ஜெயமோகன் (சென்ற இதழ் தொடர்ச்சி)
கே: இந்தப் 'பொலிடிகல் கரெக்ட்னெஸ்' தமிழகத்தில், இந்தியாவில் எப்படி இருக்கிறது?

ப: 'பொலிடிகல் கரெக்ட்'னெஸை முழுமையாக எதிர்ப்பதுதான் பின்-நவீனத்துவம். அது தத்துவத்தின் தர்க்கத்திற்கு, அறவியலின் கெடுபிடிகளுக்கு எதிரானது. ஆனால், தமிழில் பின்-நவீனத்துவம் பேசக் கூடியவர்கள் எல்லாம் கலகக்காரர்கள் என்ற தோரணையை வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வைத்திருக்கும் எல்லாக் கருத்துமே இங்கு ஏற்கனவே இருக்கும் politically correct விஷயங்களுடன் நூறு சதவிகிதம் ஒத்துப் போகிறவைதாம். சாரு நிவேதிதா, அ. மார்க்ஸ் போன்றவர்களின் அரசியல், சராசரி மார்க்சிஸ்ட் கட்சி அல்லது திராவிட இயக்க வேட்பாளருடைய, தொண்டனுடைய அரசியல் நிலைப்பாடு எதுவோ அதுதான். எதைச் சொன்னால் அவர்களை 'முற்போக்கு' என்று அங்கீகரிப்பார்களோ அதைத்தான் சொல்வார்கள். எதிராகச் சொல்ல அவர்களுக்கு தைரியம் கிடையாது.

இன்றைய இந்திய ஜனநாயகத்தில் ஆதிக்கக் கருத்துகளுக்கு எதிராகப் பேசுவதற்கு எந்த தைரியமும் தேவையில்லை. ஏனென்றால் அது ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்ட ஒன்று. ஆதிக்கக் கருத்தைக் கடைப்பிடிப்பவன் கூட ரகசியமாகத்தான் செய்வான். இன்றைக்கு ஜாதிக்கு எதிராகப் பேச தைரியம் வேண்டியதில்லை. ஜாதியை, மதவெறியை வீட்டுக்குள்தான் வைத்துக் கொள்வான். ஆனால் political correctnessக்கு எதிராகப் பேச அசாதாரணத் துணிவு வேண்டும். பேசினால் நீங்கள் மிகவும் பிற்போக்கு என்று முத்திரை குத்தப்படுவீர்கள். அவமானப்படுத்தப்படுவீர்கள். உங்களுடைய கருத்துக்கள் சிறுமைப்படுத்தப்படும். உங்களுக்கு முற்போக்கு முகாம்களின் எந்த ஓரத்திலும் இடம் கிடைக்காது. விருதுகள் கிடைக்காது. அங்கீகாரம் கிடைக்காது. அப்படி இருந்தும் தான் உண்மை என்று நம்புவதைச் சொல்லக் கூடியவன்தான் -- political correctnessக்கு எதிராகப் பேசுபவன்தான் -- உண்மையான கலகக்காரனாக இருக்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட கலகக்காரர்கள் தமிழில் கிடையாது. தமிழில் இருக்கும் கலகக்காரர்கள் அனைவருமே பொலிடிகல் கரெக்ட்னெஸுக்கு உள்ளே வாழும் அற்பப் பிராணிகள்.

ஒரு எழுத்தாளனுடைய விசுவாசம் பழமையோடும், புதுமையோடும் அல்ல; உண்மையோடு. எழுத வேண்டியது முற்போக்கையோ, பிற்போக்கையோ அல்ல. உண்மையை. அந்த உண்மை சில சமயம் முற்போக்குக்கு எதிராக இருக்கலாம், பிற்போக்குக்கு எதிராகவும் இருக்கலாம். தன் நெஞ்சு அறிவதைத் தன் எழுத்துக்களில் சொல்கிறானா, இல்லையா என்பதுதான் அளவுகோல்.

##Caption## கே: அப்படியானால் உங்களைச் சுற்றி நிலவும் சர்ச்சைகளுக்கு நீங்கள் உண்மையை வெளிப்படையாகச் சொல்வதுதான் காரணமா?

ப: நிச்சயமாக. உண்மையை உண்மையாகச் சொல்வதுதான் காரணம். இந்த லேயர், முத்திரை குத்துதல் எல்லாம் எங்கிருந்து வந்தது? நான் 'பின் தொடரும் நிழலின் குரல்' என்று ஒரு நாவல் எழுதினேன். சோவியத் ரஷ்யா என்பது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 35-40 வருடங்கள் தீவிரமாக முன்வைக்கப்பட்ட ஒரு கனவு. 'அது ஒரு பொன்னுலகம்' என்று அகிலனே அங்கு போய்விட்டு வந்து எழுதியிருக்கிறார். அதற்கு முன்னால் ஈ.வெ.ரா., ஜெயகாந்தன் போய்விட்டு வந்திருக்கிறார்கள். அதுபற்றிப் பெசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். 35 வருடம் அந்தக் கனவு மிகப் பிரமாண்டமாக இருந்தது. திடீரென்று ஒருநாள் அந்தக் கனவு உடைந்து போனது. அந்தக் கனவு அப்பட்டமான பொய் என்பது தெரிய வந்தது. தமிழ்நாட்டில் எத்தனை பேர் 'ஆமாங்க, நான் நம்பினேன். அது பொய்யாகப் போய்விட்டது' என்று சொல்லியிருக்கிறார்கள்? அவ்வளவு பெரிய நிகழ்வைப் பற்றித் தமிழ்நாட்டில் எழுதப்பட்ட பக்கங்கள் எத்தனை? அந்த நிகழ்வைப் பற்றி எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள்? அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போன்று அமுக்கமாக இருந்து விட்டார்கள். ஏனென்றால் அதை எழுதும்போது அது political correctness இல்லாமல் ஆகிறது. இங்குள்ள முற்போக்கு முகாமுக்கு அதைப் பிடிக்காது.

