ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Aravind Swaminathan
குழந்தைகளே, பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டாச்சா? ஜாலிதான் போங்க. ஒரு கதை சொல்றேன், கேளுங்க!
ஒரு ஊரில் ஒரு பணக்கார ஜமீன்தார் வாழ்ந்து வந்தார். ஆனால் ஏழைகளுக்கு உதவ மாட்டார். அவர்களுக்கு நிறையக் கடன் கொடுப்பார். அதற்கு பதிலாக அவர்களது சொத்துக்களை ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்வார். இப்படியே நிறையப் பணம் சம்பாதித்து விட்டார். ஜமீன்தாரிடம் முனியன் என்பவன் வேலை பார்த்து வந்தான். அவன் ஒரு அப்பாவி மட்டுமல்ல; முட்டாளும் கூட.
ஒருநாள்... பக்கத்து நகரத்தில் நிறைய வீடு, மனைகள் விற்பனைக்கு வருவதை அறிந்தார் ஜமீன்தார். அதை அப்படியே மொத்தமாக வாங்கிப் போட நினைத்தார். அதனால் தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் ஒரு கைப்பையில் அடுக்கிக் கொண்டார். முனியனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினார். நகரத்தை அடைந்தவர் மனை விற்பனை செய்யும் இடத்திற்குச் சென்று விலையை விசாரித்தார். விலை மிகவும் அதிகமாக இருந்தது மட்டுமல்லாமல் அனைத்திற்கும் வேறு யாரோ ஒருவர் முன்பணம் கொடுத்து விட்டதையும் அறிந்தார். சோகத்துடன் ஊருக்குப் புறப்பட்டார்.
அவர் புறப்படும் போது இரவாகி விட்டது. மேலும் அது ஒரு காட்டுப்பாதை. திருடர் பயம் வேறு இருந்தது. கையில் நிறையப் பணம் இருந்ததால் தொடர்ந்து பயணத்தைத் தொடர ஜமீன்தார் அஞ்சினார். காட்டுப்பாதையில் ஒரு பாழடைந்த மண்டபம் காணப்பட்டது. அதில் தங்க முடிவு செய்த அவர், முனியனை அழைத்து, “முனியா, நீ மண்டபத்தின் முன்னால் படுத்துக்கொள். திருடர்கள் யாராவது வந்தால் என்னைக் காண்பித்துக் கொடுத்து விடாதே! இந்த நூறு பணத்தை அவர்களிடம் கொடுத்து எப்படியாவது தப்பித்து விடு” என்று கூறிவிட்டு மண்டபத்தின் பின்புறம் சென்று படுத்துக்கொண்டார்.
சிலமணி நேரம் சென்றது. அங்கே வந்த திருடர் கூட்டம் முனியனைக் கண்டது. அவனை அடித்து உதைத்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டது. திடீரென்று திருடர் தலைவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அவன் தன் கூட்டாளியிடம், “இவனோ பார்க்கப் பரதேசி போல இருக்கிறான், இவனிடம் எப்படி நூறு பணம் வந்திருக்க முடியும்? அதுவும் இந்தப் பணம் செல்லுமோ செல்லாதோ என்று வேறு எனக்குச் சந்தேகமாக இருக்கிறது” என்றான்.
அதைக் கேட்ட முனியனுக்குக் கோபம் வந்து விட்டது. “சரிதான், நான் பரதேசியாவே இருந்துட்டுப் போறேன். ஆனா. பணம் செல்லுமா செல்லாதாங்கறத, என்கிட்ட பணத்தைக் கொடுத்துட்டு, மண்டபத்துக்குப் பின்னால பணப்பையோட படுத்திக்கிட்டிருக்காரே ஜமீன்தார், அவரைக் கேளுங்க. சொல்லுவார்” என்றான் ஆத்திரத்துடன். திருடர்கள் வேகமாகச் சென்று பின்னால் பார்த்தனர். அங்கே ஜமீன்தார் பணப்பையை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். திருடர்கள் அவரை அடித்து உதைத்ததுடன், பணப்பையையும் பிடுங்கிக் கொண்டு துரத்திவிட்டனர்.
சிலர் சொல்கிறார்கள், “மக்களை ஏமாற்றிச் சம்பாதித்த பணம், திருடர்கள் கைக்குப் போய்விட்டது” என்று. இன்னும் சிலரோ “முட்டாளைத் துணைக்கு வைத்துக் கொண்டதால்தான் நஷ்டம் வந்தது” என்கிறார்கள். இரண்டுமே சரிதானே, என்ன சொல்கிறீர்கள்!
சரி, குழந்தைகளே! அடுத்த மாதம் சந்திக்கலாம்.
- சுப்புத்தாத்தா |