மைக்கேல் ஜாக்ஸன்
பிரபல பாடகரும் பாப் இசைச் சக்ரவர்த்தியுமான மைக்கேல் ஜாக்ஸன் (50) மாரடைப்பால் லாஸ் ஏஞ்சலஸில் காலமானார்.

ஆகஸ்ட் 29, 1958 அன்று இண்டியானாவில் கருப்பர் இனத்தில் பிறந்த மைக்கேல் ஜாக்சன், தன் இளவயதிலேயே இசைத் துறையில் கால் பதித்தார். வெற்றிகரமான பாப் பாடகராக வலம் வந்த அவர், 'தி ஜாக்ஸன் 5' எனும் இசைக்குழுவைத் தொடங்கி நடத்தினார். அதன்மூலம் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றார். 'ஆஃப் தி வால்', 'த்ரில்லர்', 'டேஞ்சரஸ்', 'பில்லி ஜீன்' ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. குறிப்பாக ஜாக்ஸனின் 'த்ரில்லர்' ஆல்பம், 104 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகிச் சாதனை படைத்தது. உலக அளவில் இதுவரை 750 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகியுள்ளன என்று ஒரு கணக்குச் சொல்கிறது. இதன் மூலம் கின்னஸ் புத்தக வெளியீட்டாளர்களால் 'Most Successful Entertainer of All Time' என்ற பாராட்டையும் பெற்றார். ஒரே சமயத்தில் 8 கிராமி அவார்டுகள் உட்பட மொத்தம் 13 கிராமி அவார்டுகளைப் பெற்றிருப்பதுடன் புகழ்பெற்ற பல்வேறு விருதுகளையும் மைக்கேல் ஜாக்ஸன் பெற்றிருக்கிறார். அவரது நிலவு நடை (moon walking) மறக்க முடியாத ஒன்று.

நாம் பிரபு தேவாவை எவ்வளவுதான் வியந்தாலும் அவருக்குள்ளிருக்கும் மைக்கேல் ஜாக்ஸனைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

பாடகர், டான்ஸர் என்பதைக் கடந்து மனித நேயமிக்கவராகவும், சமூக சேவகராகவும் விளங்கினார் ஜாக்ஸன். 1992ம் ஆண்டு ஹீல் த வேர்ல்டு எனும் அறக்கட்டளையைத் துவங்கினார். வருமானத்தில் பெரும் பகுதியைச் சமூகசேவைக்குச் செலவழித்தார். அதே சமயம் தனது முகத்தை பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்ட ஜாக்ஸன், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கிப் பரபரப்பை ஏற்படுத்தினார். தன் குழந்தையைக் கீழே போடுவது போல ஜன்னலுக்கு வெளியே பிடித்தது, சிறாரைத் தவறான வழியில் தொட்டது என்று பல சர்ச்சைகளும் வழக்குகளும் இவரைத் தொடர்ந்தன.

ஆகஸ்ட் மாதம் முதல் இசைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த மைக்கேல் ஜாக்ஸன் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது.

© TamilOnline.com