அப்போதுதான் நான் 'பின் தொடரும் நிழலின் குரல்' நாவலை எழுதினேன். அந்த நாவல் பதிவான வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொணடது. அதை 91க்கு முன்னால் நான் எழுதியிருந்தால் எல்லாருமே 'முதலாளித்துவம்,' 'பொய்' என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். சோவியத் ரஷ்யா உடைந்து, கோர்பச்சேவின் சகாப்தம் முடிந்த பிறகு 98ல் நான் அந்த நாவலை எழுதியபோது, உண்மைகளை மறுக்க இயலவில்லை. உடனே, அதை எழுதிய எழுத்தாளனை அவதூறு செய்கிறார்கள். 91ல் நான் இதை எழுதியிருந்தால், இவன் அமெரிக்கக் கைக்கூலி, சி.ஐ.ஏவிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதினான் என்று சொல்லியிருப்பார்கள். வெங்கட்சாமிநாதன், க.நா.சுப்ரமணியன், சுந்தர ராமசாமி எல்லோரையுமே சி.ஐ.ஏ.விடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதியதாகத் தமிழ்நாட்டில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

கைலாசபதி என்ற மார்க்சிய விமர்சகர், இலங்கையின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர், ஒரு பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தவர், “க.நா.சு.வுக்கு சி.ஐ.ஏ.விடம் இருந்து பணம் வருகிறது. அதற்கான ஆதாரம், ’இந்தக் கட்டுரையையே, தட்டச்சு முறையில் தான் நான் தட்டச்சு செய்கிறேன்’ என்று க.நா.சு., தன்னுடைய ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். ஆகவே அந்தப் பணம் வந்துதான் தட்டச்சு இயந்திரம் வாங்கி அதில் எழுதியிருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார். க.நா.சு. ஒரு பழைய டைப்ரைட்டர் வைத்திருந்தார். ஒன்றிரண்டல்ல, நாற்பது வருஷமாக. அதைப்பற்றி சுந்தரராமசாமி சொல்கிறார், “அதில் ஒவ்வொரு எழுத்தை அடித்த பிறகும், மீண்டும் ஒருமுறை சுண்டு விரலால் தட்டிவிட வேண்டும். அப்போதுதான் அது திரும்பப் போய் உட்காரும்” என்று. இவரை சி.ஐ.ஏ. ஏஜெண்ட் என்று கிட்டத்தட்ட 20 வருஷங்கள் கைலாசபதி சொல்லியிருக்கிறார். அதுபோல வெங்கட்சாமிநாதனுக்கு சி.ஐ.ஏ. பணம் வந்து குவிகிறது என்று எழுதியிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் அது மாதிரி எழுத மாட்டார்கள். அது பழைய ஸ்டைல். அதனால் 'இந்துத்துவா' என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு பிளாக்மெயில். என்னுடைய நாவலுக்கு பதில் சொல்ல முடியாத அரசியல் நபும்சகத் தன்மைதான் இதுபோன்ற குற்றச்சாட்டுகள்.

நான் எழுதத் தொடங்கிய காலத்தில், ஒரு கட்டுரையில் பகவத் கீதையிலிருந்து, உபநிஷதத்திலிருந்து ஒரு வரி மேற்கோள் இருந்தால் உடனே 'இந்துத்துவா' என்று சொல்லி விடுவார்கள். அந்த அளவுக்கு Political correctnessஐ இவர்கள் திணித்து வைத்திருக்கிறார்கள். ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான்தான் அதை ஒருவகையில் உடைத்தேன். ஒரு இலக்கியக் கட்டுரையில் ஒரு வேதத்தையும், ஒரு உபநிஷத்தையும் மேற்கோள் காட்ட முடியும் என்று நான்தான் காட்டினேன். மகாபாரதத்தை வைத்து நான் ஒரு கதையை எழுதியதால் என்னை இந்துத்துவா என்று அ. மார்க்ஸ் எழுதியிருக்கிறார். ஆனால் இன்றைக்குச் சொல்ல மாட்டார். ஏனென்றால் மார்க்சிஸ்ட் கட்சியின் பிதாமகராகக் கருதப்படும் அருணனே அவ்வாறு எழுதும்போது யாரும் எதுவும் சொல்ல முடியாது. ஆக, அந்த மாற்றத்தை 20 வருஷத்தில் நாங்கள் கொண்டுவந்தோம்.

Political correctness என்பது இவர்கள் உருவாக்கக் கூடிய ஒரு கெடுபிடி. ஒருவகையில் அரசியல் ஆதிக்கத்திற்கான அறிகுறி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ அமைப்புக்குள்ளேயோ, திராவிட அமைப்பிற்குள்ளேயோ, அதுபோன்ற பிற இயக்கத்திற்குள்ளேயோ எங்கேயும் உண்மையானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு சஞ்சலங்களுடனும், தத்தளிப்புகளுடனும் இருப்பார்கள். அவர்களுக்கு ஜெயமோகன் படிப்பதற்கானவன். அவர்கள் படிக்காமல் ஜெயமோகன் புத்தகம் இவ்வளவு விற்காது. இவ்வளவு முக்கியத்துவமும் வராது. அவர்களுக்கு மட்டும்தான் நான் உண்மையானவன். ஏனென்றால் நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.

எனக்குச் சின்ன வயதில் இதுபோன்ற எதிர்ப்புகள் மீது ஒரு சிறிய கசப்பு, பயம் இருந்தது. ஆனால் எனக்கு வரும் வாசகர் கடிதங்கள் அதை உடைத்தன. 'விஷ்ணுபுரம்' ஒரு இந்துத்துவா எழுத்து என்று நீங்கள் ஆயிரம் கட்டுரை எழுதினாலும், என்னுடைய இஸ்லாமிய வாசகர்களிடம் கூட வாலாட்ட முடியாது. 500 பக்கம் இருந்தாலும் கூட அதைப் படிக்கும் இஸ்லாமிய வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் என்னைப்பற்றி.

கே: சாதாரணமாக, தன்னை மதித்துக் கொள்ளும் யாருமே திரைத்துறைக்குள் தொடர்வது கடினம், ஆரம்பத்தில். நீங்கள் எழுத்துலகில் சாதித்து விட்டுத்தான் அதில் நுழைந்திருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் எப்படி?

ப: முதலில் திரைப்படத்துறைக்குள் நுழைய வேண்டும் என்ற கனவு எனக்குக் கிடையாது. இரண்டாவதாக, எனக்கு திரைத்துறையைப் பற்றி எதுவுமே தெரியாது. மூன்றாவதாக சினிமா பற்றியும் பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. நான் மிகக் குறைவாகத்தான் திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். ஒரளவு மலையாளப் படம் பார்த்திருக்கிறேன். சர்வதேச அளவில் கிளாசிக்ஸ் எனப்படும் சில படங்களை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பார்த்திருக்கிறேன். ஆக, திரைத்துறை என்பது எனது துறையே அல்ல.

