தை எட்டியது இவருக்குத் தெரிய வந்தது.

மார்ச் 5 முதல் 11ம் தேதி வரை, இவ்வாறு தேர்வுபெற்ற 40 போட்டியாளர்களையும் ‘இன்டெல்' தம் செலவில் பிரத்யேகமாக வாஷிங்டன் டி.சி. அழைத்துச் சென்றது. அங்கு இவர்கள் பிரபல செயின்ட் ரீஜிஸ் (St. Regis) ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். “கூல்! அங்கே பாத்ரூமில் கூட டி.வி. இருந்தது” என்று அந்த அனுபவத்தை விரிந்த விழிகளோடு விவரிக்கிறார் ஆதித்யா. மாநாட்டு விஞ்ஞானிகள், நோபெல் விஞ்ஞானிகள் ஆகியோருடன் ஒரு சந்திப்பு இருந்ததாம். பன்னிரண்டு நடுவர்கள் கொண்ட குழுவில், 3 நடுவர்களை ஒரு வகுப்பு என அமைத்து, இவ்வாறு 4 வகுப்புகளுடன் அதாவது 12 நடுவர்களுடனும் வகுப்புக்குத் தலா 15 நிமிடங்கள் என ஒதுக்கப்பட்டு போட்டி நிகழ்த்தப்பட்டது. போட்டியில் மிகக் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டன. எச்.ஐ.வி. வைரஸ் வரைவது, ஒரு வேக்ஸினை (Vaccine) எடுப்பது எப்படி என்பது போன்ற கேள்விகள் இருந்தனவாம். “பதில் தெரிய வேண்டியதில்லை. மூளையைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதே இதன் அடிப்படை” எனக் கூறுகிறார் ஆதித்யா.

நடுவர்களில் ஒருவர் இந்தியாவிலுள்ள ஐ.ஐ.டி.யில் படித்து, தற்போது ஸ்டேன்ஃபோர்டில் பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வுக்குப் பின் அதிபர் ஒபாமாவைச் சந்தித்தனர். ஆதித்யாவுடன் இரண்டு முறை கை குலுக்கினாராம் அதிபர் ஒபாமா. முதலில் அறிமுகக் கை குலுக்கல்; அதன்பின் அதிபர் கேள்வி கேட்க, அதற்கு உடனே ஆதித்யா பதில் சொல்ல, “I assume you are not the quiet one” என்று சிரித்தபடி ஒபாமா கூறினாராம். செனடர் கோபர்ன் (Senator Coburn), ஆற்றல்துறையின் காலின் பவல் (Energy Secretary Colin Powel) ஆகியோரையும் சந்தித்துள்ளனர் இந்த இளைஞர்கள். தேசிய அறிவியல் அகாடமியிலும் இவர்கள் ஆராய்ச்சியை விவரித்துள்ளனர்.

தமிழ், ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளில் நன்கு தேர்ந்துள்ள ஆதித்யா, ஓரளவுக்கு ஃபிரெஞ்சு மொழியும் பேசுவாராம். இவரது பொழுதுபோக்கு வாலிபால். இவரது பள்ளியின் வாலிபால் அணித்தலைவர் இவர். கணிதம், அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் ஆர்வமுள்ள ஆதித்யா, 2009ம் ஆண்டு இலையுதிர்காலத்தில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துக்குப் பொருளாதார மாணவராகச் செல்ல இருக்கிறார். பொருளாதாரம் படித்து அறிவியல் துறைத் தொழில்முனைவோராக வரவேண்டும் என்பது ஆதித்யாவின் குறிக்கோள். அதற்கு முன்னோட்டமாக இப்போதே, மாணவர்களே நடத்தும் பள்ளிச் சீருடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு தலைமை நிதி அலுவலராக (CFO) விளங்குகிறார்.

ஆதித்யாவிற்கு மிகவும் பிடித்த தமிழ்த் திரைப்படம் ‘மைக்கேல் மதன காமராஜன்'. மிகப் பிடித்த உணவு வேப்பம்பூ ரசம். சக மாணவர்களுக்கு இவர் கூறும் அறிவுரை: “உங்கள் மனதுக்குப் பிடித்த படிப்பைப் படியுங்கள். அதில் முழுக் கவனம் செலுத்தினால் எதிலும் வெற்றி நிச்சயம்.”
***


இன்டெல் ஆய்வுக்குத் தேர்வு பெற்ற பிற அமெரிக்க-இந்தியர்கள்

நரேந்திர புண்ட்ரிக் தல்லப்ரகடா, அலெக்ஸாண்ட்ரியா; பிரேயா ஷா, நியூயார்க்; சுவை குணசேகரன், விஸ்கான்ஸின்; அனிருத்த சந்தீப் தேஷ்முக், கூபர்டினோ, (கலி.); ஸ்மிதா ராமகிருஷ்ணா, அரிசோனா; நிதீஷ் லக்கன்பால், இர்வைன்; நிலேஷ் திரிபுரனேனி ஃப்ரெஸ்னோ; எலிஸபத் ஜை ராவ், சிகாகோ.
***


காந்தி சுந்தர்

© TamilOnline.com