சமுகவிதிகள்
அன்புள்ள சிநேகிதியே

நானும் என் கணவரும் மூன்று ஆண்டுகளாக வசிக்கும் இந்த ஊரில் அதிகம் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லை. சிறிது நாள் முன்பு எங்கள் குடும்ப நண்பரின் பெண் திடீரென்று எனக்கு ·போன் செய்தாள். தன் கணவருடன் எங்கள் ஊரிலே வசித்துக் கொண்டிருப்பதாகவும், என் நம்பரை எப்படியோ கண்டுபிடித்து என்னுடன் தொடர்பு கொண்டதாகவும் கூறினாள். எனக்கு மிகவும் சந்தோஷம். அவளைப் பார்த்து நிறைய வருடம் ஆகியிருக்கும். உடனே விருந்துக்குக் கூப்பிட்டேன். நல்ல ஜாலியான தம்பதிகள். அப்படிச் சிரித்துப் பொழுதைக் கழித்தோம். கணவன்மார் இருவர் ரொம்ப தோஸ்த் ஆகிவிட்டார்கள். அடுத்த மூன்று வார இறுதியின் போதும் நாங்கள் நால்வரும் காரில் ஒரு பெரிய டிரிப் அடிப்பதற்கெல்லாம் திட்டமிட்டோம்.

விருந்தெல்லாம் முடிந்து அவர்கள் போனபிறகு என் கணவர் ஒரு குண்டைத் தூக்கி போட்டார். ''அவள் எனக்குச் சித்தப்பா பெண். ஒன்றுவிட்ட முறை யென்றாலும் வீட்டில் பெரிய கலாட்டா. இரண்டு குடும்பங்களும் எங்களை உள்ளே சேர்க்கவில்லை. சில நண்பர்களும் ஒதுக்கி விட்டார்கள்'' என்று அந்தப் பையன் சொன்னானாம்.

என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. என்னிடம் சொல்லவில்லை என்று அந்தப் பெண்ணிடம் கோபம் வேறு. ''அவர்கள் உறவைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? நன்றாகப் பழகுகிறார்கள். எனக்கு அவனை ரொம்பப் பிடித்திருக்கிறது. I am going ahead with this tirp" என்று என் கணவர் சொல்கிறார். எங்கள் இருவருக்கும் இதனால் சண்டை வேறு. நீங்களே சொல்லுங்கள் இது நியாயமா?

அன்புள்ள சிநேகிதியே

நான் இந்த பேதத்திலும், வாதத்திலும் கலந்து கொள்வது எனக்கு ஏற்பட்ட வினையா அல்லது வாய்ப்பா என்று புரியாத நிலையில் இருக்கிறேன். சமூகக் கோட்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத உறவுமுறை என்று தெரிந்தும், அவர்கள் இந்த பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால், காதல் வேகத்தில் தங்களுக்கே ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு தைரியமாக முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. நம் கலாசாரத்தில், நம் சமூகத்தில் சித்தப்பா/பெரியப்பா மக்களை அண்ணன், தம்பி, தங்கை முறையாகக் கருதுகிறோம். அத்தை மகன்/மாமன் மகள்/ஏன் சொந்த மாமனையே முறை மாப்பிள்ளையாகப் பார்ப்பது தவறில்லை. ஆனால் வேறு மதத்தினருக்கு அத்தை/மாமன் மக்களைச் சகோதர சகோதரிகளாகவும் சித்தப்பா மக்களை முறைப்பெண் மாப்பிள்ளையாகவும் தோன்றும். இந்த நாட்டில் சட்டப்படி எல்லா உறவும் ஒன்றுதான். உறவில் திருமணம் செய்து கொள்வது குற்றம்.

எல்லாமே நம் பார்வையில்தான் இருக்கிறது. இதெல்லாம் அந்தந்தக் கலாசாரத்தைச் சார்ந்து இருக்கும் சமுதாய விதிகள். ஒரு மனைவி இருக்க இன்னொரு மனைவிக்குச் சட்டத்தோடு, சமுதாய விதியும் இருக்கிறது. ஆனாலும் அதை மீறியவர்களுக்கும் எப்படியோ சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. நம் கலாசாரத்தில் ஜாதி, மத, இனப்பிரிவுகளை ஒட்டிச் சமூக விதிகள் உண்டு. ஆனால், சமூக அங்கீகாரம் மெல்லக் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. இதேபோலத்தான் விதவை மறுமணம், விவகாரத்து மறுமணம், குறிப்பாகப் பெண்கள் செய்து கொண்டால், stigma இருக்கத்தான் செய்தது. ஆனால் தனி மனித சுதந்திர எண்ணங்கள்/ போக்குகளுக்கு (சுய அழிவைத் தேடிக் கொள்ளாத செயல்களுக்கு) கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சமூகநோக்கில் பார்த்தால் உங்கள் தோழியின் செயல் முறையல்ல. மருத்துவ ரீதியில் பார்த்தாலும் சரியல்ல. ஆனால் தனி மனித மனத்தின் (அதுவும் காதல் பொங்கி வந்து கொண்டிருக்கும்) போக்கில் பார்த்தால், எதற்கு என்ன தடையை, யார் போட்டு, எங்கே என்ன செய்ய முடியும்? It is all in the mind. என்னால் இங்கே நியாயம்/அநியாயம் சொல்லி ஒரு தராசில் அதை எடை போட முடியாது. ஒவ்வொரு வருக்கும் எடைக்கல் வேறு பரிமாணத்தில் அல்லவா இருக்கும்.

என் கருத்துக்களை மட்டும் சொல்லி விடுகிறேன்.

இங்கே நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. மீண்டும் சகோதரத்துவத்தைக் கொண்டு வர முடியாது. கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டார்கள்.

இந்த அதிர்ச்சியை ஜீரணித்து நட்பை வளர்த்துக் கொள்ளும் சக்தி உங்களிடம் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் மனம் வெறுப்பும், கசப்பும் உள்ள நிறைபாண்டமாக இருக்கும்.

நம் வாழ்க்கை முறையையோ, லட்சியங்களையோ, அவர்கள் உறவு முறை பாதிக்கும் என்று நினைத்தால் தொடர்பை விட்டுவிடலாம். வளர்க்கும் என்று நினைத்தால் விட்டுக் கொடுக்கலாம்.

வாழ்த்துக்கள்

சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com