என்னுடைய நண்பர், வாசகர், இயக்குநர் வசந்த். அவர் தொடர்ந்து என்னை திரைத்துறைக்கு அழைத்துக்கொண்டே இருந்தார்.அதுபோலக் கேரளப் படவுலகின் லோகிததாஸ் என் நண்பர், வாசகர். அவர் தன்னுடைய படம் ஒன்றிற்கு உதவி செய்யும்படிக் கேட்டார். அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செய்தேன். அதைத் தொடர்ந்து என்னுடைய நெருக்கமான நண்பரும், என்னுடைய நல்ல வாசகருமான சுகா (சுரேஷ் கண்ணன்) இயக்குநர் பாலாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார். பாலாவும் என்னுடைய வாசகர், நண்பர். இதுவரையில் சினிமாவில் நான் என்னுடைய வாசகர், நண்பர்களாக அல்லாதவர் யாரிடமும் வேலை செய்ததில்லை. இவர்களுடன் பேசும்போது கூட அதிகமாக நான் இலக்கியத்தைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன். சமீபத்தில் மணிரத்னத்தைப் பார்த்தேன். அவரிடம் 10 நிமிஷம் சினிமா பற்றிப் பேசினேன் என்றால், மீதி தொண்ணூறு நிமிஷம் இலக்கியம் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தேன். நான் சினிமாவில் நுழைவதற்கான ஒரே காரணம் என்னவென்பதைச் சொல்வதில் எனக்கு எந்தவிதமான கஷ்டமோ வருத்தமோ எதுவும் இல்லை.

ஒரு எழுத்தாளனாக எனக்கு 50 புத்தகங்கள் அச்சாகியுள்ளன. வருடக் கணக்காக விற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு ராயல்டியாக வருஷத்துக்கு ஒரு இலட்ச ரூபாய் கிடைத்தாலே அதிகம். இதையே நான் மலையாளத்திலோ வங்கமொழியிலோ எழுதியிருந்தால் அதுவே எனக்குப் போதும். ஒரு அரசாங்க வேலையில் எட்டு, பத்துமணி நேரம் வேலை செய்துகொண்டு, மீதி நேரத்தில் எழுத்துப் பணியைச் செய்வதானால் நான் எழுத்தாளனாக இருக்கவே முடியாது. இன்றைக்கு எனக்குச் சினிமா கொடுக்கும் நேரத்தை இலக்கியம் எனக்குக் கொடுக்குமென்றால் நான் சினிமாவுக்கு வரவேண்டிய அவசியம் கிடையாது. எனக்கு எழுத்து மிகவும் முக்கியம். எழுத்துக்கான நேரம் மிகவும் முக்கியம். ஒரு வருடம் தினமும் அலுவலகத்தில் நான் எட்டு மணி நேரம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, சினிமாவில் 15 நாட்களில் சம்பாதிக்க முடிகிறது.

இரண்டாவதாக, தமிழ்நாட்டில் ஒரு சாதாரண எழுத்தாளனுக்குச் சிறு பயணம் கூடச் செய்யமுடியாது, ஒரு புத்தகத்தை வாங்க முடியாது. ஆனால் திரைப்படத்துறை எழுத்தாளனாக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு புத்தகம் வேண்டுமானாலும் வாங்கலாம், பயணம் செய்யலாம். இதற்காகத் திரைத்துறைக்குப் பெரிய அளவில் கடமைப்பட்டிருக்கிறேன்.குறிப்பிட்ட வயதில் ஓர் எழுத்தாளன் என்ற முறையில் நான் மங்கிப் போய்விடாமல், என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி, இவ்வளவு எழுத வைப்பது சினிமாதான்.

கே: ஒரு காலத்தில் அச்சிதழ்கள் மூலமாகத்தான் எழுத்தாளர்கள் அறியப்பட்டார்கள். ஆனால் தற்போது இணையம் வந்து பெருமளவு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. தனி வலைதளங்கள், வலைப்பக்கங்கள் என வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. இதனால் இலக்கியத்திற்கு, எழுத்தாளர்களுக்கு நன்மை விளைந்திருக்கிறதா?

ப: எழுத்தாளர்களுக்கு நன்மை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். எப்படியென்றால் நான் ஒரு பிளாக் நடத்துகிறேன். ஒருநாளைக்குச் சுமார் 8000 முதல் 10,000 பேர் வரை வந்து பார்த்துச் செல்கின்றனர். ஒரு சிறு பத்திரிகையின் ரீச்சே இரண்டாயிரம் பிரதிகள்தாம். ஆக, எந்தக் குறுக்கீடும் இல்லாமால் தினமும் 10000 நபர்களிடம் சென்றடைய முடியும் என்பது ஒரு அசாதாரணமான விஷயம். இதன்மூலம் எனது புத்தகங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. மட்டுமல்ல; இது உலகம் முழுக்கப் போகும். ஒரு தமிழ்ப் புத்தகம் சென்றடையாத இடத்திற்கெல்லாம் போகும். எனக்கு பின்லாந்திலிருந்து, ஐஸ்லாந்திலிருந்தெல்லாம் மின்னஞ்சல் வருகிறது.

இரண்டாவதாக, தமிழ்ப் புத்தகங்கள் அதிகம் விற்கும் நிலை வந்ததற்கு இணையம்தான் காரணம். முன்பெல்லாம் புத்தகங்கள் வெளியாகும் தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க எந்த ஊடகமும் தமிழில் கிடையாது. தமிழின் பிரபல பத்திரிகைகள் பெரும்பாலும் புத்தக மதிப்புரை போடுவது கிடையாது. இன்றைக்கு, எழுத்தாளர்களுக்கு அவர்களுடைய எழுத்தை நேரடியாக வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவும், அவர்களுடைய புத்தகம் பற்றிய தகவலைப் பரவலாக்கவும் இணையம் பெரிய அளவில் உதவியிருக்கிறது.

ஆனால், மறுகட்டத்தில் இணையத்தில் 'பிளாக்' உருவாக்கி எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில், படிப்படியாக வளர்ச்சியைப் பார்க்கக் கூடிய எழுத்தாளர்கள் என்று பார்க்கப்போனால் கிட்டத்தட்ட யாருமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. நானும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிளாக் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பார்க்கிறேன். அவர்கள் எழுத்தில் அன்று முதல் இன்றுவரை அதே மாதிரி வளவளாதான். எழுத்தைக் கட்டுப்படுத்தும் முக்கியமான அம்சம் பக்க அளவு. ஒரு பத்திரிகைக்கு எழுதினால், “சார் ரெண்டு பக்கம் இருக்கு. ஒரு பக்கமாச் சுருக்கிக் கொடுங்க” என்பார். இணையத்தில் நீங்கள் 300 பக்கம் எழுதிக் கொண்டே போகலாம். யாரும் கேட்க மாட்டார்கள். படிக்கிறார்களா, இல்லையா என்ற கவலையும் இல்லை. எழுத்தின் தரத்தை முக்கியமாகத் தீர்மானிப்பது அந்தச் சரிவிகிதம்தான்.

