பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 25, 2009 அன்று சன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கில் பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டை முத்தமிழ்ச் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடியது. பூர்ணிமா ரெங்கராஜன் கடவுள் வாழ்த்துப் பாடினார். www.itsdiff.com
வானொலியை நடத்தி வரும் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா தொகுத்து வழங்கினார். சிறுவன் வருண் தமிழ்ப் புத்தாண்டு எவ்வாறு கணக்கிடப் படுகிறது என்பது குறித்தும், விரோதி வருடத்தின் சிறப்புக்கள் குறித்தும் பேசினார். ஏன் தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் துவங்குகிறது என்பதற்கான நிலவியல் முக்கியத்துவத்தையும், கிரக நிலைக் கணக்குகளையும் எளிமையாக விளக்கும் கார்ட்டூன் படங்களால் ஆன கையேடு ஒன்று வந்திருந்தோருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தொடர்ந்து கீர்த்தனா ஸ்ரீகாந்த், வைஷ்ணவ பிரபு, ரேணுகா மோகன்குமார், வசுதா ஐயர் ஆகியோர் வழங்கிய கர்நாடக இசைப் பாடல்கள் அரங்கேறின. வளர்ந்து வரும் டிரம்ஸ் வாத்யக் கலைஞர் சுபாஷ் ரமேஷ் பாடல்களுக்கு டிரம்ஸ் வாசித்தார். ராஜலக்ஷ்மி வழங்கிய வீணை இசை தொடர்ந்தது. பின்னர், தீபா மகாதேவனின் மாணவியான ஷ்ருதி அரவிந்தன் (பரத நாட்டியம்), மணீஷா நல்லமுத்து (குச்சிபுடி), ப்ரியா ராஜகோபால் அவர்களின் மாணவிகளான ப்ரியா சுப்ரமணியன், ஷோபனா கங்காதரன் (பரதநாட்டியம்), அஜிதா (பரத நாட்டியம்), ஸ்ருதி ஸ்வர லயா வித்யா வெங்கடேசனின் மாணவி ஸ்ரீவித்யா ராஜன் (பந்தாட்ட நடனம்) ஆகிய நடனங்கள் அனைவரையும் கவர்ந்து பாராட்டுகளைப் பெற்றன.

அடுத்து, சிறுவர்களும் இளைஞர்களும் வழங்கிய சேர்ந்திசை நடனங்கள் அரங்கேறின. பானுப்ரியா அவர்கள் இயக்கி வழங்கிய ‘சம்திங் சம்திங்' பாடலுக்கான நடனத்தில் ஆடிய சிறுவர்கள் ஒபாமாவின் பொருளாதாரச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடலை மாற்றி நடனமாடினார்கள். ஆரத்தி ஷங்கர், சிவசுந்தரி ராஜராஜன் ஆர்த்தி சஞ்சய், நித்யவதி சுந்தரேஷ் ஆகியோர் இயக்கிய சிறுவர் குழுக்கள் தனித்தனியே திரையிசைப் பாடல்களுக்கு நடனம் ஆடினர். சிவசுந்தரி ராஜாராஜன் மற்றும் சாந்தி சாம்பசிவன் இயக்கத்தில் சிறுவர்கள் குடையுடன் வந்து ஆடிய மேகம் கருக்குது, சின்ன சின்ன மழைத்துளி ஆகிய நடனங்கள் பாராட்டுப் பெற்றன. காயத்ரி ராமநாதன், ராஜேஷ்வரி ராமநாதன் சகோதரிகள் வழங்கிய பாடல்கள் கவர்ந்தன. கௌரி சேஷாத்ரி இயக்கிய சிறுவர் நாடகத்தில் சுத்தமான தமிழ் உச்சரிப்பும், நடிப்பும் பாராட்டுதல்களைப் பெற்றன.

தொடர்ந்து, ‘குடும்ப மகிழ்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பவர் மனைவியே, கணவனே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இளங்கோ மெய்யப்பன் நடுவராகக் கலந்து கொண்டார். மனைவியே என்ற அணியில் சாந்தி சாம்பசிவம், கோமதி, நித்யவதி சுந்தரேஷ் ஆகியோரும், கணவனே என்ற அணியில் திருமுடி, ஷங்கர், கௌரி சேஷாத்ரி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

அடுத்து வந்த நகைச்சுவை நாடகத்தில் வெங்கடேஷ், சாய் ஷங்கர், வெங்கடாசலம், அஷ்வின், லஷ்மி, வித்யா, ஷ்யாம், பானு, வாசு, ராஜா ஆகியோர் சிறப்புற நடித்ததோடு திரைப்படப் பாடல்களையும் பாடினர்.

அடுத்தடுத்த மாதங்களில் இலக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. வரவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களுக்கும், பங்கு பெறவும், சங்கத்தின் துணையுடன் புதிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் கீழ்க்கண்ட நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ளவும்:

கோவிந்தராஜன்: 408-394-4279
ஹரிஹரன்: 510-383-6146
சுந்தர்: 408-390-5257
மின்னஞ்சல்: bharatitamilsangam@yahoo.com
இணைய தளம்: www.batamilsangam.org

எஸ். திருமலை ராஜன்

© TamilOnline.com