மே 23-25, 2009 நாட்களில் சிகாகோவில் 33ம் வருட தியாகராஜ உற்சவம் விமர்சையாக நடந்தது. திருவையாறில் நடப்பது போல், பஞ்ச ரத்ன கீர்த்தனைகளுடன் மிகச் சிறப்பாக விழா நடைபெற்றது. குழந்தைகள், பெரியோர் அனைவரும் அற்புதமாகப் பாடினர். ஒவ்வொருவருக்கும் ஒரு பாட்டுதான் என்றாலும் குழந்தைகள் மிக அழகாகப் பாடியது வியக்கத்தக்க விஷயம். சபையோர்கள் அவர்களைக் கைதட்டி உற்சாகமூட்டிக் கொண்டே இருந்தார்கள். பெண்கள், பட்டுப்புடவை சரசரக்க வளைய வந்ததும், சிறுமிகள் அங்கும் இங்கும் ஆடி ஓடியதும் அது அமெரிக்காதானா, இல்லை தென்னிந்தியாவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
24ம் தேதி மதியம் நடந்த நிகழ்ச்சியில் மேற்கத்திய வாத்தியக் குழுவாக சிறார்கள் தியாகராஜ கீர்த்தனைகளை வாசித்தார்கள். சிம்பொனிக்கு ஒத்ததாக மிக அற்புதமாக இருந்தது அது. மேற்கத்திய சங்கீதத்துடன் நம் கர்நாடக சங்கீதத்தை இணைத்து வழங்கியது ஓர் அழகாக இருந்தது. இந்த ஃப்யூஷன் இசையைப் பரவலாக இப்போது எல்லோராலும் ரசிக்க முடிகிறது.
மதிய விருந்துக்குப் பின் ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்த சஹானா ராகக் கச்சேரி அருமை. இரவு விருந்துக்குப் பின் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி கைகேயி, ஆண்டாள், தேவகி, கண்ணகி எனச் சிறப்புப் பெற்ற பெண்டிரைப் பற்றியதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி நேரடியாகத் திருவையாறு உற்சவத்திலேயே கலந்து கொண்டது போன்ற நிறைவைத் தந்தது. பக்கவாத்தியக்காரர்கள் அனைவரும் பொறுப்பை உணர்ந்து மிகவும் அழகாகப் பக்கம் வாசித்தனர். மொத்தத்தில் நிகழ்ச்சி நல்ல விருந்தாக அமைந்தது.
பிரேமா நாராயணன், இல்லினாய்ஸ் |