இரண்டாவது, பத்திரிகை என்பது ஒரு பொதுமேடை. அதற்குரிய விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் எழுத முடியும். அதை ஒரு தேர்ந்த எடிட்டர் செய்வார். எடிட்டர்கள் வழியாக உங்கள் எழுத்துக்கள் செல்லும்போது இரண்டு விஷயம் நடக்கிறது. ஒன்று அவர் நிராகரிக்கிறார். இந்த நிராகரிப்பு ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியமான விஷயம். அதுதான் அடுத்து என்னை ஒரு நல்ல எழுத்தாளனாக உருவாக்கும். நான் உயிர்மைக்குக் கதை எழுதித் திரும்பி வந்தால், அதைவிடச் சிறப்பாக எழுத வேண்டும். அதுபோன்று எழுதி, அந்த எழுத்து வெளியாகும்போது, அது எடிட் செய்யப்பட்ட வடிவத்தில் இருக்கும். இவை இரண்டும் சேர்ந்துதான் ஒரு நல்ல எழுத்தாளனை மேம்படுத்தும்.

இன்றைக்கு இளம் எழுத்தாளர் வாமு.கோமு எழுதுகிறார். ஒரு பாரா படித்தாலே வாமு.கோமு என்று தெரிகிறது. அவர் இளம் எழுத்தாளர்தான். அதுபோல இணையத்தில் எத்தனையோ பேர் எழுதுகிறார்கள். இன்னார் எழுதிய கட்டுரை என்று ஒரு பாராவைப் படித்துவிட்டு, அவர்தான் எழுதினார் என்று அடையாளம் காண முடியுமா? முடியாது. இணையத்தின் மிகப்பெரிய பலவீனம் இதுதான்.

இரண்டாவதாக, இணைய சுதந்திரத்தின் மூலம் அவர்கள் ஜெயமோகனைத் திட்டலாம். சுந்தர ராமசாமியைக் குறை சொல்லலாம். அது அவர்களுடைய சுதந்திரம். ஆனால் அதே கருத்தை அவர்கள் உயிர்மைக்கு அனுப்பினால் அவர்கள் கேள்வி கேட்பார்கள். “இவர்களைக் குறை சொல்ல நீ யார்? உனக்கு என்ன தெரியும், நீ எந்த அளவுக்குப் படித்திருக்கிறாய்? இந்தக் கருத்தைச் சொல்வதற்கான தகுதி உனக்கு என்ன இருக்கிறது?” என்று கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்வி இவர்களைக் காயப்படுத்தும். அதற்கு நீங்கள் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இணையத்தில் இதெல்லாம் எதுவும் இல்லாமல் நீங்கள் எழுதிக் கொண்டிருக்கலாம்.

அடுத்து இணையத்தில் முக்கியமான விஷயம், ஹிட்ஸ் வர வேண்டுமென்றால் யாரையாவது கடுமையாகத் திட்டினால், கடுமையாக விமர்சனம் செய்தால்தான் ஹிட்ஸ் வரும். ஆகவே வசை என்பது ஒரு பெரிய, சுவாரஸ்யமான விஷயமாக வளர்ந்திருக்கிறது. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பையும் ஒரு சமூகத்தின் பலவீனம்தான் முதலில் பயன்படுத்திக் கொள்ளும். பாலியல் மனத்தாழ்வு ஒருவருக்கு இருந்தால் டி.வி. மானாட மயிலாட பார்க்கத்தான் பயன்படும். ஒவ்வொருவரும் நம்முடைய பலவீனத்தை வெல்ல வேண்டும். அதுபோல இணையத்திலும் கோழைத்தனம் - ஒளிந்து கொண்டு திட்டுவது, பொறுப்பில்லாமல் எதையாவது சொல்வது - இதற்குத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

##Caption## கே: இந்தியா முழுக்க நீங்கள் சுற்றுப்பயணம் செய்திருக்கிறீர்கள். உங்கள் பார்வையில் இந்தியா எப்படி இருக்கிறது?

ப: இந்தியா முழுவதும் என்பது மிகவும் மிகையான வார்த்தை. தாமிரபரணிக் கரையில் இருக்கும் கோயில்களை முழுமையாகப் பார்த்து முடிக்கவே எப்படியும் ஒரு மாதம் ஆகும். தினமும் பார்க்கலாம். அவ்வளவு முக்கியமான கோயில்கள் இருக்கிறது. தமிழகத்திலுள்ள மிக முக்கியமான ஆலயங்களைப் பார்க்க எப்படிப் பார்த்தாலும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். அப்படியிருக்கும் போது இந்தியா முழுமையும் அவ்வளவு சீக்கிரம் பார்த்து விட முடியாது.

இந்தியாவைப் பற்றி சமீபத்தில் க. ராஜாராம் என்று நினைக்கிறேன், அவர் தன் குறிப்பில் அண்ணாதுரையைப் பற்றி எழுதியிருக்கிறார். அவர் தன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் ஒருமுறை டெல்லிக்குக் காரில் போனார். இந்த அனுபவம்தான் இந்தியாவைப் பற்றிய ஒரு பார்வையை அவருக்குக் கொடுத்தது. பிரிவினைவாதத்திலிருந்து அவர் விலகிப் போவதற்குக் காரணமாக அமைந்தது அந்தப் பயணம்தான் என்று ராஜாராம் எழுதியிருக்கிறார். மொழிகள், கலாசாரக் கூறுகள் வேறாக இருக்கலாம். ஆனால் இந்தியா முழுமையான ஒரு தேசம் என்பது திறந்த மனதோடு பயணம் மேற்கொள்ளும் யாவரும் அறிந்து கொள்ளலாம். இது செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியல் கட்டமைப்பு அல்ல. பக்தி இயக்கத்தில் ஆரம்பித்து எல்லாமே தமிழ்நாட்டுக்குள்ளேயோ, கேரளத்திற்குள்ளேயோ முடிந்து விடுவதில்லை. நம்மாழ்வாரில் ஆரம்பித்து கபீர், குருநானக் வரை இந்தியா முழுக்க அதன் அலைகளைப் பார்க்கலாம். இவை நாடுதழுவிய இயக்கங்கள், இன்றைக்கு இருக்கும் தலித் இயக்கங்கள் வரை.

இந்தியா முழுக்க உள்ளது ராமாயணம், மகாபாரதம். இதில் பழங்குடிப் பண்பாடும் கலந்துறவாடியிருக்கிறது. இன்றைக்குச் சொல்கிறார்கள் ஆதிச்சநல்லூரில் என்ன கிடைக்கிறதோ அதுதான் ஹரப்பா, மொகஞ்சதாரோவில் இருக்கிறது என்று. இதன் மூலம், சில அசடுகள் நீண்ட காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் வடக்கு, தெற்கு என்ற பிரிவினையே அபத்தமாகி விடுகிறது. இந்தியா முழுக்க ஒரே பண்பாடுதான். எப்போது ஆதிச்சநல்லூர் 10,000 வருஷம் முந்தியது என்று வருகிறதோ அப்போதே இதெல்லாம் ஒன்றாகி விட்டது. ஆங்கிலேயர்கள் இந்த மண்ணுக்கு அந்நியர்கள் என்பதால் இந்தத் தொன்மையை அவர்களால் மனத்துள் வாங்க முடியவில்லை.

