ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Vijayalakshmi Raja, Texas
[இந்த முறை கடிதங்களுக்குப் பதிலாக கருத்துக்களை சிலர் தெரிவித்திருந்தனர். 'தென்றல்' ஆசிரியருக்கும் ஏதாவது வந்திருக்கும். மருமகளுக்கு ஏன் எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை, மாமனாருக்கும் எழுதலாமே என்று நிறைய ஆலோசனைகள் வந்தன. அதை அடுத்த இதழ்களில் பார்க்கலாம்.]
அன்புள்ள சிநேகிதியே,
போன இதழில் நீங்கள் எழுதிய 'புத்திசாலி மாமியாருக்கான கையேடு', என் மாமியாருக்காகவே எழுதியது போலிருந்தது. அவ்வளவையும் நீங்கள் எழுதுவதற்கு முன்பாகவே கடைப்பிடித்தவர் அவர். அவ்வளவு அருமையான மாமியார்.
நான் வேறு மதத்தைச் சேர்ந்தவள். எங்களுடையது காதல் திருமணம். அவருக்கு அப்பா இல்லை. இரண்டு இளைய சகோதரர்கள் - அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை. என்னுடைய மாமியார் என் கணவரிடம், “நீ முடிவு செய்த பிறகு என்னிடம் சம்மதம் கேட்டு என்ன பிரயோஜனம். அந்தப் பெண்ணிற்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்று. அமெரிக்காவிலேயே திருமணம் செய்துகொள். நான் வரவேண்டும் என்ற அவசியமில்லை. இங்கே வந்து எந்த மத விதிப்படி கல்யாணம், யார் செய்வது என்ற குழப்பம் எல்லாம் வேண்டாம்” என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். இங்கே என்னுடைய அக்கா கணவர் இருந்ததால் எங்கள் முறைப்படியே திருமணம் செய்து கொண்டோம். விசா பிரச்சனையால் இந்தியாவுக்குப் போக முடியவில்லை. அவ்வப்போது, 'போனில்' அவர் பேசி முடித்த பிறகு, தன் அம்மாவுடன் பேசச் சொல்லுவார். நான், ‘நல்லா இருக்கீங்களா?' என்று விசாரிப்பேன். அதற்கு அவர், ‘நான் நல்லாயிருக்கேன். நீ நல்லா இருக்கியாம்மா?' என்பார். அவ்வளவு ஒட்டுதல் வரவில்லை. அவருடைய தங்கை திருமணம் நடந்தது. இவரால் மட்டுமே போக முடிந்தது. இரண்டாவது, அவள் இங்கே மேல்படிப்புக்காக வந்தாள். அதைச் சாக்கிட்டு என் மாமியாரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தோம். எனக்குப் பையன் பிறந்து 1 1/2 வயது ஆகியிருந்தது.
##Caption##மாமி வந்து மூன்று மாதமாவது தங்குவார்கள் என்று நினைத்தபோது பயமாகவும், சங்கடமாகவும் இருந்தது. என்னால் முடிந்தவரை அவர்களுக்குச் சங்கடம் வரக்கூடாது என்று பார்த்துக் கொண்டேன். தனியாக, இன்னுமொரு ஒரு ப்ரிட்ஜ் வாங்கி அசைவ பதார்த்தங்களை அதில் வைத்தேன். சைவச் சமையலுக்கு எனப் பாத்திர செட் வாங்கினேன். சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன். இருந்தாலும் அவர்கள் கண்டிப்புப் பேர்வழியாக இருப்பார்களோ, தகப்பன் இல்லாமல் மூன்று பிள்ளைகளை வளர்த்திருக்கிறார்களே, என்னால் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியுமா என்று குழம்பிப் போனேன். அவர் அதிகம் பேசும் டைப் இல்லை. என்ன வேண்டும், வேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்ல மாட்டார். இவரை எப்படி நம்மை ஏற்றுக் கொள்ளச் செய்வது என்று தவித்தேன்.
