ஜூன் 13, 2009 அன்று லிவர்மோர் சிவ-விஷ்ணு கோவிலில் முதியோர் தினத்தின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது.
கல்பகம் சீனிவாசன் பாடிய பஜனைப் பாடலில் இன்பம் முகிழ்த்தது. முதியோர் இசைத்த தேசியப் பாடலுக்கு சிறுவர்கள் சுமேத், சஞ்சீவ் பக்கவாத்தியம் எடுப்பாக இருந்தது. பல்வேறு பாணியிலே உடை அணிந்து வந்த குழந்தைகளின் மழலையில் பன்மொழிப் பேச்சு பரவசப்படுத்தியது. வனலீலாவின் வசந்தமொழி பரம சுகம்.
பிரணவத்தின் தத்துவத்தை பிரபா துனேஜா விளக்கினார். பன்மொழியில் பக்தி பரவசப்படுத்தியது. ஐந்து அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும் முதியவர் கீதா நாராயணன் ஆடிய நடன நளினம் நெஞ்சைத் தொட்டது. பைந்தமிழ்ப் பாவையர் பச்சை வண்ணச் சேலை கட்டி ஆடிய கோலாட்டம், கும்மி பாரதியின் கனவுகளை மீண்டும் நினைவூட்டின.
கலைமாமணி ரங்கநாயகி ஜெயராம் அவர்களின் நாட்டியம் கண்ணுக்குக் குளிர்ச்சிதான். கீதா, பார்வதி ஆகியோர் மேற்பார்வையில் நிகழ்ச்சிகள் ஜொலித்தன. ஸ்ரீகாளி, கௌதம் குழந்தைகளை சம்ஸ்கிருதத்திலேயே பேசி நடிக்கத் தயாரித்திருந்தனர். இடையிடையே பொழிந்த பரிசுகள் ஆர்வத்தை அதிகரித்தன. இசை நாற்காலியில் அமரத் தொண்ணூற்றி இரண்டு வயது அலமேலு மாமி மடிசார் கட்டிக்கொண்டு ஓடியதைப் பார்த்துக் கைதட்டாதவரில்லை. கமலாவின் அமைதியும் சவிதாவின் வரவேற்பும் வித்யாவின் புன்சிரிப்பும் மற்ற அனைவரது ஒத்துழைப்பும் மனம் கலகலப்படையச் செய்தது. முடியாத முதியோர்களுக்கு அமர்ந்திருந்த இடத்திற்கே மதிய உணவை பத்மஜா எடுத்துச் சென்று உண்ண வைத்த அழகே அழகு. பரிசுப் பொருள்களைச் சுறுசுறுப்பாக எடுத்து உரியவர்களிடம் சேர்க்க உதவினர் தாரிணி, அர்ச்சனா.
எல்லா வேலையிலும் கைகொடுத்த ஆனந்த் குண்டு, தொகுப்புரை வழங்கிய புகைப்பட மன்னர் டி.கே.எஸ். போன்றோரைக் குறிப்பிட்டாக வேண்டும்.
ந. சாவித்ரி சக்திவாசன், பார்வதி சிவஸ்வாமி |