அதிகாரத்தைக் கொண்டு மக்களை அடிபணிய வைத்து பேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த பேதங்களுக்கப்பால் இந்தியா ஒரு தேசம், ஒரு பண்பாட்டுவெளி என்பதுதான் இந்தியா திருப்பித் திருப்பிச் சொல்லும் செய்தி. இந்தியப் பண்பாடு என்பது இங்கே இருக்கும் நிலம்தான். மண்தான். இங்குள்ள நதிகள், மலைகள், கோவில்கள்தான். இந்தியாவின் ஆன்மீகம் என்பது இந்த தேசம்தான். இந்த மண்ணைப் பார்க்கிறது, நடக்கிறது மாதிரியான ஒரு பெரிய 'ஸ்பிரிச்சுவல் எக்ஸ்பீரியன்ஸ்' வேறு கிடையாது.

நித்யாவிடம் (குரு நித்யசைதன்ய யதி) ஒரு சிஷ்யர் வந்தால், அவரை ஒரு கட்டம்வரை வைத்துக்கொண்டு, ஆசிர்வாதம் செய்து அவரை அனுப்பி விடுகிறார். அப்படி எல்லோருமே பயணம் செய்யக் கிளம்பிப் போகிறார்கள். 5, 6 வருடம் கழித்துத் திரும்ப வருகிறார்கள். ஒரு இந்தியப் பயணத்தின் போதுதான், அவன் இந்தியாவின் ஆன்மீகத்தை கண்கூடாகப் பார்க்கிறான். இந்த மண் தன்னியல்பாகவே spiritual ஆகத்தான் இருக்கிறது அது அதன் வடிவம். ஏனென்றால் நீண்டகாலமாக இந்த மண்ணில் ஒரு தேடல் நடந்திருக்கிறது.

உங்களுக்குத் திறந்த மனம் இருக்குமானால், கொஞ்சம் நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்றால், ஓர் இந்தியப் பயணத்தில், எப்போதுமே உங்கள் விழியைத் திறக்கக் கூடிய ஒருவரையாவது சந்திக்காமல் இருக்க மாட்டீர்கள். திருப்பித் திருப்பி யாராவது ஒருவர் வந்து கொண்டே இருப்பார். எங்கிருந்து கிளம்பி வருகிறார்களோ என்று எண்ணும்படி, ஒரு அபூர்வமான ஆள் வந்து ஒரு பெரிய அனுபவத்தைக் கொடுப்பார்.

கே: அப்படி ஒரு சம்பவம் சொல்லுங்களேன்!

ப: நாங்கள் ஆதிச்சநல்லூர் சென்றபோது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு ஆள் எங்கள் அருகே வந்தார். “இதுதான் ஆதிச்சநல்லூர்” என்று தொடங்கிப் பல விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் பெயர் ஆதிச்சநல்லூர் சிதம்பரம். 'ஆக்ஸ்போர்டு ஹிஸ்டரி ஆஃப் டமில் இண்டியன் ஹிஸ்டரி'யில் ஆரம்பித்து, இன்றைக்கு வரைக்குமான ஆதிச்சநல்லூரின் வரலாற்றைப் படபடவென விரிவாக, சங்க இலக்கிய மேற்கோள்களோடு கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பேசினார்.

அவர் பேசத் தொடங்கியபோது, அருகில் இருந்த நண்பர் வக்கீல் கிருஷ்ணன், “இவர் ஏதோ கிராமத்து ஆளு, தனக்குத் தெரிந்ததை வைத்து உளறுகிறார்” என்று நினைத்தார். “இதுதான் இந்தியாவிலேயே பழமையான அகழ்வாராய்ச்சி இடம்” என்று அந்த மனிதர் சொன்னார். அதற்கு கிருஷ்ணன், “இந்தியா என்ன, உலகத்திலேயே முதன்முதலில் இங்குதான் தோண்டி எடுத்திருக்கிறார்கள்” என்று கிண்டலாகச் சொன்னார். ஆனால் அவர் அதைக் கவனிக்கவில்லை. நான் கிருஷ்ணனிடம் “சும்மா இருங்க, இவர் மாதிரி ஆட்கள் எல்லாம் அவ்வளவு ஈஸியாகச் சொல்லிவிட மாட்டார்கள்” என்று சொன்னேன். அப்புறம் பேசப்பேச அந்தப் பெரியவர் எங்கேயோ போய் விட்டார்! அவர் ஒரு கோவணம் கட்டியிருந்தார், கையில் ஒரு தொரட்டி. மாடுதான் மேய்த்துக் கொண்டிருந்தார். வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் போன பிறகு கிருஷ்ணன் சொன்னார், “தலையில் கடப்பாரையில் அடித்த மாதிரி இருக்கு சார், இது தேவைதான்” என்று. இது ஒரு சித்தர் பூமி.

நித்யாவோட குருவான நடராஜ குரு ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை மைசூரில் திவான் பேஷ்காராக இருந்தார். நடராஜ குரு முதலில் டூன் ஸ்கூலில் படித்தார். பின்னர் ஆக்ஸ்போர்டுக்குச் சென்று படித்தார். அங்கிருந்து பின் ஸ்விட்சர்லாந்து சென்று விலங்கியலில் டாக்டரேட் வாங்கினார். அப்புறம் சார்பான் சென்று கல்வித்துறையில் ஆராய்ச்சி செய்து மீண்டும் ஒரு டாக்டரெட் வாங்கினார். திரும்ப வந்தார். தன் குருவைப் பார்த்தார். “சரி இங்கேயே இரு” என்று குரு சொல்லி விட்டார். “ஒரு சோப் எக்ஸ்ட்ராவாக வாங்கு” என்று குரு சொன்னதாக வேடிக்கையாகச் சொல்வார்கள். பின் இரண்டு வருடம் குருகுலத்தில் சமையல் செய்தார். அதன் பிறகுதான் குரு அவரை சிஷ்யராக ஏற்றுக் கொண்டு, கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு நடராஜ குரு கிளம்பிப் போய் ஆறு வருடம் இந்தியா முழுக்கப் பிச்சை எடுத்து அலைந்திருக்கிறார். இன்றைக்கு 90 வயதான ஒரு ஆள் இருந்தால் அவர் நடராஜ குருவுக்குப் பிச்சை போட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுவதும் அவர் ஆறு வருடங்களுக்கும் மேல் அலைந்து திரிந்திருக்கிறார். நித்யா 4 வருடங்கள் இது போன்று பிச்சை எடுத்து அலைந்திருக்கிறார். நித்யா, நடாரஜ குரு போன்றவர்கள் எல்லாம் படிப்பில், செல்வத்தில் பெரிய மனிதர்கள். ஆனால் அவர்கள் பிச்சை எடுத்து அலைந்திருக்கிறார்கள். அதுபோல இன்றைக்கு நீங்கள் பார்க்கக் கூடிய சாமியார்களில் யார் அப்படி என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

கே: கர்நாடக சங்கீதம் தமிழ்ப்பாடல்களை ஒதுக்குகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன. ஒரு இசை ஆர்வலர் என்ற முறையில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள?

