நான் சிறுமியாக இருந்தபோது குதுப் பகுதியிலுள்ள சீதாராம் பஜாரில் குடி இருந்தேன். அது முஸ்லீம்களும் ஹிந்துக்களும் வசிக்கும் பகுதிகளுக்கு இடையில் உள்ளது. 1948ல் நான் நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோது இங்குக் குடியமர்ந்தோம். எனது நான்காவது வயதிலிருந்து அந்தப் பகுதி பற்றிய நினைவுகள் இன்றும் என் மனத்தில் உள்ளன. அங்கிருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறிவிட்ட பல முஸ்லீம் குடும்பங்களின் சொத்துக்கள் எங்கள் தெருவில் இருந்தன. ஆனாலும் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லீம்கள் இங்கேயே தங்கி விட்டனர். அந்தச் சொத்துக்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி வந்த குடும்பத்தினருக்குப் பாதுகாவல் துறையினரால் ஒதுக்கப்பட்டது. அங்கே ஒரு நவாபுக்குச் சொந்தமான மாளிகை இருந்தது. அந்த நவாப் வம்ச முன்னோர் ஒருவரின் சமாதியும் இருந்தது. குழந்தைகளாக இருந்த நாங்கள் அந்தக் கல்லறையைச் சுற்றி ஓடி விளையாடுவோம். அதற்குள் என்ன இருக்கும் என்று நாங்கள் யோசிப்பதுண்டு. இதன் உள்ளே இருப்பவர் இரவில் எழுந்து வந்தால் எப்படி இருக்கும் என்று ஆச்சரியம் அடைவோம். சிலநாட்களில் அந்த மாளிகையின் ஒரு பகுதி பஞ்சாபிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஐந்து பஞ்சாபிக் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டது.
பிரிவினைக்குப் பிறகு, மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான சிறுசிறு பொருள்களுக்கும் அலைந்து கொண்டிருந்தது ##Caption##எனக்கு நினைவில் இருக்கிறது. வாழ்க்கை மிகக் கடினமாக இருந்தது. அநேகமாக பஞ்சாபிக் குடும்பங்கள், பழைய காரின் டயர்கள், இயந்திரப்பகுதிகள் ஆகியவற்றை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். சீக்கிய இளைஞர்கள் இங்கிலாந்துக்கும் கனடாவுக்கும் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆக்ஸ்போர்டுக்கு அருகிலுள்ள ஃபோர்ட் கார் கம்பெனியின் கிளைத் தொழிற்சாலையில் மட்டும் ஒரு சமயத்தில் பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து சென்ற 27 ஆயிரம் பேர் வேலையில் இருந்தனர். அந்தக் காலத்தில் அகதிகள் வறுமையுடன் போராடிக் கொண்டிருந்தனர்.
வறுமையும், கஷ்டமும் இருந்ததால் அங்கே அதிகக் கேளிக்கைகளுக்கு இடமில்லை. ஆயினும் ஞாயிற்றுக் கிழமைகளில் நல்ல ஆடைகள் அணிந்து கொண்டு வெளியில் சென்று உலாவிவிட்டு உணவகங்களில் சாப்பிட்டுவிட்டுத் திரும்புவதைக் கவனித்திருக்கிறேன். அவர்கள் வழக்கமாக சாப்பிடச் செல்லும் இடம், பாதை ஓரமுள்ள (தாபா) காகே-த ஹோட்டல்தான். இது கன்னாட் பிளேசில் மின்டோ சாலையின் ஒரு மூலையில் ஒரு சிறிய கொட்டகையில் இருந்தது. நடைபாதையில் பெஞ்சிலும் கயிற்றுக் கட்டிலிலும் உட்கார்ந்துதான் இந்த உணவை உண்ண வேண்டும். எங்கள் அண்டை, அயலில் வசிக்கும் சீக்கியர்கள் எங்களுக்கு இந்த உணவகத்தை அறிமுகப்படுத்தினார்கள். என் தாயார் விருப்பமின்றியே காகே-தாவில் சாப்பிடுவார். தந்தையும் குழந்தைகளாகிய நாங்களும் அடிக்கடி பஞ்சாபி உணவு அருந்த அங்குச் செல்லத் தொடங்கினோம். வாட்ட சாட்டமான உடல்வாகு கொண்ட உணவக உரிமையாளர் தானே சமைப்பதுடன், அனைத்தையும் மேற்பார்வையிட்டு வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்துவதில் கவனமாக இருப்பார். இதுதான் கன்னாட்பிளேசில் உருவான முதல் தாபா. காகே-த தவிர வேறு எங்கும் இப்படி ருசியான உணவை நான் உண்டதில்லை.
பல ஆண்டுகள் கழித்து ஒருநாள் நானும் எனது தம்பியும் 'கின்ஸா' என்ற சீன உணவகத்தைத் தேடி கன்னாட் பிளேசில் நடந்து கொண்டிருந்தோம். எதிர்பாராதவிதமாக அது காகே-த உணவகத்துக்கு எதிரிலேயே இருப்பதைக் கண்டோம். அது எங்களுடைய குழந்தைப் பருவ நினைவுகளைத் துண்டியது. பழைய நினைவுகளின் நிமித்தம் காகே-தவில் உணவருந்த முடிவு செய்தோம்.
உணவின்போது எங்களுக்குத் தந்தூரி சிக்கன், ஷீக் கபாப், கரும்பருப்பு, பச்சைக் காய்கறிக் கூட்டுடன் சூடான ரொட்டிகளைப் பரிமாறினர். தந்தூரி மிக மென்மையாகவும், ஷீக் கபாப் மிருதுவாகச் சாறு நிறைந்ததாகவும் இருந்தது. அங்கே வலம்வந்து கொண்டிருந்த உரிமையாளரைக் காணவில்லை. அந்த கனவான் எங்கே என்று பரிமாறுகிறவரைக் கேட்டேன். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் காலமாகி விட்தாகவும், உணவகம் அவரது மகன் கேப்டன் அருண் சோப்ராவின் பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போலவே உணவு சுவையாகவும் மலிவாகவும் இருந்தது. உரிமையாளரின் மகனைச் சந்தித்து அவருடன் பேசவும் பாராட்டவும் என் மனம் விரும்பியது. ஒரு செய்தியுடன் எனது முகவரி அட்டையைக் கொடுத்து விட்டு வந்தேன்.
(தொடரும்)
கரியாலி ஐ.ஏ.எஸ். தமிழில் திருவைகாவூர் கோ.பிச்சை |