இரக்கம்
“அம்மா காரில ஏறிக்கோ. உன்னையும் பூமாவையும் பாட்டுக் கிளாஸ்ல விட்டிடேறன். வழியில அஞ்சு நிமிஷம் எனக்கு மாலுக்கு போகணும்” என்றாள் சுஜாதா.

“பூமா எங்க காணும்?” என்றாள் சுஜாதாவின் தாய்.

“தலயக் காய வெச்சிண்டு இருக்கா. இதோ வந்திடுவா.”

“நானே கேக்கணும்னு நெனச்சேன். ஏன் இப்டி அவ தலையில பச்சை, ரோஸுன்னு கலர்க் கோடு அடிச்சிண்டு இருக்கா?”

“அதுதான் ஸ்டைலாம் இப்ப.”

“நீயும் அவ வயசில கோண வகிடு எடுத்துண்டு கொரங்குக் கொண்டை போட்டிண்டு கூத்தடிச்சிருக்க. இப்ப உம் பொண்ணு உன்னைத் தூக்கி அடிக்கறா. ஆமா சமயல் அறையில எதுக்கு அவளை சட்னி அரைக்கச் சொன்னே?”

“அம்மா அது சட்னியில்ல. அவகேடொ, பால், பெப்பர், வெள்ளரிக்காயை அரைச்சு மூஞ்சியில தடவிண்டா முகம் பளிச்சினு இருக்கும்னு அழகுக்குறிப்பு படிச்சாளாம். அவேள அரைச்சு வெச்சிருக்கா. சமையலுக்கு வாங்கறைதவிட அவள் அலங்காரத்துக்குதான் அதிகமா கறிகாய் வாங்க வேண்டியிருக்கு. எலிமெண்டரி ஸ்கூல்ல ஒழுங்காதான் இருந்தா. இப்ப ஜூனியர் ஹைஸ்கூல் வந்ததும் போடற ஆட்டம் தாங்கல. கேட்டாக் கோபம் கோபமா வரது”

##Caption##பூமா வந்து காரில் ஏறிக்கொள்ள கார் கிளம்பியது. வழியில் மாலில் நிறுத்தி உள்ளே போனாள் சுஜாதா. ஐந்து நிமிடம் கழிந்தது.

“என்னடி உங்கம்மா மாலுக்குள்ள போனவ வெளிய வரல” என்றாள் பாட்டி.

“ஏதாவது புதிசா ஸ்வெட்டர் சேல் போட்டிருப்பாங்க. அம்மா அதில என் சைசு இருக்கானு தேடிட்டு இருப்பா. நான் போய்ப் பார்த்திட்டு வரவா?”

“வேண்டாம். என்னால தனியா இங்க இருக்க முடியாது. இந்த எடத்தில காரை நிறுத்தக்கூடாதாம். உடனே வந்துடேறன்னு போனா..”

“அம்மாகிட்ட ஸ்பெகட்டி வாங்கச் சொல்ல மறந்திட்டேன்”

“அப்படின்னா?”

“நூடுல்ஸ் பாட்டி. வென்னீர்ல போட்டு கொதிக்க வெச்சு டொமாட்டோ ஸாஸ் போட்டுச் சாப்பிடணும். உனக்குப் பிடிக்குமா?”

“வேண்டாம்மா. அன்னிக்கு உங்கம்மா உனக்கு பண்ணிக் கொடுத்ததைப் பார்த்தேனே! சே. எப்படித்தான் அதையெல்லாம் விரும்பித் திங்கறியோ!”

“பாட்டி ஐ லவ் இட்”

“உன் வயசில நான் ரசம், சாம்பார் வப்பேன். இட்லி, தோசை அரைப்பேன். உனக்கு ரசம் வக்கச் சொல்லித் தரவா. ரொம்ப ஈஸிதான்”

“நோ கிராண்ட்மா. ஐ ஹேட் ரசம்.”