ப: விஜயநகர மன்னர்கள் தெலுங்கர்கள். அவர்கள் தென்னிந்தியா முழுவதையும் ஆண்ட காலத்தில், அரச சபைகளில் தெலுங்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த வரலாற்றுப் பின்புலத்தின் அடிப்படையில் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இசைக்கப்படும் கர்நாடக சங்கீதப் பாடல்களில் தெலுங்குப் பாடல்கள் இடம்பெறுவது இயல்பானதுதான். ஆனால் ஆரம்பம் முதலே தமிழிசை இருந்திருக்கிறது. தமிழிசை மூவரான அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோர் ஏறக்குறைய தியாகராஜருடைய சமகாலத்தவர்கள்.

19ம் நூற்றாண்டில் இருந்து 20ம் நூற்றாண்டிற்குள் இவ்விசை நுழையும் போது அக்காலத்தில் இருந்த பாடகர்கள் அனைவருமே குருகுல முறையில் பயின்றவர்கள். அவர்கள் குரு என்ன கீர்த்தனை சொல்லிக்கொடுத்தாரோ அதைத்தான் பாடினார்கள். புதிதாக ஒரு பாடலை ஸ்வரப்படுத்திப் பாடும் வழக்கமே கிடையாது. அதனால் சபையில் பாடப்படும் எல்லாப் பாடல்களுமே குரு சொல்லிக் கொடுத்த தெலுங்குப் பாடல்களாகவே இருந்தன. இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலப் பாடகர்கள் 50 பாடல்களுக்குள் தான் பாடினார்கள். 51வது பாடலைக் கேட்பது மிக அபூர்வம். இதைப்பற்றி பாரதியார் கிண்டல் செய்திருக்கிறார். எங்கே போனாலும் 'ஸ்ரீசக்ர ராஜ' பாடலைத்தான் பாடிக் கொண்டிருப்பார்கள் என்று. ஒரு விஷயம் சொல்வார்கள்: சுசீந்திரம் கோயிலில், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைதான் முதன்முதலில் புதுப் பாடலை வாசித்திருக்கிறார். இது ஒரு தேக்க நிலையைத்தான் காட்டுகிறது.

உண்மையில், விஜயநகர காலத்துக்கும் முற்பட்ட, இடைக்காலத் தேக்க நிலைக்கெல்லாம் முற்பட்ட, உண்மையான நமது இசை எது என்று பார்த்தால் அது பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்ட இசைதான். அது இன்றும் ஓதுவார்கள் பாடும் பண்ணிசை என்ற பெயரில் விளங்குகிறது. இந்தப் பண்களின் வேர் எது என்று என்று பார்த்தால், தமிழின் மிகத் தொன்மையான நூல்களில் அதற்கான விளக்கங்கள் உள்ளன. அந்த இசைதான் இன்று கர்நாடக இசையாகப் பாடப்படுகிறது என்பது தமிழிசை இயக்கத்தினரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் இந்தக் கருத்தை முன்வைத்துப் பேசப்பேச, இவர்களில் ஒரு சாரார் அதை வேண்டுமென்றே மூர்க்கமாக நிராகரிக்க ஆரம்பித்தார்கள். அவ்வாறு நிராகரிப்பதால், தமிழிசை இயக்கம் சார்ந்தவர்களுக்கு ஒரு கசப்பு, கோபம் போன்றவை இருப்பது மிக இயல்பான விஷயம்.

ஆனால் அடுத்த தலைமுறையினருக்கு இது போன்ற பிடிவாதங்களோ, கசப்புணர்வோ இல்லை. உதாரணமாக சஞ்சய் சுப்ரமண்யம், சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ என எல்லோரும் நிறையத் தமிழ்ப் பாடல்களைப் பாடுகின்றனர். இவர்கள் அனைவருமே தங்கள் குருநாதர்கள் சொல்லிக்கொடுத்ததை மட்டுமல்லாமல், தாங்களாகவே ஆராய்ச்சி செய்து பல பாடல்களைப் பாடுகின்றனர். ஆனால், இந்த மாற்றம் வந்திருக்கும் விஷயம் பற்றித் தற்போது தமிழிசை பற்றிப் பேசும் கும்பல் ஏதும் அறியவில்லை. ஏனென்றால் அவர்கள் சங்கீதமே கேட்க மாட்டார்கள். அவர்களில் ஒரு சிலர் தமிழிசை படித்தவர்களாக இருக்கலாம். மற்றவர்களுக்கு இசைபற்றி எதுவுமே தெரியாது. இந்த மாற்றங்களையெல்லாம் அறியாமலே இவர்கள் வெற்றுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதேபோலத்தான், நானும் என்னுடைய நண்பரும் சிதம்பரம் கோயிலுக்குச் சென்று, ஆறுமுகசாமி நின்று பாடிய அதே இடத்தில் தேவாரம், திருவாசகம் பாடியிருக்கிறோம். எங்களை யாரும் அடிக்கவில்லை. எல்லா நாளும் அங்கு தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு வருகிறது. இதையே ஒரு சடங்காக நீங்கள் பாடப்போனால் அவர்கள் சம்மதிப்பதில்லை. காரணம் நீங்கள் அப்படிப் பாட ஆரம்பித்தால், நாளைக்கு அதிகாரம் தங்கள் கையை விட்டுப் போய்விடும் என்ற தீட்சிதர்களின் பயம்தான். ஆக, அவர்களுடைய பலம் என்பதே, சிதம்பரம் ஆலயம் கட்டப்பட்ட காலம் முதலே 2000 வருடங்களாக நாங்கள் இருக்கிறோம், எல்லாவற்றையும் நாங்கள்தான் பார்த்துக் கொள்வோம், வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்பதுதான். ஏனென்றால் அது ஒன்றுதான் அவர்களுக்குப் பிழைப்பு. அவர்களுடைய வாழ்க்கை. அதனால்தான் மாற்றங்களுக்கு அவர்கள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

நானும், என் இலங்கை நண்பரும் சிதம்பரம் சென்றிருந்த போது, ஆறுமுகசாமி பாடிய அதே மேடையில், நண்பர் போற்றித் திருஅகவலைப் பாடினார். தீட்சிதர்கள் விபூதிப் பிரசாதம் கொடுத்தார்கள். இந்தப் பிரச்சனையைப் பேசிப் பேசி, சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே தமிழில் பாடக்கூடாது என்று சட்டம் இருப்பதாக ஜனங்கள் நம்புகிறார்கள். இணையத்தில் எழுதும் ஆசாமிகளில் 90% பேர் இப்படித்தான் நம்புகிறார்கள்.

