வார்த்தை சிறகினிலே
ஆண் பெண் ஈர்ப்புக்கு ஆரோக்கியமான அடித்தளம் அமைய இந்தக் காலக் கல்வி இம்மியும் உதவவில்லை. பண அடிப்படையில் ஒழுக்கங்கள் பறிபோகின்றன. நல்லொழுக்கங்களைப் பேணத்தான் பெரியோர் குடும்ப அமைப்பைக் கண்டார்கள். ஆனால் குடும்ப அமைப்பு ஆணுக்கு மட்டுமே விதிகளை மீற மேலாண்மை அதிகாரம் வழங்கியது. குடும்ப அமைப்பு இன்றைய ஜனநாயகம் போல தாறுமாறாக இருக்கிறது.
- ராஜம் கிருஷ்ணன்

துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் புராணங்கள், இதிகாசங்கள் மதத்தை மட்டுமே சார்ந்தது என்று இன்றைய மதச்சார்பில்லா சமூகத்தில் இரு தலைமுறையினர் இந்தியக் கலாசாரத்தின் பல அடையாளங்களை அறிவதிலிருந்து தடுக்கப்பட்டு விட்டார்கள். இந்துத்துவா என்று முத்திரை குத்தி இவற்றைப் போற்றுபவர்கள் இந்த உலகத்திலேயே வாழத் தகுதியற்றவர்கள் என்று எண்ண வைத்து விடுகிறார்கள். நமது கலாசாரப் பரிச்சயத்திற்கு ஒரு பெரும் இழப்பு, பாடப் புத்தகங்களில் புராண, இதிகாசக் கதைகளைத் தவிர்த்து நமது மதச்சார்பின்மையை நிலைநிறுத்தியது.
- அசோகமித்திரன்

1953-ல் எனக்கு 18 வயசு. ஒரு நாள், ரேஷன்ல அரிசி வாங்கப் போயிருந்தேன். 14 கிலோ அரிசியை அளந்து பையில கட்டிட்டு கிளம்புறப்போ வந்து நின்ன தாசில்தார், “ஒரு ஆள் இத்தனை கிலோ அரிசியைத் தூக்கிட்டுப் போறதுக்குச் சட்டப்படி அனுமதியில்லை. பையை வெச்சுட்டுப் போ”ன்னாரு. “இப்ப நான் போறேன். ஆனா, இதே அரிசியை நீங்களே என்னைத் தேடி வந்து வாங்கிக்கோன்னு கெஞ்சுவீங்க”ன்னு மட்டும் சொல்லிட்டு வந்தேன். அவர்மேல கேஸ் போட்டேன். தீர்ப்பு வந்துச்சு. நான் சொன்ன மாதிரியே, ஒரு பையில அதே 14 கிலோ அரிசியைத் தூக்கிட்டு வந்து எங்க வீட்டுக் கதவைத் தட்டுனாரு அந்த தாசில்தார். அந்த வயசுல அது பெரிய சாதனையா, ரொம்ப மிதப்பா இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் தாண்டிப் புரிஞ்ச ஒரு விஷயம்... எதிர்த்து நிக்கிறது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நியாயம் நம்ம பக்கம் இருந்தா நாம பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் கடைசியில நாமதான் ஜெயிப்போம்.
- டிராஃஃபிக் ராமசாமி

ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும், தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம் என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது
- தமிழருவி மணியன்

மேயர் முதல் கல்விச் செயலாளர், அமைச்சர் வரை எல்லா அரசு ஊழியர்களின் வீட்டுக் குழந்தைகளும் மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தினால்தான், வரிப்பணத்தை பள்ளிகளுக்குச் செலவழித்து அவற்றின் தரத்தை மேம்படுத்துவார்கள். அப்போதுதான் அட்மிஷனுக்கு வந்தால் இனிப்புத் தரப்படும் என்ற அறிவிப்புப் பலகைகளுக்கு அவசியமில்லாமல் போகும்.
- ஞாநி

தமிழை விட எளிமையான மொழி எதுவும் இல்லை. ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகக் கருத வேண்டியதில்லை. மொழி, கலாசாரம், பண்பாடு நிறைந்த இம்மண்ணில் வாழ விரும்ப வேண்டும். தேவைக்கு ஏற்ற பணத்தை வைத்துக்கொண்டு மற்றதை சமுதாயத்துக்கு செலவிட வேண்டும். இல்லையேல் அப்பணமே வாழ்க்கையே அழித்துவிடும்
- சிவகுமார்

நாம் பல்வேறு பெரும் புலவர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்துள்ளோம். என்றாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் இருக்கும் 1,330 குறள்களில் இல்லாத கருத்துக்கள் எதுவும் இல்லை. திருக்குறள் காட்டும் நெறிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும். சமுதாய முன்னேற்றத்துக்குத் திருக்குறள் காட்டும் வாழ்க்கை முறையை உலகம் முழுவதும் பரவச் செய்யத் தமிழ் இலக்கிய படைப்பாளிகள் முன்வர வேண்டும்.
- அப்துல் கலாம்

இப்போது நானும் ஒரு கனவு காண்கிறேன். கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாத, அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கக்கூடிய, லஞ்சமும், ஊழலும் இல்லாத, தீவிரவாதத்தால் பாதிக்கப்படாத இந்தியாவைக் காணவேண்டும் எனக் கனவு காண்கிறேன்.
- அப்துல்கலாம்

- அரவிந்த்

© TamilOnline.com