ஆனால் எனக்கு ஆச்சரிய அதிர்ச்சி, இதுபோன்ற வாழ்க்கைக்குத் தன்னை அழகாகத் தயார் செய்து கொண்டு வந்திருந்தார். நான் அவரைக் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு போனதைப் பாராட்டிப் பேசினார். “அம்மா, எனக்காக நீ உள்ளே வந்து சுவாமியை தரிசிக்கணும் என்பதில்லை. என்னை கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு வந்த புண்ணியமே உனக்குச் சேரும்” என்றார். தன்னுடைய பெட்ரூமில் பூஜை சாமான்களை வைத்துக் கொள்வார்.
அவர் எதிரே நான் சிலசமயம் சங்கோஜத்துடன் சிக்கன் சாப்பிடும்போது, “ஏம்மா, நான் இருக்கேன்னு ஏன் சங்கடப்படறே, உனக்கு என்ன பிடிக்கிறதோ அதை நீ சாப்பிடு. இது உன் வீடு. உன்னுடைய உணவுப் பழக்கம். எனக்கு இந்த ‘மீன் வாசனை' கொஞ்சமும் பிடிக்காது. அதுனால நான் நகர்ந்துக்கறேன். அதுக்காக நீ வருத்தப்படாதே” என்று சொல்வார்.
பையனை எதற்காகவாது அதட்டினால், “அதட்டி வளர்க்காதே அம்மா, அணைத்துத்தான் வளர்க்கணும்” என்று சொல்லி தமிழ்ப் பாட்டுக்களை அவனுக்காகப் பாடிக் கொண்டிருப்பார்.
என்னுடைய உறவுக்காரர்கள் வந்தால் அதிகம் பேசாவிட்டாலும், அழகாக உபசரிப்பார். எத்தனையோ முறை வேலை முடிந்து களைப்பாக வருவேன். சுடச்சுட சாப்பாடு செய்து வைத்துக்கொண்டு, என் வருகைக்காகக் காத்திருப்பார்.
எனக்கும் என் கணவருக்கும் ஏதாவது வாக்குவாதம் வந்தால், தன் அறைக்குப் போய்விடுவார். அப்புறம் தனியாக, “அவன், அவன் அப்பாபோலச் சிறிது கோபக்காரன். மனசுல வச்சுக்காதே” என்று என்னைச் சமாதானப் படுத்துவார்.
நன்றாகப் பாடுவார். சொல்லப் போனால் என் மாமியாரால் - அவர் சமையல், பாட்டு மூலம் எனக்கு பல குடும்பங்கள் நண்பர்கள் ஆனார்கள்.
எனக்கும் என் கணவருக்கும் நடக்கும் மோதல்கள் குறைந்து போயின. சொல்லப்போனால், அவருடைய சமையலுக்கு அடிமையாகி நான் இப்போது அசைவம் சாப்பிடுவதை என்னையறியாமலேயே குறைத்துக் கொண்டு விட்டேன். இப்போதெல்லாம் சர்ச்சுக்கும் போகிறேன், கோவிலுக்கும் போகிறேன்.
என் மாமியைப் பற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கலாம். எனது இரண்டாவது பிரசவத்தின் போது தாய்போலப் பார்த்துக் கொண்டார். என் பெண்ணுக்கு என்ன பெயர் வைப்பது என்று கேட்டேன். “உங்கள் வழக்கம் என்னவோ, உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்யம்மா. நான் ஒரு பட்டிக்காடு. எனக்குத் தெரிந்ததெல்லாம் திரிபுரசுந்தரி, அபயாம்பாள் என்று ஏதாவதுதான்.” என்று சொன்னார். என் பெண்ணிற்கு ‘அபயா' என்று பெயர் வைத்து ‘Abhey' என்று கூப்பிடுகிறோம். என் மாமியார் எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம். எங்களோடுதான் இப்போது இங்கே நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்.
இப்படிக்கு -------------
அன்புள்ள சிநேகிதியே,
படிப்பு வேறு, பண்பாடு வேறு. பரிமாற்றங்கள் வேறு, பக்குவம் வேறு. மிகவும் அருமை.
வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்.
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் |