அவர்கள் கார் முன்னால் ஒரு வண்டியைத் தள்ளிக் கொண்டு ஒரு வெள்ளைக்காரன் போனான். வண்டியில் மூட்டையாகத் துணிகள் இருந்தன. அவன் உடல் அழுக்கு படிந்து தலையில் முடி சடையாக இருந்தது. சட்டை கிழிந்திருந்தது.

“யாருடி இவன். பார்த்தா பிச்சைக்காரன் மாதிரி?”

##Caption## “ஹோம்லஸ். வீடு கிடையாது. தெருவுக்கு வந்துட்டான். யாராவது காசு போட்டா வாங்கிப்பான். பாவம் புவர் ஃபெலா” என்று சொன்னவள், காரின் பெட்டியில் இருந்த ஒரு டப்பாவில் ஏதோ தேடினாள். இருபத்தைந்து செண்ட் காசு ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு “அவனுக்கு போட்டுட்டு வரேன்” என்றாள்.

“வேணாண்டி. அவன் யாரோ என்னேவா. பயம்மா இருக்கு. அம்மா வரட்டும். அப்புறமா தர்மம் பண்ணு”

“இல்ல. பாட்டி டோண்ட் ஒரி. இதோ வந்துடேறன்” என்று வெளியே ஓடினாள்.

ஒரு நிமிஷத்தில் சுஜாதா வந்துவிட்டாள்.

“அம்மா, பூமா அங்க எங்க போறா, நீ அனுப்பினயா ?” என்று கேட்டபடி காருக்குள் நுழைந்தாள்.

“சொன்னாக் கேட்காம இந்தப் பொண்ணு பிச்சைக்காரனுக்குக் காசு போடேறன்னு போயிருக்கு” என்று அவள் போன திக்கைக் காட்டினாள்.

பூமா அந்த மனிதேனாடு பேசுவது தெரிந்தது. சற்று நேரத்தில் வாடிய முகத்தோடு திரும்பி வந்து காரில் ஏறிக்கொண்டாள் அவள்.

“காசு கொடுத்தாயா? அவனுக்கு சந்தோஷமா?” என்றாள் பூமாவின் தாய்.

“ம்... ஹூம்.. அவன் என்ன பண்ணினான் தெரியுமா?”

“ஏன், ஏன்... என்னாச்சு?”

“நான் ஒரு குவார்ட்டர் காசை அவனுக்குக் குடுக்கேறன். அதை வாங்கிக்காம என்னையே முறைச்சு முறைச்சுப் பார்த்தான். ‘எனக்குதான் வீடு இல்ல. நெனச்ச போது குளிக்க முடியல. உனக்கு என்னாச்சு. பார்த்தா படிக்கற பொண்ணா இருக்க. தலைய இப்படியா கலரடிச்சு அசிங்கமா வெச்சிக்கிறது? நல்லதா ஷாம்பூ வாங்கித் தேச்சுத் தலைய சுத்தமா வெச்சிக்க'னு சொல்லி தன் பையிலேருந்து ஒரு டாலர் நோட்டை எடுத்து எனக்குக் கொடுத்தான்”

சிரிப்பை அடக்கிக் கொண்டு சுஜாதா கேட்டாள், “நான் சொன்ன போது உனக்குக் கோவம் வந்துது. இது ஜூனியர் ஹை ஹேர்ஸ்டைல்னு சொன்னே. இப்போ இது அவனுக்கே சகிக்கலன்னு சொன்னப்புறமாவது தெரிஞ்சிண்டயா?”

பாட்டி பூமாவை அணைத்துக் கொண்டாள்.

“பாவம் குழந்தையப் பரிகாசம் பண்ணாத. நான் வீட்டுக்குப் போனதும் அவளுக்குத் தலையில எண்ணெய் தேச்சு, சீக்காப்பொடி, போட்டு சுத்தம் பண்ணிவிடேறன். புத்திமதி யார் சொன்னா என்ன? நல்லதுக்குதான்னு நாம எடுத்துக்கணும்” என்றாள் பாசத்துடன்.

எல்லே சுவாமிநாதன்,
லாஸ் ஏஞ்சலஸ்

© TamilOnline.com