தமிழ்நாட்டில், இந்த மோசமான அரசியல் சூழலில், எந்த விஷயமும் இரண்டு கை தாண்டும் போது அப்பட்டமான கீழ்த்தரமான பொய்யாக மாறி விடுகிறது. இது பொய்யாக மாறிவிடுவதனால் பொய்யைப்பற்றி மட்டுமே பேசிப்பேசி அதன் உண்மையை மறந்து விடுகிறோம். நானே கோயிலில் போய் தமிழில் பாடியிருக்கிறேன், யாரும் ஒண்ணும் சொன்னதில்லை. அப்புறம் எப்படி இப்படிச் சொல்வார்கள் என்று ஒருவன் யோசித்துப் பார்த்தால் இந்த தீட்சிதர் பிரச்சனைகளோ, கோயில் யாருக்குச் சொந்தம் என்ற விவாதங்களோ வந்திருக்கவே வந்திருக்காது.

கே: புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு, தமிழ் வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: இரண்டு விஷயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான விஷயங்கள் நடைபெறாததற்கு முக்கியக் காரணம் நிதிவசதிக் குறைவு. குஜராத்தில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தீர்கள் என்றால் தெரியும். பூகம்பத்தால் அழிந்து போன அகமதாபாத்தை இரண்டே வருடத்தில் திருப்பிக் கட்டியிருக்கிறார்கள். குஜராத்திப் பண்பாடு எல்லாமே இன்றைக்குப் புலம்பெயர்ந்த குஜராத்திகளை நம்பி இருக்கிறது. ஈழப்பண்பாடு என்பது, ஏதோ ஒரு வகையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைச் சார்ந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கேயும் சென்று தங்கள் ஜாதி வேறுபாடுகளைத்தான் பெரிது செய்கிறார்களே தவிர, தமிழ்நாட்டுக்கு என்று ஏதாவது முக்கியமாகச் செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை. அமெரிக்காவில் செட்டில் ஆவதற்குத் தான் அவர்கள் யோசிக்கிறார்கள்.

கேரளத்தை எடுத்துக் கொண்டால், புலம்பெயர்ந்த மலையாளிகள் அளிக்கக் கூடிய விருதுகள்தான் அதிகம். புலம்பெயர்ந்த மலையாளிகள் ஆதிநூல்கள் பலவற்றை, எட்டாயிரம், பத்தாயிரம் பக்கங்கள் வரும் 'கவன கௌமுதி' போன்ற நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்கள். லாபம் வராவிட்டாலும் புத்தகமாவது வெளிவருகிறதே என்று பதிப்பகத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இவைதான் அவர்கள் தங்கள் நாட்டுக்கு, பண்பாட்டுக்கு செய்யக்கூடிய வேலை. அமெரிக்காவில் இருக்கும் ஒரு தமிழ்ச் சங்கம், வருடா வருடம் நடிகர், நடிகைகளை வரவழைத்து 'தமிழ் விழா' நடத்துகிறார்கள் என்று கேள்விப்படும்போது கேவலமாக இருக்கிறது. நடிகர், நடிகைகளைக் கூப்பிடக் கூடாது என்று நான் சொல்லவில்லை. கூப்பிடுங்கள். ஆனால் அதற்கு ஒரு அளவு இருக்கிறது. பண்பாட்டின் காவலர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எத்தனையோ கலைஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் இருக்கும்போது, தமிழ்நாட்டின் பட்டிமன்றப் பேச்சாளர்களையும், 'நகைச்சுவைத் தென்றல்'களையும் வரவழைத்து கௌரவிக்கக் கூடிய ஒரு கேவலம் இருக்கிறதே, ஒரு சராசரி மலையாளி அதைச் செய்வானா? இதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

இப்போது நான் ஒரு தமிழனாக, எழுத்தாளனாக, புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து கௌரவம் அடைந்திருக்கிறேன் என்றால் அது இலங்கை புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து தானே தவிர, தமிழ் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து அல்ல. தமிழகத்தில் இன்றைக்கு முக்கியமாகச் செய்யப்பட்ட பல விஷயங்கள் இலங்கைப் புலம்பெயர்ந்தவர்களால் செய்யப்பட்டதே ஒழிய, தமிழ்ப் புலம்பெயர்ந்தவர்களால் அல்ல. அவர்கள் செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதுபற்றி அக்கறை கொள்வதில்லை. இரண்டவதாக இவர்கள் அமெரிக்காவையோ, லண்டனையோ தங்கள் நாடாக ஏற்று வாழத்தான் நினைக்கிறார்கள். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்றுதான் நான் கருதுகிறேன்.

மற்றொரு விஷயம், இவர்களில் அடுத்த தலைமுறையினர் முழுக்க முழுக்க வேறு பண்பாட்டையே தங்கள் பண்பாடாக ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குழந்தைகளுக்கு எதையும் நீங்கள் சொல்லிக் கொடுக்க முடியாது. முதலில் உங்களுக்கு ஆர்வம் வந்தால் குழந்தைகளுக்கு ஆர்வம் வரும். நீங்கள் வீட்டில் தமிழில் பேசினீர்கள் என்றால், தமிழ்ப் புத்தகங்களைப் படித்தீர்கள் என்றால், தமிழ்ப் பாட்டைக் கேட்டீர்கள் என்றால் குழந்தைகளுக்கும் ஆர்வம் வரும்.

இன்றைக்கும் மேலைநாடுகளில் கொஞ்சம் கவனித்தீர்கள் என்றால், யூத சமுதாயம்தான் மிக மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகிறது. ஏனென்றால் அவர்கள் தங்கள் யூதப் பண்பாட்டு அடையாளங்களை இன்றளவும் விடாமல் இருப்பதுதான். பண்பாட்டின் தவறான விஷயங்களை விடலாம். பண்பாட்டின் சாரமான விஷயத்தை விட்டுவிட்டால் அதைத் திருப்பி அடைவது மிகவும் கஷ்டம். ஒரு தலைமுறை இடைவெளி வந்தாலே திருப்பி அடைவது கடினம். அப்படி நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உண்டு.

