அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடும்பங்கள் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்வதும், பண்டிகைக் காலங்களில் ஒருவர் வீட்டில் அனைவரும் சந்தித்து பெரியவர்களும், குழந்தைகளும் கொண்டாடுவதும் நன்றாக உள்ளது. ஆன்மீகத்திலும் ஈடுபாடு வைத்து அனைவரும் மாதமாதம் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் போன்றவை செய்கின்றனர்.
பள்ளிப் பாடத்திட்டம் சுலபமாக இருப்பதனால் சிறுவயதில் நீச்சல், கூடைப்பந்து, டென்னிஸ், பேஸ்பால் முதலிய விளையாட்டுக்களையும், தமிழ், நாட்டியம், சங்கீதம் முதலியவைகளையும் கற்றுச் சிறந்து விளங்குகின்றனர். பெற்றோர்களும் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் அழைத்துச் சென்று கற்பிக்கின்றனர். நான்காம் வகுப்பில் படிக்கும் சிறார்கள் சுயமாகக் கதை, கட்டுரை எழுதும் அளவிற்குச் சிறந்து விளங்குகின்றனர். பெற்றோரை விட்டு வந்துவிட்டோம் என்ற ஆதங்கம், நம்மோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் காரணமாக அவர்களை வரவழைத்து அனைத்து இடங்களையும் அழைத்துச் சென்று காட்டுவதில் இளைய சமுதாயத்தினர் ஆர்வமாக உள்ளனர். இந்தியாவில் எவையெல்லாம் குறைந்துள்ளதோ அவையெல்லாம் கடல்கடந்து வந்து நிறைவேறி உள்ளது. இளைய சமுதாயம் இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
ஒரு குழந்தைக்குத் தாயான என் மகள் MITயில் படித்தாள். அவளது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்கான நேரம் பணியாற்றும் இடத்தில் கிடைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த அளவு சலுகைகள் இந்தியாவில் சாத்தியம் இல்லை. ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா?' என்பதைவிட இருக்கும் இடத்தை சொர்க்கமாக மாற்றிக்கொள்வதும் நம் கையில்தானே உள்ளது. அனைத்துக்கும் மேலாகத் தமிழுக்குச் சேவை செய்யும் தமிழ் இதழ் ‘தென்றல்'. அனைவரும் விரும்பும் வகையில் ஜனரஞ்சகமான கதைகள், கட்டுரைகள், தமிழ் அறிஞர்களின் பேட்டிகள், கவிதைகள், நன்கு படிக்கும் மாணவ, மாணவியரின் பேட்டிகள் - அதேபோன்று நாமும் படிக்க வேண்டும் என்று ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது.
நிறையச் சொல்லலாம்.
ஜெயலக்ஷ்மி சேஷாத்ரி, கனெக்டிகட் |