அலபாமா தமிழ்ச் சங்கம் தமிழர் கொண்டாட்டம் 2009
மே 2, 2009 அன்று அலபாமா தமிழ்ச்சங்கம் ‘தமிழர் கொண்டாட்டம் 2009' விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. பர்மிங்கம் இந்து ஆலயத்தில் நடந்த இந்த விழாவிற்கு மொண்ட்காமரி, பஸ்கலூஸ், ஹண்ட்ஸ்வில் போன்ற இடங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வந்து கலந்து கொண்டனர். சிறுவர், சிறுமியர் நடனம் முதல் வாலிபர்கள் சிலம்பாட்டம் வரை அனைத்தும் சிறப்பம்சங்களாக விளங்கின.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. குத்துவிளக்கு ஏற்றப்பட்ட பின் ஏ.ஆர். ரஹ்மானின் ‘தமிழா தமிழா' பாடல் முழங்கியது. முதலில் சிறுவர் சிறுமியர்கள் பாடல், கிடார், வயலின், திருக்குறள் கூறுதல் என்று பலவிதத் திறமைகளைக் காண்பித்தனர். பின்னர் ‘சின்ன சின்ன ஆசை', ‘ஊ லலலா..', ‘ஹம்மா... ஹம்மா...' போன்ற பாடல்களுக்கு நடனமாடினர். அடுத்து ‘முனைவர் சம்பந்தம் விருது' அறிவிக்கப்பட்டது. முனைவர் சம்பந்தம் அலபாமா தமிழ்ச் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து தொண்டாற்றி அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அவரது நினைவாக ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ச் சங்கத்திற்குத் தன்னலம் கருதாது தொண்டாற்றும் ஒருவருக்கு அந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அவ்விருதினைப் பெற்றவர் முனைவர் கலைமுகிலன். உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் முகிலன், கடந்த 20 ஆண்டுகளாக அலபாமாவில் தமிழ்த் தொண்டாற்றி வரும் மலேசியத் தமிழர்.

தொடர்ந்து வாலிபர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதலில் ‘அல்லி தர்பார்' என்ற நகைச்சுவை நாட்டிய நாடகம் நடைபெற்றது. ஐந்து நிமிடங்களில் அனைவரது உள்ளங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ‘க ம க' இசைக்குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நலிந்து வரும் கிராமியக் கலைகளை வெகு அழகாக நடனமாடினார்கள். இதையடுத்து நடைபெற்ற சிலம்பாட்டம் மிகச் சிறப்பு. கூடியிருந்த அனைவருக்கும் வியப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அதனைச் செய்து காட்டினார்கள். அடுத்ததாக UABயில் பணிபுரியும் தமிழர்களின் தயாரிப்பான 'UABயில் கோவலன்' என்ற நகைச்சுவை நாடகம் பார்வையாளர்களின் வயிற்றைப் புண்ணாக்கியது. தொடர்ந்து வந்த மொண்ட்காமரி தமிழர்களின் பாம்பு நடனம் மற்றும் நாட்டுப்புற நடனம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதங்களுடன் விழா நிறைவு பெற்றது. அலபாமா தமிழ்ச் சங்கத் தலைவர் வெங்கடேசன் அவர்களும், குழு உறுப்பினர்களும் விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த விதம் பாராட்டத்தக்கது.

மகேந்திர மாதவன்,
அலபாமா

© TamilOnline.com