லாவண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
ஜூன் 20, 2009 அன்று கனெக்டிகட் ஆக்ஸ்போர்ட் உயர்நிலைப் பள்ளியில் செல்வி. லாவண்யா மாடபுசியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. லாவண்யா 8 வயது முதலே பரதத்தை ஜெயந்தி சேஷன் மற்றும் காயத்ரி பாலகுருநாதன் ஆகியோரிடம் முறையாகப் பயின்றவர்.

வெங்கடரமணன் மாடபுசி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து கீதா ரவிச்சந்திரன் மற்றும் வினய் மாடபுசியின் தொகுப்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் காயத்ரியின் விளக்கவுரைக்கு, லாவண்யா அபிநயித்து, விளக்கிய விதம் சிறப்பாக இருந்தது. முதலில் நாட்டியாஞ்சலியாக விநாயகர், சரஸ்வதி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மீதான துதிகளுக்கு அழகாக ஆடினார். அடுத்து வந்த அம்புஜம் கிருஷ்ணாவின் ‘கண்ணன் மதுர கீதம்' (ஹம்சானந்தி), இறுதியாக வந்த ‘தாயே யசோதா' ஆகிய கீர்த்தனங்களின் போது அனைவரையும் அந்த கோகுலத்துக்கும் பிருந்தாவனத்துக்குமே அழைத்துச் சென்றுவிட்டார். தொடர்ந்து நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் திருமணத்தைச் சித்திரித்தார்.

‘இடது பதம் தூக்கி' (கமாஸ்) என்ற பாபநாசம் சிவன் பாடல் அருமை. அதில் திச்ர நடையில் அமைந்த சரணத்தில் ‘திருவடி சிலம்புகள் கலீர் கலீரென' என்ற வரிகளுக்கு லாவண்யாவின் பாதவேலை சோபித்தது. அடுத்து, ‘ஸ்ரீராமசந்த்ர கிருபாளு' (யமன் கல்யாணி) என்ற துளசிதாசரின் பாடலில் ராவண கும்பகர்ணாதிகளை ஸ்ரீராமர் வதம் செய்யும் காட்சியை அபிநயிக்கும்போது அவர் கண்களில் தெரிந்த ரௌத்ரம் கண்டோரைக் கவர்ந்ததது. பாடலின் இறுதி வரிகளில் தானே துளசிதாசராக மாறி திவ்யநாம சங்கீர்த்தனம் செய்து அவையோரைச் சேர்ந்து தாளம் போட வைத்தார்.

இறுதியாக நடனக் கலைஞர் தனஞ்சயன் இயற்றிய ஷண்முகப்ரியா ராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார் லாவண்யா. மாடபுசி தம்பதியினர் நன்றி உரையாற்றினார்கள். கல்லூரியில் படிக்கும் அவர்களின் மகன் வினய் மாடபுசி, தமிழில் நன்கு படிக்க, எழுத, பேச வல்லவராக இருப்பதுடன் நில்லாமல், தமிழ் இலக்கியத்தை ஆர்வத்துடன் வாசிப்பவராக இருப்பது குறிப்பிடத் தக்கது.

பாபு பரமேஸ்வரன் (குரலிசை), ரங்கநாதன் சேகர் (மிருதங்கம்), சுதாகர் மகாலிங்கம் (குழலிசை), வினோத் கே. மனா (வயலின்) ஆகியோரின் பக்கம் வெகு சிறப்பு.

ஸ்ரீவித்யா மோகன்

© TamilOnline.com