ஜெயமோகன் கருத்துகள், சிந்தனைகள் எல்லாமே மாறுபட்டவை. 'எவர் வரினும் அஞ்சேன்' என்ற துணிச்சலோடு பேசுகிறவர் அவர். “நிறையப் பேசிவிட்டோமே, இவ்வளவையும் போடமுடியுமா?” என்று அவரே இறுதியில் கேட்குமளவுக்கு நிறையப் பேசினோம். இங்கே வெளியாகியிருப்பது ஓரளவுதான் என்றாலும் அது அவரது சிந்தனையோட்டத்தை, தமிழகத்தின் சிந்தனையோட்டத்தில் அவரது பங்களிப்பின் முக்கியத்துவத்தைக் காண்பிப்பதாக உள்ளது. தங்குதடையில்லாமல் பேசிய அவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

***


பெட்டிச் செய்திகள்:

அறிவுஜீவிகளும் உண்மையும்

இங்கே ஆதிக்கம் எவ்வளவு போலியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆதிக்க எதிர்ப்பும் போலியாக இருக்கிறது. பழமை எந்த அளவிற்குக் கண்மூடித்தனமாக இருக்கிறதோ, அதே அளவுக்குப் புதுமையும் கண்மூடித்தனமாக இருக்கிறது. இறந்த காலம் எந்த அளவுக்குத் தவறாக இருக்கிறதோ அதே அளவுக்கு வருங்காலத்தை முன்நோக்கி வைக்கப்படும் அனைத்தும் தவறாக உள்ளன. உதாரணமாக, ஈரானில் ஷா ஆட்சிக்கு எதிராக கொமேனியின் புரட்சி வந்தபோது, அதை ஒரு புரட்சி என்று ஐரோப்பாவிலே இருக்கும் அத்தனை முற்போக்குவாதிகளும் நினைத்தார்கள். ஆதரித்தார்கள். மக்களை மூளைச்சலவை செய்து கொமேனி பதவிக்கு வந்ததை, மிகப்பெரிய மக்கள் புரட்சி என்று ஐரோப்பாவின் அறிவுஜீவிகள் கிட்டத்தட்ட 15 வருடம் கொண்டாடினார்கள். அந்தச் சமயத்தில், இல்லை இது புரட்சி அல்ல. மதவெறி அமைப்பு. எதிர்காலத்தில் சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று ஒருவன் சொல்லியிருந்தால் அவனை 'நீ ஒரு பிற்போக்குவாதி. நீ புரட்சிக்காரன் அல்ல' என்று சொல்லியிருப்பார்கள்.

நேபாளத்தில் புரட்சி நடந்தபோது, எவனாவது ஒரு முற்போக்குவாதி, ஒரு கலக எழுத்தாளன், ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட், அந்தப் புரட்சி உண்மையானதுதானா, அவர்களது நோக்கங்கள் நியாயமானதுதானா, அந்தப் புரட்சியினுடைய கோஷங்கள் சரியானதுதானா என்பது பற்றி ஒரு வார்த்தையாவது எழுதியிருப்பானா? அங்கு என்ன நடந்தது என்று ஒருவனாவது படித்துப் புரிந்துகொண்டு கட்டுரைகள் எழுதியிருப்பானா? இல்லை. அது புரட்சி. மாவோயிஸ்ட்கள் செய்வது. அப்போது அது முற்போக்குதான். அது சரிதான் - என்றுதான் இங்குள்ள அனைவரும் எழுதினர். இன்றைக்கு அதன் ஓட்டைகள் எல்லாம் வெளியே வந்து கொண்டிருக்கும் போது உண்மை தெரிகிறது. அந்த உண்மையை எழுதுவதற்கு எழுத்தாளன் இல்லை. பழமைவாதி எழுத மாட்டான். ஏனென்றால் அவன் பழமைவாதி. புதுமைவாதியும் ஒரு கோட்பாட்டில் சிக்கியிருக்கிறான். அவனாலும் உண்மையை எழுத முடியாது. இவ்வாறு உண்மையை எழுதுவதற்கு எழுத்தாளன் இல்லாமல் போய்விட்டான்.

- ஜெயமோகன்
***


தியாகராஜ உற்சவத்தில் தமிழ்!

தியாகராஜ உற்சவம் என்றால் என்னவென்று ’தமிழ் தமிழ்’ என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவர்கள் யாருக்காவது தெரியுமா? அது தியாகராஜருடைய பாடல்களைப் பாடுவதற்கான ஒரு விழா. அந்த ஆராதனையே தியாகராஜ சுவாமிகளுடைய பாடல்களை மட்டுமே பாடுவதாகும். அதில் முத்துசாமி தீட்சிதருடைய பாடலைப் பாடினால் கூட ஏற்பில்லை. தியாகராஜர் பாடியிருப்பது தெலுங்கில். அங்குப் போய் 'தமிழில்தான் பாட வேண்டும்', 'தமிழில் பாடு; இல்லாவிட்டால் தமிழ்நாட்டை விட்டு ஓடு' என்றெல்லாம் கூச்சலிட்டால் அது எப்படிச் சரியானதாக இருக்கும்?

தியாகராஜருடைய நினைவைப் போற்றும் விதமாக நாகரத்தினம்மாள் என்ற சிஷ்யை உருவாக்கிய அமைப்பு அது. அதில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக தியாகராஜருடைய பாடல்களை மட்டும் பாடுவார்கள். கடைசிநாளில், தியாகராஜரே உருவாக்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி ஆராதனையை நிறைவு செய்வார்கள். இதில் கடந்த முறை ஏசுதாஸின் மகன் விஜய் ஏசுதாஸ் மிகச் சிறப்பாகப் பாடினார். ஷேக் சின்னமௌலானா வாசித்திருக்கிறார். காசிம் முத்து, மஹபூபா என்று பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு நாகஸ்வரம் வாசித்திருக்கிறார்கள். இப்படி எல்லா மதத்து ஆட்களும் கலந்துகொள்ளும் விழா அது. எல்லோருக்கும் தெரியாத ஒரு விஷயம், 'தியாகராஜ சபை' என்பது இசை வேளாளருக்கு முன்னுரிமை தரும் அமைப்பு. ஹரித்துவார மங்கலம் பழனிவேல்தான் அதன் தலைவரே தவிர பிராமணர்கள் யாரும் தலைமைப் பொறுப்புகளில் கிடையாது. திருப்பாம்புரம் சண்முகசுந்தரம் முக்கியப் பொறுப்பில் இருப்பார். ஆனால் பிராமணர்கள் உள்ளே புகுந்து தமிழைத் துரத்தி விட்டார்கள் என்று இவர்களாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள்.

- ஜெயமோகன்
***


சந்திப்பு, படங்கள்: மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com