கமலா சுரையா
சாகித்ய அகாதமி விருது உட்படப் பல்வேறு விருதுகள் பெற்ற ஆங்கில, மலையாள எழுத்தாளர் கமலா சுரையா என்ற கமலா தாஸ் (75) புனேயில் காலமானார். 1934ல், கேரள மாநிலத்தின் மலபாரிலுள்ள புன்னையூர்க்குளத்தில் பிறந்த கமலா தாஸ் 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாள இலக்கியத்தில் எழுதிவந்தார். தமது 65-வது வயதில் இஸ்லாத்துக்கு மாறி 'கமலா சுரையா' என்று பெயரை மாற்றிக் கொண்டார்.

ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் நல்ல பல கவிதைகளைப் படைத்திருக்கும் கமலா, சர்ச்சைக்குரிய எண்ணற்ற பல சிறுகதைகளையும் படைத்துள்ளார். இவர் எழுதிய 'Summer in Culcutta', 'The Descendents', 'The Old Playhouse and Other Poems' போன்ற கவிதைத் தொகுப்புகள் மிகவும் புகழ் பெற்றவை. 'The Sirens' என்ற கவிதைத் தொகுப்பு சாஹித்ய அகாதமி விருதோடு ஆசியக் கவிதை விருதினையும் பெற்றது. பாலுறவு குறித்த விஷயங்களை தம்முடைய படைப்புகளில் மூடாக்கின்றி எழுதிப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டவர் கமலா. 'என்ட கதா' என்ற தலைப்பில் மலையாளத்தில் எழுதிய சுயசரிதையில் பெண்களுக்கு எதிராக ஆணாகதிக்கச் சமூகம் செய்யும் துரோகத்தையும், தமது திருமண உறவில் ஏற்பட்டிருந்த கசப்புகளையும் விரிவாகப் பதிவு செய்திருந்தார். அந்நூல் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரபலமானது.

கேரள நவீனப் புனைகதை இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் கமலா சுரையாவுக்குத் தென்றல் தனது அஞ்சலிகளைச் செலுத்துகிறது.

© TamilOnline.com