....ம்....

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



....ம்....
மெளனத்துக்கு(ம்) ஓர் வரிவடிவம்

'அம்மா' என அழகுத் தமிழில் அழைக்கையில்,
ஊர்க்கோடி சிவன் கோவிலில்
ஊர்கூடி 'ஓம்..' என வாழ்த்துகையில்,
அர்ச்சிஸ்ட சவேரியாரை 'ஆமென்' என
ரோமானிய மொழியில் ஜெபிக்கையில்,
வடகரைப் பள்ளி வாசலில் அரபியில்
'ஆமின்' எனத் தொழுது முடிக்கையில்,
உதடு ஒட்டிடாத உலோபியையும்
மொழியிது, மதமிது எனப் பாராது..
ஒட்ட வைத்திடும் வலிமைமிகு ஒலி ....ம்....

என்னருமைத் தமிழின் மூன்றெழுத்தில்
இரண்டு இடங்களைப் பிடித்துக் கொள்ள
முரண்டு பிடித்து ‘ஓரம்' கட்டப்பட்ட
ஓரெழுத்து ....ம்....

....ம்....
'ழ'வைப் போல் வளைய, நெளிய,
குழையத் திணறியதாலே
நெற்றியில் குட்டு வாங்கிக்
கொண்ட இடையின எழுத்து ....ம்....

வேதகிரிப் பாட்டி இராமகாதையை
விலாவாரியாகச் சொல்லுகையில்
விரிந்த கண்ணோடு மடியிலமர்ந்து
வியந்து கேட்டிடும் விசாலாட்சியை
...ம்... கொட்ட வைத்துப் பின்,
விழிக்கதவின் அஞ்ஞானத்
தாழ்ப்பாள் அகற்றி, நித்திரைக்குக்
கைப்பிடித்து அழைத்துச் செல்லும்
தோழி எழுத்து ....ம்....

அங்கு அயர்ந்த நித்திரைக்குத்
தம்பூராச் சுருதி கூட்டி, அறையெங்கும்
‘உருவாய், அருவாய், உளதாய், இலதாய்'
வேத நாதமாய் விளங்கிடும் ஒலி எழுத்து ....ம்....

தமிழில் எந்த ஒரு வார்த்தையையும்
மெய்யெழுத்தில் துவங்கினால்....
தூக்குத் தண்டனையாம்!
யாரைய்யா சொன்னது?
தூக்கிலிடு, அந்தத் தொல்காப்பியனை!

எம் '..ம்.' எனும் மெய்யெழுத்தின்
'தசையினைத் தீ சுடினும்' ..ம்...
ஓரெழுத்தேயென்றாலும்....
....ம்.... ஒரு வார்த்தையாகலாம்!
....ம்.... ஒரு வாக்கியமும் ஆகலாம்!
....ம்....
இன்னும் கேளும்...
....ம்... ஒரு கவிதையும் ஆகலாம்!
ஏன்.... ஒரு காப்பியமே ஆகலாம்!

எப்படி... எப்படி?

அன்று என்னைக் கல்லூரிக்கு
அனுப்பும் போதெல்லாம் கந்தல் சேலைக்குள்
கவலைகளை ஒளித்துக் கொண்டு
சிரித்த முகத்தோடு “....ம்.... இதோ இருக்கு ராசா”
என்றுரைத்த கையோடு பணத்தை அம்மா
நீட்டுகையில் அந்த ....ம்.... எனும்
ஒரு வார்த்தையில் அவள் பட்ட துயரங்களை
இரத்தக் கையெழுத்திட்டு எனக்கு உரைத்திட்ட,
இலக்கணத்தில் மெய்யெழுத்தென உணர்ந்திட்ட
என்னுள் என்றும் நின்று வாழும் உயிரெழுத்து ....ம்....

பின்னர்... கண்ணுக்குள்ளே கண்ணா மூச்சியாடி
நெஞ்சுக்குள் நங்கூரமிட்ட காயத்ரியைத்
தொலைபேசியில் தொட்டுப் பேசி
கோவிலில் சந்திக்க
தொடாமல் உரையாட
அவளின் ....ம்.... எனும் சம்மத வாக்கியத்தைச்
சொல்ல வைத்திட்ட செல்ல எழுத்து ....ம்....

....ம்.... எனும்
ஐயா, அன்று நான் கேட்டேனே!
அந்த ....ம்.... எனும் காயத்ரி மந்திரம்!
எனக்கே சொந்தமான, சந்தமிகு
ஒரு விந்தைக் கவிதை, அந்தக்
கம்பனுக்கும் கைவந்திடாத
ஆனால்
'கனவு மெய்ப்படாத' ஓர்
காவியம்!

ஜனனம், மரணம்
இரண்டையும் முடித்து வைக்கும்
ஓர் இறவா எழுத்து ....ம்....

கோம்ஸ் கணபதி

© TamilOnline.com